தேனி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து கரைபுரண்டு ஓடிவரும் பென்னிகுக் கட்டிய முல்லைப் பெரியாற்றில் இருகரைகளிலும் திராட்சை, நெல், வாழை, தென்னை என பச்சை பசேற் என்று விவசாய நிறைந்த அழகு பூமியாக காட்சியளிப்பதுதான் தேனி பாராளுமன்ற தொகுதி. அதோடு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, ஓபிஎஸ், என்று மூன்று முதல்வர்களை உருவாக்கிய பெருமையும் இந்த தேனி பாராளுமன்றத்திற்கு உண்டு.
முதன் முதலில் மதுரை மாவட்டத்திலிருந்து பெரியகுளம் பாராளுமன்ற தொகுதிதான் மறு சீரமைப்பு மூலம் தேனி பாராளுமன்ற தொகுதியாக மாறி இருக்கிறது. பழைய பெரியகுளம் தொகுதியில் தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம், தேனி, போடி, கம்பம், ஆண்டிப்பட்டி மற்றும் மதுரை மாவட்டத்தில் உள்ள சேடப்பட்டி ஆகிய சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்றிருந்தன.
இந்த மறுசீரமைப்பின் மூலம் தேனி, சேடபட்டி சட்டமன்ற தொகுதிகளை நீக்கிவிட்டு மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி, சோழவந்தான், ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளோடு தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம், போடி, கம்பம், ஆண்டிப்பட்டி என நான்கு சட்டமன்ற தொகுதிகளும் சேர்த்து ஆறு சட்டமன்ற தொகுதிகளை கொண்டதுதான் தற்போதுள்ள தேனி பாராளுமன்ற தொகுதி.
இந்த தொகுதியில் முக்குலத்தோர் சமூகத்திற்கு அடுத்தபடியாக தாழ்த்தப்பட்டோர் சமூகத்தினர், நாயக்கர், பிள்ளைமார், கவுண்டர், நாடார் உட்பட சில சமூகத்தினரும், முஸ்லீம், கிறிஸ்துவர்களும் கணிசமாக வாழ்ந்து வருகிறார்கள்.
அதுபோல் 1952ல் பாராளுமன்றம் தொகுதி உருவான காலத்திலிருந்து அ.தி.மு.க. ஏழு முறையும், காங்கிரஸ் ஐந்து முறையும் திமுக இரண்டு முறையும், சுதந்திர கட்சி மற்றும் முஸ்லீம்லீக் ஆகிய கட்சிகள் ஒருமுறையும் வெற்றி பெற்று இருக்கிறார்கள்.
இத்தொகுதியில் 1952 முதல் 2019 வரை வென்ற வேட்பாளர்கள் விவரம்:
இப்படி அதிமுக ஏழு முறையும், காங்கிரஸ் ஐந்து முறையும் பெரும்பான்மையாக வெற்றி பெற்றும் கூட இரு கட்சிகளிலும் வெற்றி பெற்ற எம்.பி.க்களும் மற்ற எம்.பி.க்களும் கூட பெயர் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஒரு திட்டத்தை கூட இத்தொகுதிக்கு கொண்டுவரவில்லை. தொகுதியில் தீர்க்கப்படாத பிரச்சனைகள் தான் ஒவ்வொரு பகுதிகளிலும் தலைவிரித்தாடுகிறது.
பல ஆண்டுகளாகவே தொகுதியில் தீர்க்கப்படாத பிரச்சனைகள்:
தமிழ்நாட்டில் ரயில் போக்குவரத்து இல்லாத ஒரே மாவட்டம் நமது முன்னாள் முதல்வரும், இன்னாள் துணை முதல்வருமான ஓபிஎஸ்-சின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டம்தான்.
கடந்த 1928ஆம் ஆண்டு முதல் மதுரையிலிருந்து தேனி வழியாக போடி வரை ரயில் போக்குவரத்து இருந்து வந்தது. இதன்மூலம் ஏலக்காய் வியாபாரிகள் தங்கள் சரக்குகளை வெளிமாநிலம் வரை அனுப்பி வைத்தனர். அதுபோல் பொதுமக்களுக்கும் பயனுள்ளதாக இருந்து வந்தது. இந்த நிலையில் தான் அகல ரயில் திட்டப்பாதை கொண்டு வருவதாக கூறி கடந்த 2010ல் ஓடிக் கொண்டு இருந்த ரயில் போக்குவரத்தையும் நிறுத்திவிட்டனர்.
அதன்பின் அகல ரயில்பாதைக்கான பணிகள் அசுர வேகத்தில் தொடங்கி இரண்டு வருடத்திலேயே ஆமை வேகத்திற்கு வந்த பணிகளை கொஞ்சம், கொஞ்சமாக குறைத்து கடைசியில் போதிய நிதி இல்லாததால் அந்த அகல ரயில் பாதை திட்டமே கடந்த ஒன்பது வருடங்களாக கிடப்பில் போட்டுவிட்டனர்.
