Skip to main content

கேரளாவைப் போல் தமிழகத்தில் எப்போது... அபாயத்தை நோக்கி தமிழகம்... அலெர்ட்டா இருப்பாரா இபிஎஸ்? 

Published on 27/04/2020 | Edited on 27/04/2020

 

admk



தமிழகத்தில் கரோனா வெகுவேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. ஊரடங்கு காலத்தில் ஒரு சில மாவட்டங்களில் கட்டுப்பாடான நிலை இருந்தாலும், பெரும்பாலான பகுதிகளில் நிலவரம் கலவரமாகவே உள்ளது. இந்தியாவின் பல மாநிலங்களிலும் இதே நிலைதான்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கரோனா பரவிய விதத்தின் அடிப்படையில் அலசி ஆய்வு செய்தால், இந்தியாவுக்கும் இது நெருக்கடியான காலம்தான். இந்தப் போக்கு நீடித்தால், வரும் மே மாத இறுதியில் குறைந்தது 38 ஆயிரம் உயிர்ப்பலிகளை எதிர்கொள்ளக்கூடிய அபாயத்தில் இந்தியா இருக்கிறது என கணக்கிடப்பட்டுள்ளது. அதுபோல, மே 6ந் தேதி வாக்கில் 8000 பேர் ஐ.சி.யூ. வில் அனுமதிக்கப்பட வேண்டியிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கணக்குகளை இந்திய ராணுவ மருத்துவக் கல்லூரியும், ஐ.ஐ.டி. புனேயும், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் ஆகிய மூன்று அமைப்புகளும் சேர்ந்து வெளியிட்டுள்ளன.


 

 

doctor



கரோனா மூன்றாம் கட்டத்திற்கு சென்றுவிட்டதா என்ற கேள்விக்கு அதிகாரப்பூர்வமாக பதில் சொல்ல அரசு மருத்துவத்துறை தயங்குகிறது. தமிழகத்தில் இதுவரை கரோனா ஒரு இரண்டாம் நிலை தொற்று, அது மூன்றாம் சமூக தொற்றாக மாறவில்லை. இதுவரை தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் அவர்களுக்கு யாரால் இந்த நோய் வந்தது என்பதை எளிதாக கண்டுபிடித்து சொல்ல முடியும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சொல்லிக்கொண்டே இருக்கிறார். ஆனால் இதுவரை தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் 61 பேருக்கு யாரால் கரோனா நோய் வந்தது என கண்டுபிடித்து சொல்லவே முடியவில்லை என்கிறார்கள் கரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்கும் நேர்மையான மருத்துவர்கள்.

கரோனா நோய் வாணியம்பாடி காவல்நிலையத்தில் உள்ள ஒரு ஆய்வாளரை தாக்கியிருக்கிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அர்ச்சகர் ஒருவரை தாக்கியுள்ளது. கோவை போத்தனூர் காவல்நிலைய அதிகாரியை தாக்கியுள்ளது. இதுதவிர 30க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களை இந்த நோய் தாக்கியுள்ளது.

சென்னையில் ஒரு கர்ப்பிணியை இந்த நோய் தாக்கியுள்ளது. அடையாறு பகுதியில் இரண்டு டாக்டர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. இவர்களுக்கெல்லாம் யாரிடம் இருந்து கரோனா வந்தது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.

 

kit



வரும் மே மாதம் ஒன்றரை லட்சம் பேர் இந்த நோயின் தாக்குதலுக்கு உள்ளாவார்கள். அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு 40 ஆயிரம் வெண்ட்டி லேட்டர்கள் தேவை என பயமுறுத்துகிறார்கள் கரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள். இதில் சோகமான விஷயம் என்னவென்றால்... தருமபுரி, தூத்துக்குடி, ராம நாதபுரம் போன்ற பின்தங்கிய மாவட்டங்களில் ஏராளமானோர் கரோனா நோயால் பாதிக்கப்பட்டு அவர்களில் பலர் செயற்கை சுவாசம் எனப்படும் வெண்டிலேட்டர் மூலமாகத்தான் சிகிச்சை பெற வேண்டுமென்றால் அந்த வெண்டிலேட்டர்களை இயக்குவதற்கு தேவையான தொழில்நுட்ப பணியாளர்கள் கிடைப்பது கடினம்.

