Skip to main content

இன்றைய கிராமங்கள் இளைஞர்கள் கையில்.. விஞ்ஞானி மயில்சாமி அண்ணாத்துரையை திரும்பிப் பார்க்க வைத்த இளைஞர்களின் செயல்பாடு!

Published on 31/05/2019 | Edited on 31/05/2019


அரசு பள்ளிகளில் படித்து இன்று உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் அருகில் உள்ள அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து வளப்படுத்துங்கள் என்று தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிக்கை வெளியிட்டு அழைப்புக் கொடுத்திருக்கிறார்.


 

mayilsamy annadurai

 

இந்தநிலையில் தான் மே 30 ந் தேதி தினத்தந்தி 4 ம் பக்கத்தில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாத்துரை பள்ளிக் கல்வியும் அரசுப் பள்ளியும் என்ற தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளார். அந்த கட்டுரையில்..

 

தான் எப்படி படித்தோம் என்பதையும் தன் கிராமத்தில் நடந்த சோகத்தையும் இப்படிச் சொல்லி வருகிறார்..
 

மாட்டுக்கொட்டகை ஒரு வருடம்
கோயில் திண்ணை மறு வருடம்
கோணிப் பையே குடையாக
செருப்பே இல்லா நடைப் பயணம்..
என்றே வளர்ந்த என் கல்வி
முழுதாய் கற்றது கோவையில் தான்.
எல்லாம் அரசுப் பள்ளியில் தான்.

இருந்தும் நிலவில் நீர் கண்டேன்
எப்படி என்று பலர் கேட்டார்.
தாய்மொழிக் கல்வியின் பலனென்று 
வாய்மொழி கொண்டு நானுரைத்தேன்.
அந்தோ இன்று எனதூரில்
ஆங்கோர் மாயும் மடிந்தாளே
ஆங்கில வழியில் அவள் மகனை
தனியார் பள்ளியில் கற்பிக்க
அவளது ஏழ்மை துரத்தியதால்
தீயில் கருகிச் செத்தாளாம்.
சேதி கேட்டு நான் நொந்தேன்.
ஏழ்மை என்பது பணத்தாலா?
அறியா மனத்தின் நிலையாலா? 
அரசு பள்ளி பாழல்ல
அன்னைத் தமிழும் பாழல்ல

அறியா மனமே பாழென்பேன்.

என்று கவி நடையில் மொத்த கருத்தையும் கொட்டி வைத்தவர் அந்த கட்டுரையின் முடிவில் ஒன்றை அழுத்தமாக சொல்கிறார். அரசு பள்ளிகளில் அரசுப் பங்கையும் தாண்டி முன்பு அரசுப் பள்ளியில் படித்து தேர்ந்து இப்போது நல்ல நிலையில் உள்ள முன்னாள் மாணவர்கள் சேர்ந்து அரசுப் பள்ளிகளுக்கு உயர்தர வசதிகள் செய்து தந்து அவற்றை கனவுப் பள்ளிகளாக்கிவிட்டார்கள். எனவே தமக்கு அருகில் உள்ள அரசுப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேருங்கள் என்று முடித்திருக்கிறார்.

 


இந்த கட்டுரை வெளியான நிலையில் தான் அவரை மற்றொரு துண்டறிக்கை முகநூல் மற்றொரு பதிவையும் போட வைத்துள்ளது. அதாவது.. எனது இன்றைய பத்திரிக்கை பதிவும், பதிலாய் வந்த ஒரு பள்ளியின் விளக்கமும் என்ற தலைப்பிட்டு தனது கட்டுரையையும் ஒரு கிராமத்து இளைஞர்கள் வெளியிட்டுள்ள துண்டுபிரசுரத்தையும் ஒன்றாய் இணைத்திருந்தார்.
 

 

இனி அந்த கிராமத்திற்குள் செல்வோம்.. அந்த கிராம இளைஞர்கள் அப்படி என்ன தான் செய்துவிட்டார்கள் என்பதை நேரில் காணலாம்..
 

