தீவிரவாதி, தீவிரவாதம் என்பதற்கான பொருள் என்ன என்று கேட்டால் நம்மில் பலர் பயங்கரவாதத்தைத்தான் குறிப்பிடுவோம். ஆனால் பயங்கரவாதம் என்பது வேறு தீவிரவாதம் என்பது வேறு. தன் வாதத்தில் தீவிரமாக இருப்பவர்களைத்தான் தீவிரவாதிகள் என கூறுவார்கள். நமக்கு போராடுபவனையெல்லாம் கெட்டவனாகவே அரசு காட்டிவிட்டது என்பதுதான் உண்மை. ஆட்சியாளருக்கு அவர் தீவிரவாதியாக (பயங்கரவாதம்) தெரிந்தாலும், நாம் அவரை தீவிரவாதியாகவே (தன் வாதத்தில் தீவிரமாக இருப்பவர்) பார்க்கவேண்டும்.
பெங்களூர் விமான நிலையத்தில் அதிரடி கைது, ஸ்டெர்லைட் போராட்டமும், அங்கு நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு நீதிகேட்டு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் பேசியது, ஈழத்தமிழர்கள் கொலைக்கு நீதிகேட்டு ஐ,நா,வில் பேசியது, அதற்கான போராட்டங்கள், கூடங்குளம், மீத்தேன் வாயு, என தமிழகத்தின், தமிழர்களின் பிரச்சனைகள் பலவற்றுக்குப் போராட்டங்கள்... இவற்றிற்கெல்லாம் மேல் தேசத்துரோகி பட்டம் என இன்றைய திருமுருகன் காந்தி பிறந்தநாள் அதாவது நன்றாக நடந்துகொண்டிருந்த தொழில், நல்ல வருமானம், நல்ல தொழிலறிவு, நல்ல குடும்பம் இவையனைத்தையும் விட்டுவிட்டு தமிழர்களுக்காகவும், ஈழத்தமிழர்களுக்காகவும் வந்த ஒருநாள், அந்த நாள்...
திருமுருகன் கோயம்புத்தூரில் பிறந்தவர். அப்பா பெயர் காந்தி. தமிழ்நாடு மின்சாரத் துறை பொறியாளராக பணியாற்றியவர், தொழிற்சங்கவாதியாகவும் இருந்தார். போரட்டங்களின் விளைவாக பலமுறை தொழிற்சங்கத்தின் நடவடிக்கைக்கு ஆளாகி பல ஊர்களுக்கு மாறுதலாகியுள்ளார். திருமுருகன் காந்தியின் முதல் அரசியல் ஆசான் அவரது அப்பா என்றே கூறலாம். ஆரம்பக்கல்வியை மட்டும் அவிநாசி, சேலம், வத்தலக்குண்டு, மதுரை என நான்கு ஊர்களில் படித்தார் திருமுருகன். ஆறாம் வகுப்பு முதல் கோவையில் படித்துள்ளார். இளங்கலையில் அப்ளைட் சயின்ஸ், முதுகலையில் எம்.சி.ஏ. படித்து 1998ல் தனது முதுகலையை முடித்தார். அவர் படிக்க நினைத்தது வரலாறு, ஆனால் பெற்றோரின் வற்புறுத்தலால் எம்.சி.ஏ. படித்தார். 12ம் வகுப்பு படிக்கும்போது தேர்வுமுறையை மாற்றியமைக்க முயற்சித்தது அரசு. அதற்கு எதிராக போராடினார் திருமுருகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கோவையில் 2000ம் ஆண்டில் நாதென்ஸ்கா என்ற விளம்பர நிறுவனத்தை தனது 26வது வயதில் தொடங்கினார். ரஷ்ய எழுத்தாளர் தஸ்தாவெஸ்கியின் வெண்ணிற இரவுகள் சிறுகதையில் வரும் பெண் கதாபாத்திரத்தின் பெயர்தான் ‘நாதென்ஸ்கா’.அவரது வாசிப்பு பழக்கத்திற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. முதல் தலைமுறை தொழில்முனைவோர் சந்திக்கும் அத்தனை பிரச்சனைகளையும் சந்தித்தார். கடைசியில் அதை கைவிட்டுவிட்டார். அதன்பின் சென்னை வந்த அவர் மீண்டும் விளம்பர நிறுவனம் வைத்து நடத்தினார். நன்றாக நடந்துகொண்டிருந்த தொழில், நல்ல வருமானம் இவையனைத்தையும் மாற்றியது ஒரு சம்பவம்... அந்தநாள் இதுதான்... 2009 மே 17 முள்ளிவாய்க்காலில் நடந்த கொடூர படுகொலையில் 1,50,000 பேர் இறந்தனர். இந்த கொடூர செயலுக்கு தமிழகத்திலிருந்து பெரும் எதிர்ப்பு வந்தது. திருமுருகன் காந்திக்கு அவர் நண்பர் தகவல் கூறுகிறார், சாஸ்திரி பவன் அருகில் ஒருவர் தீ குளித்துவிட்டார் என்று. இதைக்கேட்ட திருமுருகன் காந்தி சாஸ்திரிபவனுக்கு விரைந்தார். அங்கு ஒரு இளைஞர் கிட்டதட்ட இறந்துவிட்டார். அவர் எழுதியிருந்த கடிதத்தை படித்தவுடன்தான் தெரிந்தது, இது உணர்ச்சிப்பூர்வமாக எடுத்த முடிவல்ல, ஈழத்தமிழர்களுக்காக உயிர் தியாகம் செய்துள்ளார் என்று. அந்த நாள்தான் தீவிரவாதி திருமுருகன்காந்தி பிறந்தநாள் என்று சொல்லலாம். இறந்த அந்த இளைஞர்தான் முத்து குமார்.