தற்பொழுது தமிழ்நாடு முழுவதும் 33 கரோனா நோய் தொற்றை கண்டுபிடிக்கும் ஆய்வகங்களை தமிழக அரசு திறந்துள்ளது. அந்த ஆய்வகங்களில் வேலை செய்யக்கூடிய தொழில்நுட்ப பணியாளர்கள் இல்லை என தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதற்கிடையே கரோனா நோய் சிகிச்சையில் தப்பும் தவறுமாக பல முடிவுகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் சிபாரிசின் பேரில் 4 லட்சம் ரேபிட் சோதனை கருவிகளுக்கு தமிழக அரசு ஆர்டர் கொடுத்தது. அதில் 32 ஆயிரம் கருவிகள் தமிழகத்திற்கு வந்து சேர்ந்தது. அந்த ரேபிட் சோதனை கருவிகளில் தமிழக முதல்வர் எடப்பாடி, தலைமைச் செயலக அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் என 300க்கும் மேற்பட்டவர்கள் தங்களுக்கு கரோனா நோய் தொற்று இருக்கிறதா என சோதனை செய்தார்கள். அவர்கள் அனைவருக்கும் கரோனா நோய் தொற்று இல்லை என்று ரேபிட் சோதனை கருவி ரிசல்ட் அளித்தது. ஆனால் அந்த ரேபிட் சோதனைக் கருவி கரோனாவை சோதனை செய்வதற்கு தகுதியானது அல்ல என மத்திய அரசு அறிவித்துவிட்டது.

தமிழகத்திற்கு வந்த ரேபிட் கருவிகளுக்கு தமிழக அரசு பணம் கொடுத்துவிட்டது. இந்த ரேபிட் சோதனை கருவிகள் சீனாவிலேயே தவறான முடிவுகளை காட்டியது. அதனால்தான் சீன அரசாங்கம், சீனாவில் கரோனாவே இல்லை என அறிவித்தது. அதன்பிறகு ஏகப்பட்ட புதிய கரோனா நோய் தொற்றுகள் சீனாவில் தெரிய வந்தது. இந்த புதிய கரோனா நோய் தொற்றுக்கள் எல்லாம் ரேபிட் சோதனை கருவியில் நெகட்டிவ் என கரோனா நோய் என காண்பிக்கப்பட்ட சோதனை முடிவுகள்.

 

 

tts



கரோனா நோய் ஒரு நாட்டை முழுமையாக பாதித்து, அந்த நாட்டு மக்கள் அந்த நோயில் இருந்து விடுபட்டவுடன் அவர்களது ரத்தத்தில் கரோனா நோய் எதிர்ப்பு மூலக்கூறுகள் தென்படும். அதை இந்த ரேபிட் கருவிகள் மூலம் கண்டுபிடிக்க முடியுமே தவிர, கரோனா நோய் ஆரம்பக்கட்டத்தில் பாதிப்பு ஏற்படுத்துவதை கண்டுபிடிக்க முடியாது. சீன அரசு இந்த கருவியை ஆரம்பக்கட்ட கரோனா நோய் தொற்று நோயாளிகளிடம் பரிசோதித்து தோல்வியடைந்தது. அதைப்பற்றி சரியாக புரிந்து கொள்ளாமல் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் தமிழகத்திற்கு அந்த கருவிகளை வாங்க பரிந்துரைத்தது.

தமிழக அரசும் கோடிக்கணக்கான ரூபாயை முப்பது சதவிகித கமிசனுடன் வியாபாரம் பேசி ஆர்டர் கொடுத்தது. இப்பொழுது அந்த கருவிகள் வீணாகிவிட்டது.

ஏற்கனவே இந்த கருவிகளை வாங்க கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டு சீன கம்பெனிகளிடம் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள் தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தின் நிர்வாக இயக்குநரான உமாநாத் ஐ.ஏ.எஸ். தலைமையிலான அதிகாரிகள். இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறையோ எந்தெந்த நாடுகளிலிருந்து ரேபிட் கருவிகள் வாங்கப்பட்டதோ அந்த நாடுகளுக்கே அவை திருப்பி அனுப்பப்படும் என அறிவித்துள்ளது. இது வர்த்தக உறவின் அடிப்படையில் எந்தளவு சாத்தியம் என்பது இனிதான் தெரியும்.