 

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயில் ஒன்றியத்தில் உள்ளது ஏம்பல் என்ற கிராமம். முழுக்க முழுக்க மழை நீரை மட்டுமே நம்பி விவசாயம் செய்யும் கிராமம் அது. 13 குளங்கள் கிராமத்தின் விவசாயத்தை வளமாக்கியது ஆனால் அது பல வருடங்களுக்கு முன்பு. இப்போது 3 குளங்களில் கொஞ்சம் தேங்கும் தண்ணீரை நம்பிவே விவசாயிகளின் வாழ்க்கை. அதிலும் ஒரு குளத்தில் மட்டுமே நீண்ட நாள் தேங்கி நிற்கும் தண்ணீர் மற்ற அனைத்து குளங்களம் ஆக்கிரமிப்புகளால் அழிந்து கொண்டிருக்கிறது. விவசாய கிராமம் என்பதற்கு அடையாளமாக மழை கால விவசாயம் மட்டுமே. அதனால் தங்கள் பிள்ளைகளை படிக்க வைத்து வேலைக்காக வெளிநாடு, வெளியூர்களுக்கு அனுப்பிய பெற்றோர்கள் சொந்த கிராமத்தை விட்டு செல்ல மனமின்றி இருக்கிறார்கள். இது ஏம்பல் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள அத்தனை கிராமங்களின் நிலை. 
 

mayilsamy annadurai

 

இந்த நிலையில் தான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படித்து இன்ற பல உயர்ந்த இடங்களில் இருக்கும் முன்னால் மாணவர்கள் இணைந்தார்கள். நாம் இந்த ஊருக்கு ஏதாவது செய்யனும் என்ன செய்வது பல நாட்கள் ஆலோசனை செய்தார்கள். முதலில் நம்ம ஊரு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சீரமைக்கனும், யாருக்காவது உடல்நிலை சரியில்லை என்றால் 30 கிமீ அறந்தாங்கி போகனும் அதனால முதலில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வசதிகளை ஏற்படுத்தனும் என்றனர். முதல்கட்டமாக அதே ஊரில் படித்து அந்த ஊரிலேயே மருத்துவராக இருப்பவரிடம் தேவைகளை கேட்டறிந்தனர்.. 

 

mayilsamy annadurai

 

கர்பிணிகளுக்காண கட்டிடம் தேவை அரசிடம் கேட்டு பெற்றனர். அடுத்து சர்க்கரை, உப்பு, ரத்தம் அழுத்தம் காண ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டது. கர்பிணிகளுக்கு வசதியாக ஒரு ஸ்கேன் வசதி வேண்டும் என்று அதற்காக பணம் சேர்த்தனர். அதற்குள் ரூ. 15 லட்சத்தில் ஜெர்மன் தயாரிப்பில் அல்ரா ஸ்கேன் சிலர் உதவியுடன் வாங்கி வைக்கப்பட்டதுடன் படுக்கை வசதிகளும் செய்து கணினி வசதி தூய குடிநீர் இப்படி ஒவ்வொன்றாக செய்து ஒரு தாலுகா மருத்துவமனைக்கு இணையாக கொண்டு வந்தார்கள். எந்த நேரத்திலும் சிகிச்சை அளிக்கும் வசதி, கனிவான பேச்சு மருத்துவமைனையில் ஊழியரிகளிடம் காணப்பட்டது.

 

mayilsamy annadurai

  
அடுத்து நாம் செய்ய வேண்டியது நம்ம ஊர் நூலகத்தில் கீற்றுக் கொட்டகையில 10 ஆயிரம் புத்தகங்களும் நனைந்து கொண்டிருக்கிறது  அதனால நூலகம் கட்டி புதிய புரவலர்களை சேர்க்கனும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதற்கான பணிகளில் இறங்கினார்கள். அரசு பள்ளியில் ஒரு கட்டிடத்தை தற்காலிகமாக கேட்டு பெற்றனர். கல்வித்துறையும் இளைஞர்களின் கோரிக்கையை ஏற்றது. அழகான நூலகம் அமைக்கப்பட்டுவிட்டது. அடுத்து சாலை வசதியும் செய்யப்பட்டுவிட்டது. இன்னும் நாம செய்ய வேண்டியது நாம படித்த அரசு பள்ளிகளை வளப்படுத்தி மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்று தீர்மானித்தனர்..

