அ.தி.மு.க.- பாஜக உடனான கூட்டணியை சமீபத்தில் முறித்துக் கொண்டதைப் பற்றியும் மற்றும் பல அரசியல் நிகழ்வுகள் குறித்தும் ஆவணப்பட இயக்குநரும், திரைப்பட விமர்சகருமான இராஜாகம்பீரன் தனது கருத்துகளை பகிர்ந்து கொள்கிறார்.
அ.தி.மு.க. என்பது திராவிட இயக்கத்தின் தொடர்ச்சியாகத் தான் பார்க்கிறேன். ஏனென்றால், தி.மு.க.விற்கு இருக்கும் அனைத்து கொள்கைகளும் இவர்களுக்கும் இருக்கிறது. ஏன், கலைஞர் அமைச்சரவையில் வாய்ப்பு கிடைக்காத நாவலர் நெடுஞ்செழியன், காளிமுத்து, ராஜாராம் போன்ற ஆளுமைகள் எம்.ஜி.ஆரின் பின் சென்றனர். ஆக, அ.தி.மு.க.வும் பெரிய ஆளுமைகள் கொண்ட கட்சியாக இருந்து பின் கழுதை தேய்ந்து கட்டெறும்பான நிலைக்கு வந்துவிட்டனர்.
இதன் தொடர்ச்சியாக, ஜெயலலிதா போன்றோர் கட்சியின் கொள்கைகளை நீர்த்துப் போகச் செய்தாலும் காலத்தின் கட்டாயத்தில் சில திராவிடக் கருத்துகளை, இட ஒதுக்கீடு விசயங்களை தூக்கிப்பிடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. உதாரணத்திற்கு, சென்னை முஸ்லிம் மாநாட்டில் அவர் பேசுகையில், " நான் ஒரு வரலாற்றுத் தவறை செய்துவிட்டேன்... இனி வாழ்நாளிலே பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கப் போவதில்லை" என தனது வழக்கத்தை மீறி பகிரங்கமாக பேசினார். இந்தளவுக்கு பா.ஜ.க.வை அ.தி.மு.க. விரட்டியுள்ளது. தற்போது கொள்ளைப் புறத்தில் இருந்து வந்து பதவி ஏற்றதால், அமலாக்கத் துறைக்கு பயந்தனர். ஆனால், இன்றைக்கு எது நடந்தாலும் எதிர்கொள்வோம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு, தொகுதிப் பங்கீடும், அ.தி.மு.க.விற்கு வேண்டாத சில கட்சிகளுக்கு பா.ஜ.க. எம்.பி. சீட்கள் கேட்டது தான் காரணம். மாறாக, இதனை அண்ணாவை விமர்சித்த பிரச்சனையாக மாற்றுகிறார்கள்.
கொள்கையும் கோட்பாடும் அ.தி.மு.க.வினர்களுக்கு இருந்ததில்லை. எனவே, இரட்டை இலையையும், தங்களின் சொத்துகளை பாதுகாக்கவும் அஞ்சுகின்றனர். ஒருவேளை மக்களவை தேர்தலில் பா.ஜ.க.கேட்கும் இடத்தை கொடுத்தால், இதே நிலை சரிக்கு சமமாக சட்டமன்ற தேர்தலிலும் வரும் என்று தான் யோசிக்கிறது. அண்ணாமலை நினைக்கிறார், மோடியை பிரதமராக அ.தி.மு.க.ஏற்க வேண்டும் ஆனால், எடப்பாடி முதல்வர் என அவர் ஏற்கவில்லை.
முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்யும் அளவிற்கு பா.ஜ.க. வலிமையுடன் இருக்கிறதா? ஆதரவாளர்கள் உள்ளனரா? வாக்கு வங்கி உண்டா? என்றும் பார்க்க வேண்டும். அதிலும், சமீபத்தில் சென்ற நடைப்பயணம் ஒரு சொகுசு பயணம் தான். அவர்களை அரசியல் கட்சி என்று கூட தமிழக மக்கள் ஏற்கவில்லை. தற்போது, இ.ந்.தி.யா. கூட்டணி மத்தியில் வலிமை பெற்றுவருவதால், இனி பா.ஜ.க.வை தூக்கி சுமக்க வேண்டாம் என்று அ.தி.மு.க. முடிவெடுத்துள்ளது. தொடர்ந்து, மக்கள் மத்தியிலும் அண்ணாமலைக்கு செல்வாக்கு இல்லை என்பதும் அவர்களின் அரசியல் நீர்த்துப்போய்விட்டது என்பதாலும் கூட்டணியை அ.தி.மு.க. முறித்துள்ளது. எனவே, தான் இந்தியா விடுதலை பெற்றதைப் போல, செப்டம்பர் 25ம் தேதியை அ.தி.மு.க. கொண்டாடுகிறது. தொண்டர்களும் இதனைத் தான் விரும்பினார்கள். அவர்கள் பாஜகவை சுமக்க விரும்பியதில்லை. மேலும், எடப்பாடி அவர்களும் தனது வாழ்க்கையில் இது போன்று ஒரு வரலாற்று முடிவை எடுத்து வைத்துள்ளார்.
