2020, பலருக்கும் சொல்லிக்கொள்ளுமளவுக்கு சிறப்பான ஆண்டாக அமையாவிடினும், சோதனைகள் மிகுந்த இவ்வாண்டில் சில இந்தியர்கள் செய்த வியக்கவைக்கும் சாதனைகள் அவர்களை உலகளவில் கவனத்தைப் பெற வைத்ததோடு, கனவுகளை நோக்கிய இளம் தலைமுறையினரின் சாகசப்பயணத்திற்கு உத்வேகம் தரக்கூடியதாகவும் அமைந்தது. அவ்வாறு இவ்வாண்டில் தங்களின் முயற்சிகளாலும், முன்னேற்றத்தாலும் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த சில இந்தியர்களைப் பற்றிய ஒரு தொகுப்பு...
கமலா ஹாரிஸ்;
இவ்வாண்டு இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பலரது கவனத்தையும் ஈர்த்தவர் கமலா ஹாரிஸ். உலகின் மிக வளர்ந்த நாடாகவும், வல்லரசுகளின் தலையாய நாடாகவும் பார்க்கப்படும் அமெரிக்காவில், முதன்முதலாக துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் கமலா ஹாரிஸ். முதல் பெண் துணை அதிபர் என்பதைக் கடந்து அந்நாட்டின் முதல் கறுப்பின மற்றும் ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த பெண் துணை அதிபரும் இவரே. கலிஃபோர்னியாவில் பிறந்து வளர்ந்த கமலா ஹாரிஸின் வெற்றி இந்தியாவிலும், குறிப்பாக தமிழகத்திலும் பெருமளவு கொண்டாடப்பட்டது.
ஜமைக்கா - இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ், 1990-1998 காலகட்டத்தில் ஓக்லாந்தில் துணை மாவட்ட வழக்கறிஞராகத் தனது பணியைத் தொடங்கினார். இந்த காலகட்டத்தில் கும்பல் வன்முறை, போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாலியல் துன்புறுத்தல் போன்ற வழக்குகளை அவர் எதிர்கொண்ட விதம், அவருக்கான நற்பெயரைப் பெற்றுத் தந்தது. 2004 ஆம் ஆண்டு மாவட்ட அட்டர்னியான கமலா ஹாரிஸ், 2011–2017 காலகட்டத்தில் மாநில அட்டர்னி ஜெனரலாக சிறப்பாகச் செயல்பட்டார். இந்த காலகட்டத்தில் அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த பல்வேறு பிரச்சனைகள் குறித்த தனது குரலைப் பதிவு செய்தவர், 2016 -ல் ஜனநாயகக் கட்சி சார்பில் அமெரிக்க செனட்டிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்படிப் படிப்படியாக உயர்ந்து இன்று அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் என்ற இடத்தைப் பிடித்து இவ்வுலகைத் தனது பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் கமலா ஹாரிஸ்.
கவுரவ் சர்மா;
தென்னிந்தியாவில் கமலா ஹாரிஸ் கொண்டாடப்பட்டதைப் போல வட இந்தியாவில் அதிகம் கொண்டாடப்பட்ட ஒரு அயல்நாட்டு அரசியல்வாதி கவுரவ் சர்மா. இந்தியாவில் பிறந்து, நியூசிலாந்தில் படித்த இவர், வெறும் 33 வயதில் நியூசிலாந்து நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்று பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இந்தியாவின் இமாச்சலப்பிரதேசத்தில் பிறந்து பள்ளிப்படிப்பை மேற்கொண்ட கவுரவ் சர்மா, தனது 14 வயதில் குடும்பத்தோடு நியூசிலாந்திற்குக் குடிபெயர்ந்தது. நியூசிலாந்தில் மருத்துவப்படிப்பை முடித்தார். அமெரிக்கா சென்று அரசியல், பொது சுகாதாரத்துறையில் எம்.பி.ஏ முடித்தார். படிப்பை முடித்து நியூசிலாந்து திரும்பிய இவர், தொழிலாளர் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு அரசியல் பணியாற்றி வந்தார்.