 

mayilsamy annadurai

 

முதலில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை தேர்ந்தெடுத்த இளைஞர்கள் பள்ளி திறக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில்.. வகுப்பறைகள் அனைத்தும் டைல்ஸ் பதித்து உள்சுவர்கள் மாணவர்களை புத்துணர்வை ஊட்டக் கூடிய ஓவியங்களும் வெளிச்சுவர்களில் பல வருடங்கள் அழியாத வண்ணங்களும் தீட்டி புதிய கட்டிடம் போல மாற்றிய பிறகு ஸ்மார்ட் வகுப்பறை, வகுப்பறையில் மாணவர்கள் அமர தனித் தனி இருக்கையும் அவர்களுக்கு என்று தனி மேஜையும் அமைத்து 5 புதிய கணினிகளை வைத்து கணினி அறை அமைத்துவிட்டனர். பள்ளி திறந்ததும் வாரத்தில் 2 நாட்கள் கணினி பயிற்சி, 2 நாட்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேச, எழுத பயிற்சி, 2 நாட்கள் யோக இப்படி ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்த திட்டம் வகுத்துவிட்டனர். 

 

mayilsamy annadurai

 

 

mayilsamy annadurai

 

இத்தனை வசதிகளையும் செய்து கொடுத்த பிறகு மாணவர்களுக்காக தூய குடிநீர் வழங்க குடிதண்ணீர் சுத்திகரிப்பு கருவி பொருத்தப்படுகிறது. இத்தனை வசதிகளையும் செய்து கொடுத்த முன்னாள் மாணவர்கள் பள்ளியில் இப்போது 83 மாணவர்கள் இருக்கிறார்கள். இந்த கல்வி ஆண்டில் உங்கள் பிள்ளைகள் நல்ல முறையில் படிக்க அரசுப் பள்ளியில் சேருங்கள் என்று துண்டுபிரசுரம் கொடுத்து வீடு வீடாக பிரச்சாரத்தையும் முன்னெடுத்துள்ளனர். மேலும் இந்த பள்ளியில் படித்து இன்று அரசு மற்றும் தனியார் துறைகளில் எத்தனை பேர் உயர்ந்த பதவிகளில் இருக்கிறார்கள் என்பதை எடுத்துச் சொல்வதுடன் அவர்களின் உதவியும் இந்த திட்டங்களில் உள்ளது என்பதை சொல்லி மாணவர்களின் சேர்க்கையை அதிகரித்து வருகின்றனர். 

 

mayilsamy annadurai

 

இந்த துண்டுபிரசுரம் தான் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையின் பார்வையில் பட்டு ஒப்பிட்டது. இது குறித்து ஏம்பல் பகுதி இளைஞர்கள் கூறும் போது.. எல்லா கிராமங்களைப் போலத் தான் எங்கள் கிராமமும். நாங்கள் படித்த பள்ளி, நாங்கள் சென்ற சாலை, நாங்கள் படித்த நூலகம், நாங்கள் மருத்துவம் செய்து கொண்ட மருத்துவமனை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அதன் தன்மையை இழந்து வருவதை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால் தான் முன்னாள் மாணவர்கள் சங்கம், ஏம்பல் முன்னேற்றக்குழு போன்ற அமைப்புகளை ஏற்படுத்தி ஒவ்வொன்றாக செய்து வருகிறோம். இன்னும் நிறைய பணிகள் உள்ளது செய்ய வேண்டும். அடுத்தகட்டமாக எங்கள் கிராமத்திற்கு தூய குடிநீர் கிடைக்க ஆயிரம் லிட்டர் சுத்திகரிக்கும் இயந்திரம் வாங்க (ரூ. 6.33. லட்சம்) நமக்கு நாமே திட்டத்தில் எங்கள் பங்கு தொகையை கட்டி இருக்கிறோம். 