அண்ணா என்ற ஆளுமையை அடிப்படையாக வைத்து வளர்ந்தது தான் அ.தி.மு.க. எச்.ராஜா வா இக்கட்சியை தோற்றுவித்தார். பாஜக எப்படி பாபர் மசூதியை உடைத்தார்களோ, அதேபோல் அதிமுகவை உடைத்தனர். மறுபடியும் அவர்களே சேர்க்கிறேன் என்று சொல்கிறார்கள். இந்த நிலையில் அ.தி.மு.க. விலகியது, கட்சியை காப்பாற்றும் நல்ல முடிவாக பார்க்கிறேன். அதேசமயம், எப்படி சசிகலா காலில் விழுந்து முதல்வராகி, பின்னர் அவரையே அரசியலில் நுழையவிடாமல் செய்தாரோ, பா.ஜ.க.வையும் தமிழ்நாட்டில் இருந்து நீக்குவார்.
வட மாநிலங்களில் நிகழ்த்துவது போல மதக் கலவரங்கள் எதுவும் தமிழகத்தில் நடைபெறுவதில்லை. இதை உணர்ந்த அண்ணாமலையால் எந்த முன்னேற்றத்தையும் தமிழகத்தில் செய்ய இயலவில்லை. அதனால், தான் பாஜகவை இங்கு எப்பொழுதும் நோட்டாவிற்கு கீழே வைத்துள்ளனர். எனவே, அ.தி.மு.க. செய்த பாவங்களை கழுவும் வாய்ப்பாக இந்த முறிவை பார்க்க வேண்டும். இதன் கூட்டணி கட்சிகளும் இவர்களுடன் தான் தேர்தலை சந்திப்பார்கள். ஏனென்றால், அ.தி.மு.க. இன்றளவும் கொள்கை இல்லை என்றாலும் தனக்கான வாங்குவங்கியை வைத்துள்ளது.
அ.தி.மு.க.- பாஜக கூட்டணி இல்லை என்றதால் திருமாவளவன் தி.மு.க.வில் இருந்து மாறிவிடுவார் என்றில்லை. ஏனென்றால், திருமாவளவன் வெறும் தேர்தல் அரசியலை செய்பவர் அல்ல. அவர் கொள்கை சார்ந்து அரசியல் செய்பவர். ஏன், இன்றைக்கு தமிழ்நாட்டில் இருக்கும் சில தலித் தலைவர்கள் விலைபோன பிறகும். பொன் ராதாகிருஷ்ணன் போன்றோர் திருமாவளவனை பாஜகவில் இணையச் சொல்லி ராஜ்ய சபா, மத்தியில் பதவியும் தருவதாக பேசினர். ஆனால், இதையெல்லாம் மீறி, சாதி, சனாதன எதிர்ப்பில் உறுதியாக இருக்கிறேன் என்றவர் திருமாவளவன்.
பக்தர் சிலர் பாதயாத்திரை போவதையும், பரதேசிகள் சிலர் யாத்திரை போவதையும் கண்டுள்ளோம். எனவே, தனகென்று சொந்த புத்தி, சுய புத்தி இல்லாமல். அரசியலில் எந்த ஒரு முகாந்தரமும் தெரியாமல் தமிழ்நாட்டின் சூழலை உணராமல் தான் அண்ணாமலை இருக்கிறார். மக்கள் இவரை புறக்கணிக்கவும் தயாராக உள்ளனர். இவரால், ஒரு கவுன்சிலர் தேர்தலில் கூட வெற்றி பெற முடியாது. ஆனால், இவர்கள் செந்தில் பாலாஜியை கைது செய்து அந்தப் பகுதியில் செல்வாக்கு பெறமுடியும் என தப்புக் கணக்கு போட்டுள்ளனர். பாஜகவிற்கு தமிழக அரசியலில் நிகழ்காலமும், கடந்த காலமும், எதிர்காலமும் இல்லை. மேலும், தமிழ்நாடு பாஜகவின் மதவெறிக்கு ஒரு போதும் இடமளிக்காது. அண்ணாமலை தேர்தல் பொறுப்பேற்ற கர்நாடகாவில் எப்படி வீழ்ந்தார்களோ, அதே போல தமிழ்நாட்டில் புதைகுழியில் செல்ல இடம் தேடுகின்றது இந்த பாதயாத்திரை.
முழு பேட்டியை வீடியோவாக கீழே உள்ள லிங்க்கில் காணலாம்...