கரோனா என்பது ஒரு கருணையற்ற தொற்று வியாதி. அது எந்த சூழ்நிலையிலும் யாருக்கு வேண்டுமானாலும் வரும். கேரளாவில் 29 நாட்கள் கண்காணிப்பில் இருந்த ஒருவருக்கு 29 நாட்கள் கழிந்த பிறகு கரோனா வந்ததிருக்கிறது. அதேபோல் ஒரு பெண்ணிற்கு பல நாட்கள் சிகிச்சை பெற்ற பிறகும் கரோனா நோய் தொற்று குணமாகவில்லை. கரோனாவுக்கு எதிராக மலேரியாவுக்கு எதிராக பயன்படுத்தும் மாத்திரை, கரோனா நோய் குணமானவர்களின் ரத்தத்தில் இருந்து எடுக்கப்பட்ட நோய் எதிர்ப்பு கிருமிகள் அடங்கிய பிளாஸ்மா இவற்றுடன் நுரையீரலில் தண்ணீர் தங்கி மரணம் அடைந்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க உபயோகப்படுத்திய sepsis எதிர்ப்பு மருந்து என பலவற்றை மருத்துவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் ஊரடங்கு காலம் முடிந்தவுடன் இந்தியாவில் நோய் தொற்று மிக அதிகமாக அதிகரிக்கும். அந்த நேரத்தில் இன்று கரோனாவை கட்டுப்படுத்தி வைத்துள்ள கேரளம் உள்பட எந்த மாநிலமும் அதன் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியாது என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

ஊரடங்கு காலம் முடிவதற்கு முன்பே கரோனா தொற்றை கண்டுபிடித்து அழித்துவிட வேண்டும் என கேரளா அரசு கரோனா நோய் தொடர்பே இல்லாத மக்கள் மத்தியில் கரோனா நோய் தொற்று சோதனைகளை வேகமாக நடத்தி வருகிறது. ஆனால் தமிழக அரசு சோதனை செய்யக்கூட போதிய தொழில்நுட்ப பணியாளர்கள் கூட இல்லாமல் திணறி வருகிறது.

ஊடகத்தினர் மீதான நோய்த்தொற்று, தமிழக அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தான கேள்விகளை அதிகளவில் எழுப்புகிறது. முதல்வர், அமைச்சர், உள்துறைச் செயலாளர், தலைமைச் செயலாளர் என மீடியா வெளிச்சத்துக்காகப் போட்டி போட்டுக் கொண்டு நேரலைக்காக பேட்டி அளித்தபோதே, டி.எம்.எஸ். வளாகத்தில் நோய்த் தொற்று இருப்பது குறித்து ஊடகத்தினர் எச்சரிக்கை விடுத்தனர். அதையும் மீறி, தொடர்ச்சியாக பேட்டிகள் அளிக்கப்பட்டன.

 

ிு



தமிழகத்தில் பெரும்பாலான தொற்று, டெல்லி மாநாட்டின் ஒற்றை சோர்ஸ் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், அந்த சோர்ஸ்களுடன் எவ்வகையிலும் தொடர்பில்லாத ஊடகத்தினருக்கும், மதுரை பட்டர் குடும்பத்திற்கும் நோய்த் தொற்று வந்திருப்பது தமிழக அரசின் கவனக் குறைவுகளை வெளிப்படுத்துவதாகவே உள்ளது என்கிறார்கள் விவரமறிந்த மருத்துவர்கள்.

இந்த நிலையில் கரோனா நோய் தொற்று பரவல் மூன்றாம் கட்டமான சமூக தொற்றாக மாறி பரவி வருவதால் அதை கட்டுப்படுத்த பல மாவட்டங்களில் மெடிக்கல் ஷாப்புகளை தவிர அனைத்துக் கடைகளையும் மூடி முழு ஊரடங்கை மூன்று நாட்களுக்கு அறிவித்துள்ளது. இதெல்லாம் போதாது, கேரள அரசைப் போல மக்கள் மத்தியில் களம் இறங்கி தீவிரமான சோதனைகளை நடத்தினால்தான் கரோனா நோயாளிகளையும், அவர்கள் மூலமாக தொற்றுக்கு உள்ளானவர்களையும் கண்டுபிடிக்க முடியும் என்கிறார்கள் நேர்மையான சுகாதாரத்துறை அதிகாரிகள்.