தமிழக சட்டமன்றத் தேர்தலுடன், கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலும் ஒரே கட்டமாக ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் மார்ச் 12- ஆம் தேதி தொடங்கிய நிலையில் இன்று (19/03/2021) பிற்பகல் 03.00 மணிக்கு நிறைவடைந்தது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட சுமார் 5,000-க்கும் மேற்பட்டோர் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
இதனிடையே, அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தங்கள் கட்சி வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சியின் வேட்பாளரை ஆதரித்துத் தீவிரத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தலை இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். அந்த வகையில், 1977- ஆம் ஆண்டு முதல் தமிழக சட்டமன்றத் தேர்தலில் களம் காணும் அரசியல் பிரபலங்கள் குறித்துப் பார்ப்போம்.
அண்ணா மறைவுக்குப் பிறகு, கடந்த 1971- ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் தொடங்கி, கலைஞர் மறைவுக்குப் பிறகு நடக்கும் 2021- ஆம் ஆண்டு வரையில் நடந்த எல்லா சட்டமன்றத் தேர்தல்களிலும் களம் கண்டு வரும் ஒரே தலைவராக உள்ளார் தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தற்போதைய காட்பாடி சட்டமன்றத் தொகுதியின் தி.மு.க. வேட்பாளரான துரைமுருகன். 11 முறை தேர்தல் களம் கண்டுள்ள துரைமுருகன் இரண்டு முறை மட்டுமே தோல்வி அடைந்துள்ளார். இதில் 9 முறை காட்பாடியிலும், 2 முறை ராணிப்பேட்டையிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். தற்போது 12- வது முறையாக மீண்டும் காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் களமிறங்கியுள்ளார்.
துரைமுருகனுக்கு அடுத்தபடியாக, அதிமுகவின் கே.ஏ.செங்கோட்டையன், சபாநாயகர் தனபால், அ.தி.மு.க.வில் இருந்து தற்போது தி.மு.க. வேட்பாளர்களாக உள்ள முன்னாள் அமைச்சர்கள் ஈரோடு முத்துசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் அ.தி.மு.க. முதன் முதலில் சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்த 1977- ஆம் ஆண்டு முதல் தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வருகின்றனர்.
இதில், கே.ஏ.செங்கோட்டையன் கடந்த 2001- ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலைத் தவிர்த்து, மற்ற எல்லாத் தேர்தல்களிலும் சத்தியமங்கலம், கோபிச்செட்டிப்பாளையம் சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டுள்ளார். 1996- ஆம் ஆண்டு தவிர மற்ற எல்லாத் தேர்தல்களிலும் வெற்றியை ருசித்துள்ளார் கே.ஏ.செங்கோட்டையன்.
தமிழக சட்டப்பேரவையின் தற்போதைய சபாநாயகரான தனபால், அவினாசி (தனி) சட்டமன்றத் தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார். அ.தி.மு.க. முதன் முதலாக ஆட்சி அமைத்த 1977 தேர்தல் தொடங்கி 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களிலும், 2001 ஆம் ஆண்டு நடந்த தேர்தலிலும் சங்ககிரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2011- ஆம் ஆண்டு ராசிபுரம் சட்டமன்றத் தொகுதியிலும், 2016- ஆம் ஆண்டு அவினாசி சட்டமன்றத் தொகுதியிலும் வெற்றிபெற்ற தனபால், தற்போது மீண்டும் அவினாசி சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராகக் களமிறங்கியுள்ளார்.
அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியின் தி.மு.க. வேட்பாளராகக் களமிறங்கியுள்ள கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், எம்.ஜி.ஆர். மற்றும் கலைஞர் ஆகிய இருவரின் அமைச்சரவையிலும் இடம்பெற்ற பெருமைக்குரியவர். இதுவரை 10 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டிருக்கும் இவர், இரண்டு தேர்தலில் மட்டுமே தோல்வி அடைந்தார். அதிகபட்சமாக சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து மட்டும் ஆறு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.