Skip to main content

மணிப்பூர் கலவரத்தின் பின்னணி; கனிம வளத்தைத் திருட கார்ப்பரேட் திட்டம் - வளர்மதி

Published on 28/07/2023 | Edited on 28/07/2023

 

 Valarmathi Interview

 

மணிப்பூர் கலவரத்தின் உள் அரசியல் குறித்து சமூக செயற்பாட்டாளர் வளர்மதி விளக்குகிறார்

 

மணிப்பூரில் இன்று பாதிக்கப்பட்ட தரப்பாக, ஒடுக்கப்படும் தரப்பாக இருப்பது குக்கி பழங்குடியின மக்கள்தான். ஆனால் அவர்கள் ஆயுதம் தாங்கிய போராட்டங்களிலும் இதற்கு முன் ஈடுபட்ட வீரியமான பழங்குடியினர்தான். மணிப்பூர் என்பது தமிழ்நாடு போன்ற மாநிலம் அல்ல. மணிப்பூர் மிகச் சிறிய மாநிலம். வெறும் 32 லட்சம் மக்கள் தொகை கொண்ட மணிப்பூர் மாநிலம், தமிழ்நாட்டின் ஒரு பெரிய மாவட்டத்தின் அளவுகூட இல்லை. எனவே மக்கள் தொகையோடு சேர்த்து இதை நாம் பார்க்க வேண்டும். 

 

மெய்தேய், குக்கி, நாகா ஆகிய சமுதாயங்கள்தான் மணிப்பூரில் முக்கியமானவை. பழங்குடியினராக இல்லாத மெய்தேய் சமூகத்தினர் திடீரென்று பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கு மற்ற இரு சமூகங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அது நியாயமானதுதான். மணிப்பூரில் கனிம வளங்கள் நிரம்பியிருக்கின்றன. கனிம வளங்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் வாழும் மக்கள் பொதுவாகவே கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக அரசு ஏற்படுத்தும் இதுபோன்ற பாதிப்புகளை எதிர்கொண்டுதான் வருகின்றனர். 

 

இந்தக் கனிம வளத்தை அடைவதற்காகத் தான் இவ்வளவும் நடத்தப்படுகின்றன. இதற்குள் இருக்கும் கனிமவள அரசியலை யாரும் பேசுவதில்லை. மணிப்பூரில் நடக்கும் கொடுமைகளைப் பார்க்கும்போது நமக்கு தூக்கம் வரவில்லை. இவ்வளவு கொடூரமாக மனிதர்கள் இருப்பார்களா என்று தோன்றுகிறது. இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று அனைத்து பழங்குடி இயக்கங்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேட்டபோது அவர்கள் மறுத்துவிட்டனர். இந்துத்துவ சித்தாந்தம் கொண்ட, பாஜகவைச் சேர்ந்த, ஆயுதம் தாங்கிய இளைஞர்கள்தான் இதைச் செய்கிறார்கள் என்று நீதிமன்றத்தில் அவர்கள் கூறினர்.

 

இது ஆர்எஸ்எஸ் இயக்கத்தால் நடத்தப்படும் கலவரம்தான். போலீசார்தான் தங்களைக் கலவரக்காரர்களிடம் கொண்டுபோய் விட்டனர் என்று அங்குள்ள பாதிக்கப்பட்ட பெண்கள் சொல்கின்றனர். பழங்குடியினப் பெண்ணை குடியரசுத் தலைவராக நாங்கள் ஆக்கினோம் என்று பெருமை பேசிய இவர்கள், இன்று பழங்குடியின பெண்கள் பாதிக்கப்படும்போது அமைதியாக இருக்கிறார்கள். இஸ்லாமியர்கள் மீது குஜராத்தில் தாக்குதல் நடத்தியது போல, கிறிஸ்தவர்கள் மீது இப்போது மணிப்பூரில் தாக்குதல் நடத்துகிறார்கள். 

 

மணிப்பூர் விவகாரத்தில் வீடியோ மட்டும் வெளிவராமல் இருந்திருந்தால் பிரதமர் இதுகுறித்து பேசியிருக்க மாட்டார். குற்றவாளிகளில் ஒருவனுடைய வீட்டை அங்கிருக்கும் பெண்களே தீ வைத்துக் கொளுத்தினர். எங்கேயோ மணிப்பூரில் தானே இந்தப் பிரச்சனை நடக்கிறது என்று நாம் இதை சாதாரணமாகக் கடந்துவிட்டால், நாளை இது நமக்கும் நடக்கும். எங்களைப் போன்ற போராட்டக்காரர்கள் போராடுவது தேவையற்றது என்று பலர் நினைத்திருந்தனர். நாங்கள் ஏன் போராடுகிறோம் என்பது இப்போது அவர்களுக்குப் புரிந்திருக்கும்.