தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு கடந்த மூன்று ஆண்டுகளாக தள்ளிப்போட்டு வந்த ஆளும் அதிமுக அரசு உச்சநீதிமன்ற உத்தரவால் விரைவில் உள்ளாட்சி மன்றத்திற்கான தேர்தல்களை நடத்தவேண்டிய இறுதி நெடுக்கடிக்குள் வந்துள்ளது. இதைத்தொடர்ந்து டிசம்பர் அல்லது ஜனவரிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் அதிமுக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான திமுக இரண்டு தலைமைகளும் தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ள கட்சியினரை விருப்ப மனு செய்ய அறிவித்ததோடு திமுகவில் சென்ற 14 ஆம் தேதியில் இருந்து விருப்ப மனுக்கள் அந்தந்த மாவட்ட கட்சி அலுவலகத்தில் மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. அதேபோல் 15 மற்றும் 16 ஆகிய இருநாட்களில் அதிமுக விருப்ப மனு வாங்கியது.
இந்த பின்னணியில் அதிமுக கூட்டணி காட்சிகளுக்குள் பதவியை பெறுவதில் போட்டி குழப்பம் சலசலப்பு என உருவானது. அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக தங்களுக்கு 5 மேயர் பதவிகள் வேண்டும் எனவும், அடுத்துள்ள பாமக 4 மேயர் பதவி வேண்டும் என்றும் அடுத்து தேமுதிக 3 மேயர் பதவியை எங்களுக்கு உறுதிப்படுத்த வேண்டும் என்றும் இது போதாதற்கு புதிய நீதி கட்சியான ஏசிசண்முகம் 1 மேயர் பதவி வேண்டும் என்றும் இப்படி கூட்டணி கட்சிகள் மொத்தமுள்ள 15 மேயர் பதவிகளில் 13 கணக்குப்போட இதையெல்லாம் ஆராய்ந்து பார்த்த எடப்பாடி வேறு கணக்கை போட்டார். அதுதான் ஒரே கல்லில் பல மாங்காய் அடிப்பது என்ற திட்டம்.
ஆம், அந்த திட்டம்தான் தேர்தெடுக்கப்படும் கவுன்சிலர்கள் மூலம் மேயர்கள் மற்றும் நகராட்சி தலைவர்கள், பேரூராட்சி தலைவர்களை தேர்ந்தெடுப்பது. ஒவ்வொரு உள்ளாட்சி மன்றத்திலும் தேர்ந்தெடுக்கப்படும் கவுன்சிலர்கள் மறைமுக ஓட்டுப்போட்டு மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர்களை தேர்ந்தெடுப்பது. இந்த கணக்குப்படி முதலில் கவுன்சிலராக வெற்றிபெற்று வாருங்கள் அப்புறம் நீங்கள் கேட்கிறபடி மேயர் பதவி, நகராட்சி தலைவர் பதவி, பேரூராட்சி தலைவர் பதவி பற்றி கலந்துக்பேசிக்கொள்வோம், இதுதான் எடப்பாடி போட்ட மாங்காய் அடிக்கும் திட்டம்.
மாநகராட்சிம் முதல் பேரூராட்சி வரை கவுன்சிலர் பதவிகளை அதிமுகவிற்கு நிகராக கூட்டணி கட்சியினர் பெறமுடியாது என்பதே உண்மை நிலை. உதாரணத்திற்கு ஈரோடு மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் இதில் பாஜக சார்பில் 1 அல்லது 2 வார்டுகளில் போட்டியிடும் அளவிற்கு அந்த கட்சியின் பலம் உள்ளது. அதேபோல் தேமுதிக 3, பாமக 1 இந்த வரிசைப்படிதான் கவுன்சிலர் சீட் பெறமுடியும். இதிலும் போட்டியிடும் அந்த கட்சியை சேர்ந்தவர்கள் வெற்றிபெறுவர்களா என்பது உறுதிப்படுத்த முடியாது. இப்படியிருக்க இவர்களைவிட அதே இடங்களில் அதிமுக வெற்றிபெற வாய்ப்பிருக்கும். ஆக தேமுதிக கேட்கிற 3 மாநகராட்சிகளில் ஈரோடும் ஒன்று ஒரேஒரு கவுன்சிலர் இடம்கிடைத்து தேமுதிக மாநகராட்சிக்குள் நுழைந்தால் அதிகமுள்ள அதிமுகவினர் எப்படி தேமுதிகவுக்கு மேயர் பதவியை ஏற்றுக்கொள்ளவார்கள். நடைபெறாத ஒன்றாக அதிமுக கூட்டணி கட்சியினர் ஒட்டுமொத்தமாக முதல்வர் எடப்பாடியிடம் ஏமாந்துள்ளதாக புலம்ப தொடங்கிவிட்டனர்.
முதல்வர் எடப்படியோ எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது என்று கூறிக்கொண்டாலும் ஒட்டுமொத்தமாக உள்ளாட்சி மன்ற தலைவர் பதவிகளை அதிமுக வசமே வைத்துக்கொள்ளும் திட்டம்தான் இது.