அதிலயும் அதிமுக கூட்டணியில் உள்ள பிஜேபி அரசு மத்தியில் ஆட்சி செய்தும் கூட கிடப்பில் போட்ட அகல ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்த இந்த ஓபிஎஸ் ஆர்வம் காட்டவில்லை.
அதுபோல் திண்டுக்கல்லிலிருந்து கம்பம் லோயர் கேம்ப் வழியாக சபரிமலை வரை அகல ரயில்பாதை அமைக்கும் திட்டமும் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் பல ஆண்டுகளாக கிடப்பில் போட்டுவிட்டனர்.
தமிழ்நாடு, கேரளாவை இணைக்கும் சாக்கனூத்து மெட்டுச்சாலை, காமராஜபுரம், கிழவன்கோவில் மலைச்சாலை, போடியிலிருந்து அகமலை இணைப்புச்சாலை திட்டப் பணிகளும் அறிவிப்போடு கிடப்பில் கிடக்கிறது.
அதைவிட கொடுமை என்னவென்றால் எம்.ஜி.ஆர். காலத்தில் அறிவித்த மூல வைகையாற்றில் அணைக்கட்டும் திட்டமும் கூட ஜெ. ஓபிஎஸ்-சை தொடர்ந்து இபிஎஸ் முதல்வராக இருந்தும் கூட எம்.ஜி.ஆர். அறிவித்த அந்த திட்டத்தை செயல்படுத்த ஆர்வம் காட்டவில்லை. அதுபோல் கம்பம், பாளையம் பகுதிகளில் திராட்சை ஆராய்ச்சி மையம் உருவாக்கியும் கூட அது சரிவர செயல்படுத்தவில்லை. இப்பகுதியில் உள்ள கம்பம் பள்ளத்தாக்கு திராட்சை விவசாயிகளின் முக்கிய கோரிக்கை தொடர்ந்து வைத்து வந்த திராட்சை குளிரூட்டும் கிட்டங்ககியை கொண்டுவரவில்லை.
அதுபோல் ஓ.பிஎஸ்-சின் சொந்த ஊரான பெரியகுளத்திலிருந்து அடுக்கம் வழியாக கொடைக்கானலுக்கு ரோடு போடும் திட்டமும் அரைகுறையாக கிடக்கிறது. இதனால் பெரியகுளம் மற்றும் கொடைக்கானல் மக்களும், வியாபாரிகளும் நூறு கி.மீட்டர் சுற்றித்தான் விவசாய பொருட்களை கொண்டு வரக்கூடிய அவலநிலையில் இருந்து வருகின்றனர்.
இப்பகுதி மாம்பழ விவசாயிகளுக்காக குளிரூட்டும் கிட்டங்கி உருவாக்கித் தருகிறேன் என்று கூறி இத்தொகுதியின் எம்எல்ஏவாக இருந்தபோது ஓ.பி.எஸ். வாக்குறுதி கொடுத்திருந்தார். அந்த வாக்குறுதியும் இன்னும் காற்றில் பறந்து கொண்டு தான் இருக்கிறது.
ஆண்டிப்பட்டி டி.சுப்புலாபுரத்தில் 110 கோடிக்கு நெசவாளர் பூங்கா அமைக்கப்பட்டும் கூட செயல்படாமல் கிடப்பில் போட்டுவிட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும்பான்மையாக உள்ள நெசவாளர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள். வைகை அணை மூலம் உசிலம்பட்டி தாலுகாவில் உள்ள 58 கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு போவதற்காக 58ம் கால்வாய் திட்டம் கொண்டு வந்தும் கூட சரிவர செயல்படவில்லை. இதனால் அப்பகுதியில் உள்ள மக்களும், விவசாயிகளும் மனம் நொந்துபோய் உள்ளனர். அதுபோல் உசிலம்பட்டி நகரில் முந்நூறு கோடிக்கு கொண்டு வரப்பட்ட பாதாள சாக்கடை திட்டமும் கிடப்பில் போட்டுவிட்டனர்.
உசிலம்ப்டி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மயிலாடும் பாறையலிருந்து மள்ளப்புரம் இணைப்புச்சாலை அமைக்கக் கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். அதை முன்னாள் முதலவர் ஜெ.கூட நிறைவேற்றி தருவதாக வாக்குறுதியும் கொடுத்திருந்தார். ஆனால் அப்பகுதியில் ஏழு கி.மீட்டர் தூரத்திற்கு சாம்பல் நிற சரணாலயமாக இருப்பதால் மத்திய அரசிடம் அனுமதி வாங்க இந்த அதிமுக அரசும் ஆர்வம் காட்டாமல் கிடப்பில் போட்டுவிட்டன.
ழவந்தான் நகரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக அரைகுறையாக இருக்கிறது. ஜல்லிக்கட்டு நடத்த அனுமதியிருந்தும் கூட ஒவ்வொரு முறையும் கோர்ட்டுக்கு போய் தான் அனுமித வாங்கி வந்து நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்களே தவிர சுதந்திர இந்தியாவில் சுதந்திரமாக ஜல்லிக்கட்டு நடத்த முடியவில்லை என்ற வருத்தமும் இத்தொகுதி தக்களிடம் இருந்து வருகிறது.