 

mayilsamy annadurai

 

அதே போல சிறப்பு மிக்க வாரச்சந்தையை கொண்டு வரவும், தனி நூலக கட்டிடம், மாணவர்களை வைத்து பராமரிக்கும் மூலிகை தோட்டம் அமைக்க இடம், நீர்நிலைகளை பாதுகாத்து நிலத்தடி நீரை சேமிக்க 13 குளங்களையும் மீட்டெடுப்பது போன்ற இன்னும் பல திட்டங்கள் எங்களிடம் உள்ளது. எங்கள் திட்டங்களுக்கு தமிழக அரசு உயர் அதிகாரிகளும் எங்கள் ஊரில் படித்து இன்று பல்வேறு துறைகளில் உயர்ந்த இடத்தில் இருப்பவர்களும் முழு ஒத்துழைப்பும், உதவிகளும் செய்து பணிகள் விரைவில் முடித்துக் கொடுக்கிறார்கள். எங்களிள் இந்த பணி ஏம்பல் கிராமத்தில் மட்டுமல்ல அருகில் உள்ள கிராமங்களுக்கும் விரிவடையும். அந்த கிராம இளைஞர்களும் ஆர்வம் காட்டுவதால் அவர்களுடன் இணைந்து செயல்படுவோம் என்றவர்கள்.. இன்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாத்துரை எங்கள் துண்டறிக்கையை பார்த்து முகநூலில் பதிவு போட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதே நேரத்தில் விரைவில் ஒரு நாள் விஞ்ஞானியை எங்கள் கிராமத்திற்கு அழைத்து வந்து மேலும் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை ஆலோசனையாக பெற்று அதையும் செய்ய காத்திருக்கிறோம். 

மேலும் எங்களுடைய கோரிக்கைகளை ஏற்று உடனக்குடன் நடவடிக்கை எடுத்து உதவி செய்யும் தலைமை செயலர் கிரிஜாவைத்யநாதன், புதுக்கோட்டை ஆட்சியர் உமாமகேஸ்வரி மற்றும் அதிகாரிகளுக்கு நெஞ்சார்ந்த நன்றியை கூறிக்கொள்கிறோம்.

 

 

 

mayilsamy annadurai

 

எங்களின் இந்த பணிகளுக்கு கிராமத்தினரின் முழு ஒத்துழைப்பு கிடைக்கிறதுர். இதே போல தான் கடந்த சில ஆண்டுகளில் அறந்தாங்கி ஒன்றியம் மாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதிமணியின் முயற்சியால் கிராம இளைஞர்கள் மற்றும் வெளியூர் இளைஞர்களின் உதவியுடன் பல்வேறு சிறப்புகளை பெற்று கனவுப் பள்ளியாக திகழ்கிறது. தமிழக அரசு எந்த திட்டம் கொண்டுவந்தாலும் அந்த திட்டம் மாங்குடி அரசுப் பள்ளியில் பல ஆண்டுகளுக்கு முன்பு செயல்படுத்திய திட்டமாக இருக்கும்.
 

 

தற்போது தமிழக அரசு அரசுப் பள்ளிகளில் எல்கே.ஜி, யூகே.ஜி தொடங்க ஆணையிட்டுள்ளது. ஆனால் அறந்தாங்கி ஒன்றியத்தில் உள்ள வல்லம்பக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள அங்கன்வாடியில் கடந்த 5 ஆண்டுகளாக செயல்படுத்திக் காட்டிவிட்டார்கள் அந்த கிராம இளைஞர்கள். அதே போல இளைஞர்களின் முயற்சியால் திருவரங்குளம் ஒன்றியம் கொத்தமங்கலம் சிதம்பரவிடுதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களின் வசதிக்காக வேன் வசதி வரை செய்யப்பட்டு சிறப்பு செய்யப்பட்டு தொடர்ந்து கண்காணித்தும், நடைமுறைப்படுத்தியும் வருகிறார்கள். 
 

 

அந்த வரிசையில் அதே புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து மீண்டும் ஒரு அரசு பள்ளியை இளைஞர்கள் தத்தெடுத்திருக்கிறார்கள் ஏம்பல் இளைஞர்கள். நிச்சயம் இந்த பள்ளியும் விரைவில் சிறப்படையும்.  

 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்