2017 ஆண்டு நியூசிலாந்தின் ஹாமில்ட்டன் வெஸ்டில் எம்.பி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய இவர், 2020 தேர்தலில் அதே தொகுதியில் நின்று இவ்வாண்டு வெற்றியும் பெற்றார். தேர்தல் முடிவு வந்தபோது கூட இந்தியர்களால் பெரிதும் கவனிக்கப்படாத இவர், சமஸ்கிருதத்தில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டு பிரதமர் மோடி உட்பட பல இந்தியர்களின் கவனத்தையும் தனது பக்கம் திருப்பினார். நியூசிலாந்தின் பூர்வீக மவோரி மொழியிலும், சமஸ்கிருத மொழியிலும் பதவிப் பிரமாணம் மேற்கொண்ட அவர், இந்தியா மற்றும் நியூசிலாந்தின் கலாச்சார மரபுகளுக்கு இதன்மூலம் தனது மரியாதையைக் காட்டுவதாகவும் தெரிவித்தார். நியூசிலாந்து, ஸ்பெயின், அமெரிக்கா, நேபாளம், வியட்நாம், மங்கோலியா, சுவிட்சர்லாந்து மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் பொதுச் சுகாதாரம், மருத்துவம் தொடர்பான பல்வேறு ஆய்வுக்கூட்டங்களை நடத்தியுள்ள கவுரவ் சர்மா இவ்வாண்டில் உலக அரசியல் களத்தில் கவனிக்கப்படவேண்டிய இளம் தலைவராக மாறியுள்ளார்.
நடராஜன்;
சின்னப்பம்பட்டி நடராஜன் சிட்னியில் புரிந்த சாதனை, இந்தாண்டு கிரிக்கெட் உலகின் ஹாட் டாபிக்களில் முக்கியமானது. இந்திய ரசிகர்களைக் கடந்து உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ஜாம்பவான்களாலும், ரசிகர்களாலும் கவனிக்கப்பட்டதோடு, பாராட்டவும்பட்டார் நடராஜன். சேலத்தின் ஒரு சிறிய கிராமத்திலிருந்து புறப்பட்ட 'சின்னப்பம்பட்டி எக்ஸ்பிரஸ்' ஆஸ்திரேலியாவில் வீசிய யார்கர்கள் பலரை சிலாகிக்கவும், சிலரை பொறாமை கொள்ளவும் வைத்தது. நூல் அளவு வேறுபாட்டில் அவர் இந்தியாவுக்காக வீசிய லைன்கள் பலரையும் க்ளீன் போல்ட் ஆக்கியது.
ஐபிஎல் தொடர் கொடுத்த மூன்றாண்டு அனுபவத்தோடு, ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணியில் நெட் பவுலராகச் சென்ற நடராஜனுக்கு மூன்று டி20 போட்டிகளிலும், ஒரு 50 ஓவர் போட்டியிலும் விளையாட வாய்ப்பு கிடைத்தது. தனக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொண்ட நடராஜன், நான்கு போட்டிகளில் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அறிமுக தொடரிலேயே தனது முத்திரையைப் பதித்து கிரிக்கெட் உலகையே தன்னை நோக்கித் திரும்பிப்பார்க்க வைத்துள்ளார் நடராஜன்.
பிரியங்கா ராதாகிருஷ்ணன்;
நியூசிலாந்து அரசியலில் கவனத்தைப் பெற்ற மற்றொரு இந்தியர் பிரியங்கா ராதாகிருஷ்ணன். ஜெசிந்தா ஆர்டனின் புதிய அமைச்சரவையில் சமூக மற்றும் தன்னார்வத் துறை அமைச்சராகவும், இளைஞர்கள் துறை அமைச்சராகவும் பதவியேற்றுள்ளார் பிரியங்கா. சென்னையில் பிறந்து நியூசிலாந்தில் குடியேறிய இவர், ஆக்லாந்தில் சமூக சேவைப் பணிகளில் ஈடுபட்டபோது, தொழிலாளர் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். அதன்பிறகு நடைபெற்ற 2017 நாடாளுமன்றத் தேர்தலில் மவுன்கீக்கி தொகுதியில் போட்டியிட்டு இவர் தோல்வியைத் தழுவினாலும், கட்சித் தேர்வினால், (நம் நாட்டின் மாநிலங்களவை உறுப்பினர் தேர்வு போல) நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். இதனையடுத்து, இந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மீண்டும் அதே மவுன்கீக்கி தொகுதியில் போட்டியிட்ட அவர், கணிசமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவுசெய்ததோடு, முதல் தேர்தல் வெற்றியிலேயே நியூசிலாந்து நாட்டின் சமூக மற்றும் தன்னார்வத் துறை அமைச்சராகவும், இளைஞர்கள் துறை அமைச்சராகவும் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார்.