இப்படி இந்த தேனி பாராளுமன்ற தொகுதியில் இன்னும் பல பிரச்சனைகள் தீர்க்கப்படாமலேயே பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. ஆனால் ஒவ்வொரு பாராளுமன்ற தேர்தலிலும் மற்றும் சட்டமன்ற தேர்தலிலும் அரசியல்வாதிகள் ஓபிஎஸ் உள்பட இந்த தீர்க்கப்படாத பிரச்சனைகளை தீர்த்து வைப்பதாக கூறி மக்களை தொடர்ந்து ஏமாற்றி ஓட்டு வாங்கிகிட்டு போய்விடுகிறார்கள். மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுக்க தொகுதியில் வெற்றி பெற்ற எம்.பி.களும், எம்.எல்.ஏ.க்களும் இதுவரை ஆர்வம் காட்டவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர் பொதுமக்கள்.
தற்போது சிட்டிங் எம்.பி.யாக இருக்கும் அதிமுகவைச் சேர்ந்த பார்த்திபனோ சமூக ரீதியான மக்கள் மூலம் பெரும்பான்மையான வித்தியாசத்தில் வெற்றி பெற்றும் கூட வாக்களித்த மக்களும் பெயர் சொல்லும் அளவுக்கு எந்த ஒரு திட்டத்தையும் கொண்டுவர ஆர்வம் காட்டாமல் ஓபிஎஸ்-சின் காரில் இடம் பிடிப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டி வந்தார்.
பாராளுமன்ற தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதியில் இருக்கும் வாக்காள மக்களின் விவரம்
இதில் கடந்த பாராளுமன்ற தேர்தலை விட இந்த பாராளுமன்ற தேர்தலில் 1,34,117 வாக்குகள் புது வாக்காளர்கள் களத்தில் இறங்கி உள்ளனர்.
இந்த நிலையில்தான் 17வது தேர்தலை வாக்காள மக்கள் சந்திக்க இருக்கிறார்கள். இந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் களமிறங்கி இருக்கிறார். அதுபோல் திமுக தனது கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு இத்தொகுதியை ஒதுக்கியும் கூட இந்த வேட்பாளரை களமிறக்கவில்லை. அதுபோல் டிடிவி அணி சார்பிலும் வேட்பாளர் களமிறக்கவில்லலை. இருந்தாலும் இத்தொகுதியை பொறுத்தவரை இளம் விசுவாசிகள் பெரும்பான்மையாக இருப்பதால்தான் ஏழுமுறை இத்தொகுதியை தக்க வைத்து அதிமுக கோட்டையாக இருந்து வருகிறது.
தேனி பாராளுமன்ற தொகுதியில் ஜாதி, மத ரீதியாக வாக்காளர்களின் விவரம் வருமாறு:
ஆனால் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் இருந்தால் தான் இத்தொகுதியை தக்க வைக்கிறார்களே தவிர, அதிமுக போல் கட்சி வளர்ச்சி மூலம் வெற்றி பெற வாய்ப்பில்லாமல் இருந்து வருகிறது.
தற்போது அதிமுக இரண்டுபட்டு டிடிவி தனி அணியாக உருவாகி இருப்பதால் இத்தொகுதியில் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய முக்குலத்தோர் பிரிவில் உள்ள கள்ளர், மறவர் சமூகத்திற்கு இடையே டிடிவி தினகரன் மற்றும் தங்கத்தமிழ்ச்செல்வன் தோல்வி எதிரொலி மூலம் கருத்து வேறுபாடுகள் தொடர்ந்து இருந்து வருகிறது. அதன்மூலம் ஓபிஎஸ் மகனின் வெற்றிக்கும் கேள்விக்குறியாக இருந்து வருகிறது.
இந்த நிலையில்தான் டிடிவி அணி சார்பில் முக்குலத்தோர் பிரிவிலேயே பிரமலைக்கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை களமிறக்கினால் இத்தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள பி.கே. சமூகத்தில் உள்ள இலை விசுவாசிகளின் ஓட்டுக்கள் பிரியும். இதனை பயன்படுத்தி திமுக காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராக ஆரூண் களமிறங்கினால் மீண்டும் ஆரூணுக்கு ஒரு வாய்ப்பு இருக்கு. அப்படி ஆரூண் களமிறங்காமல் காங்கிரசில் வேறு ஒருவரை களமிறக்கினால் வெற்றி வாய்ப்பும் கேள்விக்குறியாகிவிடும் என்கின்றனர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பெயருக்கு பி.கே.சமூகத்தினரவோ, அல்லது மாற்று சமூகத்தினரவோ டிடிவி களமிறக்கினார் என்றால் பி.கே. ஓட்டுக்களும் சிதற வாய்ப்புள்ளது. அதன்மூலம் ஓபிஎஸ் தனது மகனுக்காக அதிகாரம், பணபலத்தை இறக்குவதின் மூலம் இத்தொகுதி அதிமுக கோட்டையாக உருவாக வாய்ப்பு இருக்கிறது என்கின்றனர் கட்சியினர்!