யூ-ட்யூபை கலக்கும் ஸ்ருதிஹாசன் குறும்படம் !!!
நடிகர் கமல்ஹாசன் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் காட்டும் குறும்படங்கள் மக்கள் மத்தியில் ட்ரெண்டாக இருந்தன. இப்பொழுது அவரது மகள் நடிகை ஸ்ருதிஹாசன், தனது 'இஸிட்ரோ மீடியா' நிறுவனம் மூலம் தயாரித்திருக்கும் குறும்படம் , யூ-ட்யூபில் வெளியான இருபத்திநான்கு மணிநேரத்தில் நான்கு லட்சம் பேருக்கும் மேற்பட்டோரால் பார்க்கப்பட்டு, தொடர்ந்து ட்ரெண்டில் இருக்கிறது. 'குளோபல் ட்ரக்' (Global Drug) என்று பெயரிடப்பட்ட இந்தப் படத்தில், 'ஜம்ப் கட்ஸ்' ஹரி நடித்துள்ளார். இன்று, மக்கள் எந்த அளவுக்கு கைப்பேசிகளுக்கு அடிமையாக இருக்கின்றனர் என்பதை உணர்த்தும் இந்தக் குறும்படத்தை 'ஜம்ப் கட்ஸ்' நரேஷ் இயக்கியுள்ளார். 'ஜம்ப் கட்ஸ்' யூ-ட்யூப் சானலில் இந்தப் படம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு, இந்நிறுவனத்தைத் தொடங்கிய ஸ்ருதிஹாசன் ஏற்கனவே தயாரித்த 'பிட்ச்' என்ற குறும்படமும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இயக்குனர் கௌதம், நடிகர் ராணா, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், இயக்குனர் பாலாஜி மோகன் உள்பட பலரும் 'வெப்சிரீஸ்' எனப்படும் வலைதொடர் மற்றும் குறும்படங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வசந்த்