ஆன்மீக உலகில் மறுமலர்ச்சி எண்ணங்களை விதைத்த புரட்சியாளராகத் திகழ்கிறார் வள்ளலார்.1823 அக்டோபர் 5-ல் பிறந்த வள்ளலார் ஏறத்தாழ 51 ஆண்டுகள் வரை வாழ்ந்து, தன் வாழ்வை அருளார்ந்த பொருள்கொண்டதாய் ஆக்கிக்கொண்டார்.
உலகியல் வாழ்விற்குத் தலையாயது அன்பும் இரக்கமும்தான். அதுவே உண்மையான பக்தி என்று மனம் கனிந்தவர் அவர். பால்மணம் மாறும் முன்பாகவே தன் மூத்த சகோதரரால் ஆன்மீக வாழ்க்கைக்குள் நுழைந்த வள்ளலார், இளமையிலேயே நிறைபுலமை வாய்க்கப் பெற்றவராகத் திகழ்ந்தது வியப்பிலும் வியப்பாகும். அப்போதே அவருடைய அருளுரையில் அன்பில் ஊறிய புலமை பெருகி வழிந்ததைக் கண்டவர்கள், அவர்பால் ஈர்க்கப்பட்டார்கள். காலப்போக்கில் அவர் பாடல்களையும் புனையத்தொடங்கினார். அவற்றில் இருந்த எளிமையும் இனிமையும் ’கேட்டார் பிணிக்கும் தகையவாய்’ அனைவரையும் வசியம் செய்யும் வகையில் இருந்தன.
வள்ளலாருக்கு முன்புவரை நம் தமிழ்மொழி, செய்யுள் இலக்கியத்தை மட்டுமே கண்டிருந்தது. அதனால் மொழியில் ஓரளவாவது புலமை இருந்தால்தான் இலக்கியங்களைக் கற்க முடியும் என்ற நிலை அதுவரை நிலவியது. அதனால் பாமர மக்கள், இலக்கியங்களில் இருந்து சற்றுத் தள்ளியே நின்றுகொண்டிருந்தனர். ஆனால் வள்ளலாரோ, தமிழின் செய்யுள் நடையை நெகிழ்த்தி, கவிதை நடைக்குத் தமிழை அழைத்து வந்தார். தனது எளிய கனிந்த சொற்களால் அவர் புனைந்த கவிதைகள், திருவருட்பாக்களாகக் மலர்ந்து, படிக்காத பாமரர்களிடமும் சென்று ஆன்மீகம் பேசியது. இதனால் ஆண்களும் பெண்களும் வள்ளலார் எழுதிய திருவருட்பாவை, எளிதாக மனனம் செய்து வழிபாடுகளில் பயன்படுத்திப் பரவசம் எய்தினர்.
இதன் மூலம் இலக்கியத்திலும், ஆன்மீகத்திலும் மாபெரும் மறுமலர்ச்சியை வள்ளலார் ஏற்படுத்தினார். அவருடைய வழிபாட்டுமுறை கொஞ்சம் கொஞ்சமாக, அதுவரை கோலோச்சிக் கொண்டிருந்த ஆரிய ஆன்மீகக் கோட்பாடுகளில் இருந்து விலகியது. குறிப்பாக, உருவ வழிபாட்டு நிலையில் இருந்து அவரது பார்வை, ஒளிவடிவில் இறைவனை காணும் வகையில் விரிந்தது. உலகை வருத்தும் பெரும் பிணியான’பசிப்பிணி நீக்கும் கருணை மருத்துவத்தையும்’ அவர் வலியுறுத்தத் தொடங்கினார். அதேபோல் ஆரியத்தின் நச்சுப் பொதியான புராண இதிகாசத்துக்கு எதிராக அவரது அருட்கவிதைகள் கலகக்கொடி பிடித்தன.
வருணாசிரத்தின் மூலம் ஆரியம் அதுநாள் வரை கட்டிகாத்துக் கொண்டிருந்த சாதீய வன்முறைகளை ஒடுக்கும் வகையில், சமத்துவக் குரலை எழுப்பினார் வள்ளலார். ’சாதியும் மதமும் சமயமும் பொய்யென ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்சோதி” என்றெல்லாம் அவர் எழுத்துக்கள் அதிரடிக்குரல் எழுப்பின. அதனால் ஆரிய சனாதனப் பாதுகாவலர்களின் வெறுப்புக்கு பகைமைக்கும் அவர் ஆளானார்.
