Skip to main content

ரெய்டு விட்டு அ.தி.மு.க. வை அலறவிட்ட பா.ஜ.க. இப்போது தி.மு.க.வை நோக்கி ...

Published on 04/04/2019 | Edited on 04/04/2019

மார்ச்.29-ஆம் தேதி இரவு 10.30 மணி. வேலூர் காட்பாடி காந்தி நகரில் உள்ள தி.மு.க. பொருளாளர் துரைமுருகனின் வீட்டிற்கு முரளிதரன், மனோஜ், சதீஷ் என  மூன்று பேர் கொண்ட அதிகாரிகள் டீம் வந்திறங்குகிறது. தாங்கள் வருமானவரித்துறையில் இருந்து வருவதாகவும் வீட்டை சோதனை போட வேண்டும் எனவும் கூறியதை அடுத்து, துரைமுருகனுக்கு தகவல் தெரிவிக்கிறார்கள், அவரது வேலையாட்கள். சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்த துரைமுருகன், அவர்களைப் பற்றி விசாரிக்க, அரக்கோணம் தேர்தல் பார்வையாளர்கள் என்ற அடையாள அட்டையைக் காட்டியுள்ளனர்.

 

durai murugan



"இதை யார் வேண்டுமானாலும் காட்டலாம், முறையான ஆவணத்தையோ, செர்ச் வாரண்டையோ காட்டுங்க' என்றதும், வெளியில் சென்றவர்கள் மீண்டும் ஒரு மணி நேரம் கழித்து, விஜய்தீபன் என்ற வருமான வரித்துறை அதிகாரியுடன் வீட்டிற்குள் வந்தனர். இந்தத் தகவல் வெளியில் பரவி, ஏராளமான தி.மு.க.வினர் துரைமுருகன் வீட்டின் முன்பு குவிந்துவிட்டனர். 

 

duraimurugan



இதை பார்த்து டென்ஷனான ஐ.டி.டீம் "கூட்டத்தை ஏன் கூட்றீங்க' என துரைமுருகனிடம் கடுப்பு காட்ட, "என்னோட கட்சிக்காரங்க வர்றத நீங்க கேள்வி கேட்கக் கூடாது' என பதிலுக்கு துரைமுருகன் சூடானதும், காட்பாடி டி.எஸ்.பி.சங்கர் தலைமையிலான போலீஸ் படை வரவழைக்கப்பட்டது. 

ஒரு வழியாக ரெய்டு செய்வதற்கான பேப்பரை தயார் செய்து கொண்டு, பின்னிரவு 3 மணிக்கு வந்து, 30-ஆம் தேதி காலை 8.30 மணி வரை சோதனை நடத்தினர். இதே சமயம் துரைமுருகனின் மகனும் வேலூர் எம்.பி. தொகுதி வேட்பாளருமான கதிர் ஆனந்த் நடத்தும் கிங்ஸ்டன் இன்ஜினியரிங் கல்லூரி மற்றும் மாணவ-மாணவியர் விடுதிகளிலும் மாஜி தி.மு.க. மா.செ. ஆலங்காயம் தேவராஜ், மாஜி பொதுக்குழு உறுப்பினர் சக்கரவர்த்தி ஆகியோரது வீடுகளிலும் மாலை வரை சோதனை நடத்தினார்கள்.  மற்றபடி அவர்கள் நினைத்தபடி பெரிதாக எதுவும் கிடைக்கவில்லை.
 

duraimurugan



"ரெய்டெல்லாம் முடிச்சுட்டோம் ஓவர்…..ஓவர்….. பெருசா எதுவும் சிக்கல ஓவர்…ஓவர்'' என இங்கிருந்து தகவல் பாஸானதும், ""அப்படியெல்லாம் விட்ரக்கூடாது ஓவர்... ஓவர்... தி.மு.க. இமேஜை டேமேஜ் பண்ணுங்க ஓவர்...……ஓவர்''……என சிக்னல் கிடைத்ததும், ஏப்.01-ஆம் தேதி மீண்டும் ரெய்டை ஆரம்பித்தனர். 

