குடித்துக் கொண்டாடிய தமிழ்க்குடி!
230 கோடி டாஸ்மாக் சாதனை

கடந்த டிசம்பர் 31ஆம் தேதி, காலை 11.30 மணிக்கு சென்னை ஃபீனிக்ஸ் மாலில் படம் பார்க்கச் சென்றேன். போகும் வழியில், தரைத் தளத்தில் பூட்டியிருந்த ஒரு கடை முன்பு கிட்டத்தட்ட 60-70 பேர் நின்று கொண்டிருந்தனர். என்னவென்று விசாரித்தபொழுதுதான் தெரிந்தது, அது எலீட் டாஸ்மாக் என்று. சென்னை புத்தாண்டுக்கு தயாராகிவிட்டதை உணர்ந்தேன். 12 மணிக்கு திறக்கப்படவிருக்கும் கடையில் வாங்கிக்கொண்டு புத்தாண்டை வரவேற்க மதியத்திலிருந்தே தயாராகிறது சென்னை. இளைஞர்கள், பெரியவர்கள் அனைவரும் விதவிதமான பைகளுடன் காத்துக்கொண்டிருந்தனர். இப்பொழுது வந்திருக்கும் 'புத்தாண்டை ஒட்டிய டாஸ்மாக் விற்பனை 230 கோடி' என்ற தகவல் அவர்களின் காத்திருப்பை அர்த்தமாக்கியிருக்கின்றன.

2018 ஆம் ஆண்டின் தொடக்கத்தை இதுவரை இல்லாத அளவில் தமிழகமே கொண்டாடித் தீர்த்திருக்கிறது. இந்தாண்டில் அனைவரின் வாழ்வும் வளமாக ஒரு புறம் ஆராதனைகளும் வேண்டுதல்களும் நடைபெற மற்றொரு புறம் கொண்டாட்டமாக நினைத்துக்கொண்டு மது அருந்திவிட்டு மரணபயம் இல்லாமல் பைக்குகளையும், கார்களையும் அதீத வேகத்தில் ஓட்டுவதும், இரு சக்கர வாகனங்களின் சைடு ஸ்டாண்டுகளை சாலையில் உரசி தீப்பொறி வர ஓட்டுவதும், வழியில் செல்வோரின் அருகில் சென்று ஆவேசமாக 'ஹேப்பி நியூ இயர்' என்று கத்துவதுமாக ஒரு கூட்டம் கொண்டாடுகிறது. இந்த ஆண்டு அது பன்மடங்கு பெருகியிருந்தது. அது போல தமிழகத்தில் புத்தாண்டு விபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் தலைநகர் சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் மட்டுமே ஐவர் விபத்தினால் உயிரிழந்துள்ளனர், 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் .இதில் அனைவரும் முப்பது வயதைக் கடக்காத இளைஞர்கள்தான். காவல்துறையினர் ஆல்கஹால் பரிசோதிக்கும் கருவிகள் வைத்திருப்பதால், அதில் அகப்படாத வகையில் போதை மருந்துகளையும் பயன்படுத்தினர் சிலர்.

சென்னையில் ஒரு மது விடுதியில் கொடுத்த பணத்திற்கேற்ப மது தரவில்லையென அந்த பாரை அடித்து உடைத்து பிரச்சனை செய்திருக்கின்றனர் வாடிக்கையாளர்கள். இளைஞர்களின் புத்தாண்டுக் கொண்டாட்ட மோகத்தைப் பயன்படுத்தி, ஊரில் உள்ள பெரிய, சிறிய பார்கள் அனைத்திலும் யாராவது ஒரு நகைச்சுவை நடிகரையோ சின்னத்திரை நடிகைகளையோ அழைத்து வந்து புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகளை ஏற்பாடு செய்து பணம் பார்க்கின்றன. சென்னை மட்டும் தான் இப்படி உள்ளது என்றால் கொங்கு மண்டலம் நாங்கள் உங்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்று எந்த வருடமும் இல்லாத அளவுக்கு 3000 க்கும் அதிகமான 'மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய' வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த வழக்குகளில் சிக்கிய 90% பேர் இளைஞர்கள் தான்.

சென்னை, கோவை போன்ற நகரங்களில் இது போன்று விபத்துகள் ஏற்படுகிறது என்றால் கிராமப் புறங்களிலும் இந்த ஆண்டு குடிமக்கள் கொண்டாட்டம் நடந்தது. கொண்டாட்டத்தில் இரண்டு ஊர்களுக்கிடையில் சண்டையே வந்துவிட்டது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள குடிகாடு கிராமத்தினருக்கும் ஆம்லாபட்டு கிராமத்தினருக்கும் இடையில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் பொழுது சண்டை ஏற்பட்டுள்ளது. அதனால் ஆம்லாபட்டுவை சேர்ந்தவர்கள் குடிகாடு கிராமத்தினரின் வீட்டுக்குள் புகுந்து டிவி, மரசாமான்களை சேதப்படுத்தி 14 நபர்களை தாக்கியுள்ளனர். இதனால் குடிகாட்டை சேர்ந்தவர்கள் தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டி தஞ்சாவூர் -பட்டுக்கோட்டை சாலையில் இரண்டு மணி நேரம் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் பலனாக 6 நபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நள்ளிரவில் ஒளிபரப்பப்படும் சகலகலாவல்லவன் பட 'ஹாய் எவ்ரிபடி... இளமை இதோ இதோ' பாடலும், தேவாலயங்கள், கோவில்களில் நள்ளிரவு பிரார்த்தனைகளும் தான் புத்தாண்டு கொண்டாட்டமாக இருந்தது. இப்பொழுது வேற லெவெலில் நடக்கிறது. கொண்டாட்டங்கள் நல்லது தான், ஆபத்துகளைக் கொண்டுவராதவரை.
ஹரிஹரசுதன்