'இந்திய அரசு ஈழத்தமிழர் விஷயத்தில் பெரும் தவறிழைத்துள்ளது. இதை உலகறிய செய்யவேண்டும்' என எண்ணியவர் மே17 என்ற இயக்கத்தை தொடங்கினார். சிறுவயதிலிருந்தே புத்தக வாசிப்பு, பெரியாரிய சிந்தனைகள் கொண்ட திருமுருகன் தனது இயக்கத்தை தேர்தல் அரசியலிலிருந்து தவிர்த்து, இயக்க அரசியலில் ஈடுபட்டார். பெரியாருக்குப் பின், அரசியல் இயக்கமாக அனைவரும் கவனிக்கத்தக்கவகையில் வந்தது மே17 இயக்கம். இதன்பின்தான் அனைத்து போராட்டங்களிலும் மிக அதிகமாக இயங்கினார் திருமுருகன். 2010ம் ஆண்டிலிருந்து மே மாதம் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை மெரினாவில் ஈழத்தமிழர்களுக்கான நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்திவருகிறார், எந்தக் காரணம் கொண்டும் அது தடைபடக்கூடாது என்பதில் தீர்க்கமாக இருந்தார் திருமுருகன் காந்தி.
2016 மே 21 நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தபோதுதான் அவர் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டார் அவரோடு பிற அமைப்புகளைச்சேர்ந்த அருண்குமார், டைசன், இளமாறன் ஆகியோரும் கைதுசெய்யப்பட்டனர். அவர் கைது செய்யப்படுவதற்கு சில நிமிடங்களுக்குமுன் அவர் ஒரு வார்த்தைக் கூறினார், அதில் அவர்கள் இன்னும் தீர்க்கமாகவே உள்ளனர். அந்த வார்த்தை “துப்பாக்கிச்சூடு நடத்தினாலும் தமிழர் கடற்கரையில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடக்கும்”. திகார் சிறையோ... புழல் சிறையோ எங்களுக்கு ஒரு பொருட்டல்ல, 4 மாதங்களோ, 4 வருடங்களோ, 40 ஆண்டுகள் எங்களை சிறையில் தள்ளினாலும் நாங்கள் எதிர்கொள்வோம், அந்தமான் சிறையில் தள்ளினாலும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வோம் என்று கூறியதும் குறிப்பிடத்தக்கது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு குறித்து ஜெனீவாவில் நடந்த ஐ.நா. மனித உரிமை மாநாட்டில் திருமுருகன் காந்தி பேசினார். இதைத்தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் திருமுருகன் காந்தி மீது தேசத்துரோக வழக்கு பாய்ந்தது.
2013ல் ஜெர்மனியில் பிரீமென் நகரில் நடந்த நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தில் ஈழத்தில் நடந்த இனப்படுகொலையைப்பற்றி விளக்கினார். அந்த தீர்ப்பாயம் இலங்கையில் நடந்தது இனப்படுகொலைதான் என கூறியது. இனப்படுகொலைக்கு நியாயம் கேட்டு 2014,15,16, ஐ.நா. மற்றும் அதன் சார்பு கூட்டங்களில் வாதாடியுள்ளார். இப்படியாக ஈழம், ஸ்டெர்லைட் போன்ற பல பிரச்சனைகளுக்காக பல்வேறு கூட்டங்களிலும், தீர்ப்பாயத்திலும் பேசியுள்ளார். ஈழ தமிழர் உரிமை, இனப்படுகொலைக்கு நியாயம், தமிழர், தமிழ்நாடு என பல உள்நாட்டு ஊடங்கள் முதல் உலக ஊடங்கள் மற்றும் அரங்குகளில் வாதிட்டுள்ளார் திருமுருகன் காந்தி. அவரது செயல்பாடுகளில் இருக்கும் தீவிரத்தைதான் இந்த அரசு அவ்வாறு குறிப்பிடுகிறது.