Skip to main content

புகலிடம் தேடி… துயரக் கடலை நீந்திக் கடந்த

Published on 15/11/2017 | Edited on 15/11/2017
புகலிடம் தேடி…
துயரக் கடலை நீந்திக் கடந்த நபி ஹூசைன்

காலம் சிலருக்கு மட்டும் நிரந்தரமாய் கண்ணீரைப் பரிசளித்துவிடுகிறது. சிலருடைய நிலங்களில் மட்டும் எப்போதும் வேதனையைப் பயிரிட்டுவிடுகிறது. எப்படி ஈழத்தமிழர்கள் பல்லாண்டுகளாய் இலங்கையில் வேதனையை அனுபவித்துவருகிறார்களோ, அதுபோல மியான்மரில் வேதனையை அனுபவித்துவரும் ஒரு சமூகம் ரோஹிங்யாக்கள்.

மியான்மரில் ரோஹிங்யாக்கள் பல்லாண்டுகளாக வசித்துவந்தபோதும், அவர்களை பங்களாதேஷிலிருந்து குடியேறியவர்களாக கருதுகிறது மியான்மர் புத்த சமூகம். ரோஹிங்யாக்களுக்கு குடியுரிமை உள்ளிட்ட சமத்துவ உரிமைகளை அந்நாடு மறுத்துவருகிறது.

இவ்வாண்டு ஆகஸ்டில் ரோஹிங்யா கிளர்ச்சியாளர்கள் குழுவொன்று மியான்மர் ராணுவத்தை தாக்கியது. அதுமுதற்கொண்டு மியான்மர் ராணுவமும் புத்த சமூகமும் கொடூரமான தாக்குதல்களை ரோஹிங்யாக்கள்மீது கட்டவிழ்த்துவிட்டு வருகிறது. குடிசைகளைக் கொளுத்துதல், ஆண்களைக் சுட்டுக் கொல்லுதல், பெண்களை வன்புணர்ச்சி செய்தல் என மட்டுமீறிய வன்முறையால் ரோஹிங்யாக்கள் அங்கிருந்து தப்பி பங்களாதேஷுக்கும் பிற நாடுகளுக்கும் அடைக்கலம் தேடிவருகின்றனர்.



இதுவரை கிட்டத்தட்ட ஆறு லட்சம் ரோஹிங்யாக்கள் அண்டை நாடுகளில் அடைக்கலம் புகுந்துள்ளனர். அப்படி அடைக்கலம் தேடி வருபவர்களின் கண்ணீர்க் கதைகள் கல்நெஞ்சத்தையும் கரையவைப்பவை. அதிலொன்றுதான் நபி ஹூசைனின் கதை.

நபி கடைசியாக தன் கிராமத்தைப் பார்த்தபோது கிராமத்திலுள்ள வீடுகளெல்லாம் தீயில் கொளுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தன. ராணுவத்துக்கும், அட்டகாசத்தில் ஈடுபட்டிருந்த வன்முறைக் கும்பலுக்கும் தப்பிய நபி ஹூசைனின் குடும்பம் கடற்கரையோரமாகத் தப்பிவந்தது. அங்கேதான் ஆயிரக்கணக்கில் ஏற்கெனவே தப்பிவந்த ரோஹிங்யாக்கள் குவிந்திருந்தனர். புதிது புதிதாக வந்துசேர்ந்துகொண்டும் இருந்தனர்.

அங்கிருந்து பங்களாதேஷுக்கோ… வேறெங்கோ அடைக்கலம் புகவேண்டுமென்றால், அவர்கள் திருட்டுத்தனமாக படகில்தான் செல்லவேண்டும். அப்படி அழைத்துச்செல்பவர்களுக்குக் கொடுக்க கணிசமான பணம்வேண்டும். 

குடிசை வேண்டுமானால் எரிந்துவிட்டுப் போகிறது. உயிர்பிழைத்தால் போதுமென தப்பிவந்தவர்களிடம் பெரிதாக என்ன பணமிருந்துவிடப்போகிறது?

அவர்கள் கையிலோ பணமில்லை. கைவசம் பெரிதாக உணவும் இல்லை. நான்கு நாட்கள் தாக்குப்பிடித்துப் பார்த்தார்கள். நபி தன் பெற்றோரிடம் கடற்கரையோரமாக நீந்தி பங்களாதேஷ் பகுதியான ஷா போரிர் டிவிப்புக்கு போகவிரும்புவதாகக் கூறினார். ஆனால் அவர்களது பெற்றோருக்கு அதில் விருப்பமில்லை. இரண்டு மாதங்களுக்குமுன் அவர்களது மூத்த மகன் பங்களாதேஷ் போகிறெனென்று தப்பிச்சென்றான். அவன் என்ன ஆனான் என்பதே அவர்களுக்கு இதுவரை தெரியவில்லை.

கடைசியில் பாசத்தை யதார்த்தம் வென்றது. உண்ண உணவில்லாமல், பிழைக்க வழியுமில்லாமல் எத்தனை நாள் தாக்குப்பிடித்துவிடமுடியும்?

ஐந்தாம் நாள் நபிக்கு சம்மதம் தந்தார்கள். பெரிய சைஸ் சமையல் எண்ணெய் கேனைக் கட்டிக்கொண்டு, கடலில் 2.5 மைல் தூரம் நீந்திக் கடக்கவேண்டிய பயணம் அது. இதில் வேடிக்கை என்னவென்றால் நபி ஹூசைனுக்கு நீச்சல் தெரியாது என்பதுதான்.



நவம்பர் 3-ஆம் தேதி நபி தனது சாகசத்தைத் தொடங்கினான். கிட்டத்தட்ட 23 இளம்வயதினர் அவனைப் போல் நீந்திச் செல்ல காத்திருந்தனர். அவர்களில் நபிதான் இளையவன். 18 வயதுக்காரன். நபியின் பெற்றோர்கள் அவனுக்காகப் பிரார்த்திக்க, நபி தனது நெஞ்சுப் பகுதியில் சமையல் எண்ணெய் கேனைக் கட்டிக்கொண்டு, நீரோட்டம் பங்களாதேஷை நோக்கி நகரும் நேரத்தில் அவர்கள் பயணத்தைத் தொடங்கினர்.

அவர்கள் மூன்று மூன்று பேராக பயணித்தனர். நபிக்கு நீச்சல்தெரியாதென்பதால், அவனை நடுவில்விட்டு மற்ற இருவர் பக்கவாட்டில் நீந்தினர். தாகத்தாலும் அலையின் தாக்கத்தாலும் உப்பு நீரைக் குடித்தான். கால்கள் வலியெடுத்தன. மூச்சுவாங்கியது. ஆனாலும் இறுதிவரை அவன் தைரியத்தை விடவில்லை.

சூரியன் அஸ்தமனமான பின்பு, களைப்பும், தாகமும் பசியுமாக அவர்கள் பங்களாதேஷ் எல்லையில்வந்து ஒதுங்கினர்.

பங்களாதேஷில் அடைக்கலம் தேடிப் புகுந்த 40,000 ரோஹிங்யா முஸ்லிம் சிறுவர்களில் ஒருவனாக நபி ஹூசைன் ஆகிவிட்டான். பெற்றோரும் அமைதியும் தன்னை வந்தடைய வேண்டுமென்பதே, இப்போதைக்கு அவன் பிரார்த்தனையெல்லாம்.

க.சுப்பிரமணியன்

சார்ந்த செய்திகள்