அதனால் திட்டமிட்டு அவருக்கு எதிரான பரப்புரைகள் செய்யப்பட்டன. ’வள்ளலார் பாடியவை அருட்பாக்கள் அல்ல மருட்பாக்கள்’ என்றெல்லாம் நிறுவ முயன்றனர். அவர் காலத்திலேயே ‘திருவருட்பா தூஷன பரிகாரம்’,’மருட்பா’ உட்பட ஏறத்தாழ 12 நூல்கள் அவருக்கு எதிராக அணிவகுத்து வந்தன. எனினும், வள்ளலாரின் அழுத்தமான அறிவார்ந்த சிந்தனைக் குரலும் சனாதன மறுப்பும் அவரை மக்கள் நெஞ்சில், எவராலும் வீழ்த்த முடியாத உயரத்திலேயே நிலை நிறுத்தின. அவர், பகுத்தறிவாளரும் போற்றுகிற ஞானியாகவே திகழ்ந்தார்.
இப்போது நாத்திக முகாம்களாலும் கூட வள்ளலாரின் குரல் எதிரொலிக்கப்படுவது அவருடைய பேரறிவின் அடையாளமாகும். எதிரிகளால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டார் என்றும் ஒளியோடு ஒளியாய்க் கரைந்தார் என்றும் வள்ளலாரை வைத்தும் புனைகதைகள் எழுதப்பட்டுக்கொண்டு இருக்கின்றன. ஆனால் 1873 ஜனவரி 30-ந் தேதி, தன் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துக்கொள்ளும் வகையில் வள்ளலார் தனியறை புகுந்தார் என்பதே உண்மை.
வள்ளலார் காலத்தில் வாழ்ந்து, அவருடனே 25 ஆண்டுகள் பயணித்த அவருடைய தீவிர சீடரான தொழூவூர் வேலாயுத முதலியார், 1882-ல் சென்னை தியாபிசிகல் சொசைட்டிக்கு வள்ளலார் தொடர்பாகக் கொடுத்திருக்கும் வாக்குமூலத்தில்...”நான், தென்னிந்தியாவில் புகழ் வாய்ந்த யோகியரான அருட்பிரகாச வள்ளலார் என்னும் சிதம்பரம் இராமலிங்க பிள்ளையவர்களின் சீடன். மகாத்மாக்கள் இருக்கிறார்களா என்பதிலும் அவர்களது விசேஹ கட்டளைப்படியே பிரம்மஞான சபை ஏற்படுத்தப்பட்டதா என்பதிலும் ஆங்கிலேயரும் இந்தியருள் சிலரும் ஐயுறுவதாகத் தெரிகிறது.
தாங்கள் பெரிதும் உழைத்து மகாத்மாக்களைப் பற்றி எழுதி வரும் நூலைப் பற்றிக் கேள்வியுற்றேன். எனது குருவைப் பற்றிய சில செய்திகளை வெளிப்படுத்த விரும்புகிறேன்” என்று தொடங்கி.....
அவர் தனது 50 ஆம் வயதை அடைந்த போது (1873) இவ்வுலகைத் தாம் நீப்பதற்கேற்பத் தமது சீடர்களைப் பக்குவப்படுத்தத் தொடங்கினார். தாம் சமாதி கூடுவதற்கு எண்ணியிருப்பதையும் தெரிவித்தார்.1873 ஆம் ஆண்டின் முற்பாதியில் மனித சகோதரத்துவத்தை மிகவும் வற்புறுத்திப் போதித்து வந்தார்.
அவ்வாண்டு இறுதி மூன்று மாதத்தில் பேசுவதையும் உபதேசிப்பதையும் அறவே விடுத்து இடையறா மெளனத்தில் ஆழ்ந்தார். 1874 ஜனவரி மாதம் 30- ஆம் தேதி, நாங்கள் மேட்டுக்குப்பத்தில் எங்கள் குருவைக் கடைசியாகப் பார்த்தோம். சீடர்களிடம் அன்போடு விடைபெற்ற பின், ஏற்பாடு செய்திருந்த ஒரு சிறு கட்டிடத்தின் தனி அறை ஒன்றில் நுழைந்து, விரிப்பில் சயனித்துக் கொண்டார். அவரது கட்டளைப் படி அறைக்கதவு பூட்டப்பட்டது. இருந்த ஒரே துவாரமும் சுவர் வைத்து அடைக்கப்பட்டது.’என்று வள்ளாரின் கடைசி நிமிடங்கள் குறித்து அவர் விவரித்திருக்கிறார். அன்பர்களுக்கு வலி தரும் முடிவு அது.