ராஜா சாரி;
பூமியில் சாதனைகள் நிகழ்த்திய இந்தியர்களைப் பற்றியதான இந்தத் தொகுப்பில், விண்வெளியில் சாதனை புரியக் காத்திருக்கும் ஓர் இந்தியரும் இடம்பிடித்துள்ளார். ஹைதராபாத்திலிருந்து அமெரிக்காவுக்குச் சென்று குடியேறிய ஸ்ரீனிவாசன் சாரியின் மகனான ராஜா சாரி, 'ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ -3' பயணத்தின் ஒரு பகுதியாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கும், அதன்பின் நிலவுக்கும் பறக்கத் தயாராகி வருகிறார். 'நாசா', தனது ஆர்டெமிஸ் திட்டத்தின் கீழ், நிலவுக்குச் செல்லும் விண்வெளி வீரர்களை இறுதி செய்து அவர்களின் பட்டியலை அண்மையில் வெளியிட்டது. இதில் ராஜா சாரியும் இடம்பிடித்துள்ளார்.
நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி அமைப்போடு இணைந்து எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தங்களது இரண்டாவது குழுவை விண்வெளி ஆய்வு மையத்திற்கு அனுப்ப உள்ளது. இதில், ராஜா சாரி பயணக்குழுவுக்குத் தலைமை ஏற்க உள்ளார். இப்பயணத்திற்குப் பிறகு, அமெரிக்காவின் 2024 நிலவு பயணத்திலும் ராஜா சாரி இணையவுள்ளார். 1972ல் அப்பல்லோ 17 விண்கலப் பயணத்திற்குப் பிறகு மனிதர்கள் நிலவில் இதுவரை காலடி வைக்காத நிலையில், அமெரிக்காவின் இந்த உற்றுநோக்கப்படும் கனவுத்திட்டத்தில் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளார் ராஜா சாரி. அமெரிக்காவின் மேரிலேண்டில் உள்ள அமெரிக்கக் கடற்படை பயிற்சி பைலட் கல்லூரியில் விமானியாகத் தகுதி பெற்ற இவர், அமெரிக்க விமானப்படையில் எஃப் 35, எஃப் 15, எஃப் 16, எஃப் 18, எஃப்15இ போன்ற போர் விமானங்களை 2,000 மணி நேரங்களுக்கு மேல் இயக்கிய அனுபவம் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரிஷி சுனக்;
மோசமான உடல்நிலையோடு கரோனா வைரஸுடன் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் போராடிக்கொண்டிருக்கையில், 'அடுத்த பிரதமராக வாய்ப்புள்ளவர் இவர் தான்' என இந்தியர் ஒருவரைக் குறிப்பிட்டு செய்திகள் வெளியிட்டன ஊடகங்கள். அந்த இந்தியர்தான் பிரிட்டன் நாட்டின் தற்போதைய நிதியமைச்சரும், இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மருமகனுமான ரிஷி சுனக். பஞ்சாப் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ரிஷி சுனக்கின் பெற்றோர் ஆப்பிரிக்காவிலும், பின்னர் இங்கிலாந்திலும் குடியேறினர். இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் பிறந்தார் ரிஷி சுனக்.
கன்சர்வேடிவ் கட்சியில் முக்கிய நபர்களில் ஒருவராக இருந்த சுனக், 2019 ஆம் ஆண்டு போரிஸ் ஜான்சன் ஆட்சியின்போது கருவூலத் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து, கடந்த ஃபிப்ரவரி மாதம் போரிஸ் ஜான்சன், தனது அமைச்சரவையை மாற்றியமைத்த போது, பிரிட்டனின் நிதியமைச்சராக ரிஷி சுனக்கை நியமித்தார். நிதியமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர், பல்வேறு புதிய பொருளாதார சீர்திருத்தக் கொள்கைகளைப் பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் இணைந்து முன்னெடுத்தார் ரிஷி சுனக். கன்சர்வேடிவ் கட்சி உடனான நீண்ட நெடிய தொடர்பு, நிதியமைச்சராக இவரது செயல்பாடு மற்றும் பிரதமர் போரிஸ் ஜான்சனுடனான நெருக்கம் ஆகியவையே, போரிஸ் ஜான்சனுக்கு உடல்நிலை மோசமானபோது, இவர் அப்பதவிக்கு வரலாம் என்ற ஊகங்களை எழுப்பியது. கல்லூரி காலம் முதல் கன்சர்வேடிவ் கட்சியில் செயல்பட்டுவரும் ரிஷி சுனக், நிதியமைச்சராகப் பொறுப்பேற்றது, போரிஸ் ஜான்சனுக்கு மாற்றாகப் பேசப்பட்டது என அரசியல் வட்டாரங்களால் இந்த ஆண்டு அதிகளவு கவனிக்கப்பட்டார்.
