தமிழ்த்தாய் வாழ்த்து
சர்ச்சையும் சரித்திரமும்

தமிழ்த்தாய் வாழ்த்து இப்பொழுது மீண்டும் பரபரப்பாக பேசப்படுகிறது. சமீபத்தில் ஒரு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலித்த பொழுது, காஞ்சி சங்கர மடத்தைச் சேர்ந்த விஜயேந்திரர் எழுந்து மரியாதை கொடுக்காமல், அமர்ந்திருந்தார். அந்த சமயத்தில் அவர் தியானம் செய்ததாக சங்கர மடம் விளக்கம் அளித்தது. ஏற்கனவே 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் ஜூலி, பாடலாசிரியர் சினேகன் ஆகியோர் தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதியவர் தாயுமானவர் என்று சொல்லி பரபரப்பைக் கிளப்பினர். பின்னர், தமிழக அமைச்சர் ஒருவரே பெயரை மாற்றிக் கூறினார். இப்பொழுது விஜயேந்திரர் அவமதித்த விவகாரம் என சமீபமாக பரபரப்பிலேயே இருக்கும் நம் தமிழ்த்தாய் வாழ்த்தின் வரலாறு இதோ...
தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை "மனோன்மணியம்" பெ.சுந்தரனார் தனது நூலான மனோன்மணீயத்தில் ( லிட்டன் பிரபு என்ற ஆங்கிலேயேர் எழுதிய "இரகசிய வழி" எனும் நூலின் மொழிபெயர்ப்பு நூலாகும்) வரும் துதிப்பாடல்களுக்குள் ஒரு பாடலாக இது வரும். இந்தப் பாடலின் இடையில் வரும் சில வரிகள் (ஆரியம் போல தமிழ் உலகவழக்கழிந்து சிதையவில்லை என்பதை குறிக்கும் வரிகள் ) நீக்கப்பட்டு தமிழின் பெருமையை கூறும் வரிகள் மட்டும் இடம்பெற்றிருக்கின்றன.

"மனோன்மணியம்" பெ.சுந்தரனார்
தமிழ்த்தாயை வாழ்த்தும் விதமாக பாடப்படுவதுதான் தமிழ்த்தாய் வாழ்த்து. அரசு விழாக்களும், பள்ளி, கல்லூரி விழாக்களும் தொடங்கும்போது பாடப்படவேண்டியதாகும். 1970ஆம் ஆண்டு கலைஞர் தலைமையிலான தமிழக அரசு இந்தப்பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்தது.
"நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!"
*இதில் சிவப்பு வண்ணத்தில் இருக்கும் வரிகள் நீக்கப்பட்டவை.
கமல்குமார்