மீண்டும் கிங்ஸ்டன் இன்ஜினி யரிங் காலேஜ், துரைமுருகன் குடும்பத்திற்கு நெருக்கமான பூஞ்சோலை சீனுவாசனின் வீடு, சிமெண்ட் குடோன், சீனுவாசனின் அக்கா வீடு, துரைமுருகனின் பி.ஏ.அக்ஸர் அலியின் வீடு உட்பட எட்டு இடங்களில் ரெய்டு அடித்தனர். மொத்தத்தில் கைப்பற்றப்பட்ட பணத்தை வீடியோவாக எடுத்து சென்னைக்கு அனுப்பி, அங்கிருந்தே மீடியாக்களுக்கு அந்த பணக்கட்டு வீடியோவை ரிலீஸ் செய்து சுறுசுறுப்பு காட்டினார்கள் ஐ.டி.அதிகாரிகள். 200 ரூபாய் நோட்டுக் கட்டுகள், வார்டு வாரியான விவரங்கள் எல்லாம் டி.வி சேனல்களில் ஃப்ளாஷ் ஆக, தி.மு.க. தரப்பில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இந்த ரெய்டு செய்திகள் பரவிக் கொண்டிருந்த நேரத்தில்தான், அதே வேலூர் மாவட்டத்தின் சோளிங்கர் இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்தார் மு.க.ஸ்டாலின். "இது மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கை' என விமர்சித்தார். 

தேர்தல் பணிகளை முடக்குவதாகக் கூறி, ரெய்டுக்கு எதிராக தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதையெல்லாம் பற்றி கவலைப்பட வேண்டாம் என மேலிடத்தி லிருந்து வந்த உத்தரவையடுத்து, ஓட்டுக்காக கதிர் ஆனந்த் தந்த பணம்தான் இது என சீனுவாசனை மிரட்டி வாக்குமூலம் வாங்கும் வேலைகளில் தீவிரம் காட்டுகிறது வருமான வரித்துறை. 

இந்த ரெய்டின் பின்னணி குறித்தும், அதன் பின்னணியில் இருப்பவர்கள் குறித்தும் நமக்கு நெருக்கமான உளவுத்துறை அதிகாரி யிடம் கேட்டோம். “""மத்திய உளவுத்துறையான ஐ.பி.யும் இங்கிருக்கும் உளவுத்துறையும் நாலு நாளைக்கு முன்னால எடுத்த சர்வேயில் ஆளும் கட்சி கூட்ட ணிக்கு சாதகமான சூழல் இல்லை. முதல்வர் எடப்பாடி யின் பிரச்சாரமும் சுத்தமா எடுபடல. இதனால் எதிர்க்கட்சி கூட்டணிக்கு உளவியல் ரீதியா அட்டாக் கொடுத்தா தான் சரிப்படும் என்பதால், தி.மு.க.வின் வெயிட்டான கேண்டிடேட்டாக இருக்கும் கதிர் ஆனந்தை இப்போதைக்கு குறி வைத்திருக்கிறார்கள். அடுத்த அசைன்மெண்ட் எப்போது, எப்படி என்பது தெரியல'' என்கிறார்.

வேலூர் மாநகர உ.பி.க்களோ, ""எங்களை எதிர்த்து நிற்கும் ஏ.சி.சண்முகத்தின் பிரஷ்ஷரும் இதில் இருக்கு. தினமும் அவரு 30 லட்ச ரூபாயை அள்ளி இறைக்கிறாரு. ஐ.டி.காரர் களுக்கு அதெல்லாம் தெரியாதா? அதைவிட முக்கியமானது, எங்க கட்சிக்குள்ளேயே இருக்கும் சிலர், பணம் இருக்கும் இடத்தை கரெக்டா போட்டுக் கொடுத்துவிட்டார்கள்'' என பகீர் கிளப்பினார்கள்.

ரெய்டு அடித்து ரெய்டு அடித்தே அ.தி.மு.க.வை அலறவிட்டு, கூட்டணிக்குப் பணிய வைத்த பா.ஜ.க., இப்போது தி.மு.க.வை நோக்கி அதே ஆயுதத்தை வீசியுள்ளது.