சௌம்யா ஸ்வாமிநாதன்;
கரோனா பெருந்தொற்று காலத்தில் வைரஸ் பரவலின் நிலை, தடுப்பூசி ஆராய்ச்சிகள் குறித்த தகவல்கள், உலகநாடுகள் மேற்கொள்ளவேண்டிய சுகாதார நடவடிக்கைகள் என பல முக்கியத் தகவல்களை ஊடகங்கள் மூலம் மக்களுக்கு வழங்குவது, தடுப்பூசி ஆராய்ச்சிகளைக் கண்காணிப்பது உள்ளிட்ட கரோனா சார்ந்த பல்வேறு அணிகளை மேற்கொண்டவர் சௌம்யா ஸ்வாமிநாதன். 2019 ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியாகப் பொறுப்பேற்ற இவர், இந்தியப் பசுமைப்புரட்சியின் தந்தை என அழைக்கப்படும் எம்.எஸ். ஸ்வாமிநாதனின் மகள் ஆவார். சென்னையில் பிறந்து, புனே மற்றும் டெல்லியில் மருத்துவப்படிப்பை முடித்த சௌம்யா ஸ்வாமிநாதன், அமெரிக்காவில் நியோனாட்டாலஜி (புதிதாகப் பிறந்த குழந்தைகளின் மருத்துவக் கவனிப்பு) மற்றும் குழந்தை நுரையீரல் துறைகளில் நிபுணத்துவம் பெற்றார்.
குழந்தைகள் நலம், காசநோய் மற்றும் எச்.ஐ.வி ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாகச் செயல்பட்ட சௌம்யா ஸ்வாமிநாதன், உலக சுகாதார அமைப்பின் திட்டத் துணை இயக்குநர் ஜெனரலாக 2017 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இரண்டாண்டுகள் இதில் சிறப்பாகப் பணியாற்றிய அவர் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியாகப் பொறுப்பேற்றார். பொதுவாக, மக்களின் கவனத்தைப் பெரிதும் பெறாத இப்பொறுப்பு, இந்தாண்டு கரோனா வைரஸின் தாக்கம் காரணமாக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொறுப்பாக மாறிப்போனது. உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களின் மரணம், அதீத வைரஸ் பரவல், மக்களின் அச்ச மனநிலை என இவை அனைத்திற்கும் மத்தியில் தடுப்பூசி ஆராய்ச்சிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கை வழிகாட்டுதல்கள் எனக் கடந்த ஓராண்டில் பம்பரமாகச் சுழன்று பணியாற்றி பலரையும் தன் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்துள்ளார் சௌம்யா ஸ்வாமிநாதன்.
இவர்களைத் தவிர, அமெரிக்காவின் பொதுச் சுகாதாரம் மற்றும் மருத்துவ சிகிச்சைத் துறையை ஒட்டுமொத்தமாக நிர்வகிக்கும் மருத்துவத்துறைத் தலைவராக முன்மொழியப்பட்டுள்ள விவேக் மூர்த்தி, 'TIME's Kid of the Year' விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கீதாஞ்சலி ராவ், ஜோ பைடனின் பொருளாதார கமிட்டித் தலைவராகும் நீரா டாண்டன் என இவ்வாண்டில் பல இந்தியர்கள் தங்களது அசாத்திய செயல்பாடுகளாலும், சாதனைகளாலும் உலகளவில் கவனத்தைப் பெற்றுள்ளதோடு, சாதாரண பின்புலத்தோடு, நம்பிக்கையை மட்டுமே துணையாகக்கொண்டு தங்கள் கனவுகளைத் துரத்தும் லட்சக்கணக்கானோருக்கு உத்வேகத்தையும் அளித்துள்ளனர்.