Skip to main content

போலாம் ரைட்…

Published on 30/03/2022 | Edited on 30/03/2022

 

ss dmk

 

திமுக ஆட்சி அமைந்த பிறகு முதல்முறையாக அமைச்சரவையில் மாற்றம் வந்திருக்கிறது. முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரைச் சாதி கூறி விமர்சித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ராஜகண்ணப்பன் துறை மாற்றப்பட்டுள்ளது. ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்.எஸ்.சிவசங்கர், போக்குவரத்துத் துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்.

 

தீவிர திராவிட இயக்க பற்றாளரும் கலைஞருக்கு பக்க பலமாக இருந்தவருமான மறைந்த எஸ். சிவசுப்ரமணியன் மகன் எஸ்.எஸ்.சிவசங்கர். 1996 – 2001 அரியலூர் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர், 2001-2006 அரியலூர் மாவட்ட ஊராட்சி உறுப்பினர், 2006-ல் ஆண்டிமடம் சட்டமன்ற உறுப்பினர், 2011-ல் குன்னம் சட்டமன்ற உறுப்பினர், 2016 ல் அரியலூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு, குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். 2021-ல் குன்னம் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.

 

ss dmk

 

கடந்த முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது அவருக்கு, 8ம் வகுப்பு படித்து வந்த மாணவி செம்பருத்தி என்பவர், எங்கள் பகுதியில் நூலகம் அமைத்து தர வேண்டும் என மனு ஒன்றை அனுப்பியிருந்தார். இந்த மனு குறித்து விசாரித்தபோது, அந்த பகுதியில் நூலகமானது தனியார் கட்டிடத்தில் இயங்கி வந்ததாகவும், அதனால் அடிக்கடி நூலகம் திறக்கப்படாததையும் அறிந்தார் எஸ்.எஸ்.சிவசங்கர். உடனே தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய நூலகத்திற்கான கட்டிடத்தை அமைத்தார். அந்த புதிய நூலகத்திற்கான கட்டிடத்தை, எங்கள் ஊருக்கு நூலகம் வேண்டும் என்று கோரிக்கை வைத்த மாணவி செம்பருத்தியை வைத்தே திறக்க வைத்தார். அந்த கட்டிட திறப்பு விழா கல்வெட்டிலும் அந்த மாணவி பெயர் இடம்பெறும்படி செய்தார். இதனை திமுகவினரை தாண்டி அனைத்து தரப்பினரும் வரவேற்றனர்.

 

தற்போது (2021) அமைச்சரான உடன், அரியலூர் மாவட்டம் ஆனந்தவாடி கிராமத்திலிருந்து ஜெயங்கொண்டத்துக்கு கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை ஏற்று ஆனந்தவாடி கிராமத்திலிருந்து இரும்புலிக்குறிச்சி, உடையார்பாளையம் வழித்தடத்தில் ஜெயங்கொண்டம் சென்று வரும் வகையில், கூடுதல் அரசு பேருந்தை தொடங்கிவைத்த  எஸ்.எஸ்.சிவசங்கர் பேருந்தை சிறிது தூரம் ஓட்டிச் சென்றார். அந்த வீடியோ காட்சி அப்போது ட்ரெண்ட் ஆனது.

 

ss dmk

 

தனியார் தொலைக்காட்சியில் நடந்த விவாத நிகழ்ச்சியில் இட ஒதுக்கீடு குறித்து பேசிய ஒரு மாணவிக்கு இடஒதுக்கீடு என்றால் என்ன? அதன் தேவை ஏன் ஏற்பட்டது? திராவிட கட்சிகள் இடஒதுக்கீடு விஷயத்தில் செய்ததெல்லாம் என்னவென்று மிக எளிமையாக அனைவருக்கும் புரியும் வகையில் விளக்கம் அளித்தார்.

2011ல் எம்.எல்.ஏ.வாக இருக்கும்போது சட்டமன்றத்தில் நடக்கும் நிகழ்வுகளை நக்கீரன் இதழில் விறுவிறுப்பாகவும் சுவையாகவும் தொடர்ச்சியாக எழுதி வந்தார். 2021 சட்டமன்றத் தேர்தலில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர், ஜெயங்கொண்டம், குன்னம் ஆகிய தொகுதிகளில் அரியலூர் தொகுதி கூட்டணியில் உள்ள மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. ஜெயங்கொண்டம், குன்னம் தொகுதிகளில் திமுக போட்டியிட்டது. இதில் குன்னம் தொகுதியில் போட்டியிட்ட எஸ்.எஸ்.சிவசங்கர், தான் போட்டியிட்ட குன்னம் தொகுதியைப்போலவே மற்ற இரண்டு தொகுதிகளிலும் கடுமையாக வேலை பார்த்து வெற்றி பெற வைத்தார்.

 

ss dmk

 

2018 கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், பாஜக, குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் தேர்தல் களத்தில் போட்டியிலிருந்த போது யார் முதல்வராக வருவார்கள் என்ற விவாதமும் கருத்துக்கணிப்புகளும் நடந்து கொண்டிருந்தது. அப்போது பணி நிமித்தமாக கார்நாடகா போயிருந்த சிவசங்கரிடம் நாம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க  நக்கீரனில் கர்நாடக சட்டமன்ற தேர்தலைப் பற்றி கட்டுரையாக எழுதினார், அதில் உறுதியாக குமாரசாமி தான் முதல்வராக வருவார் என்றும் எழுதினார்.

 

அந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக கணிசமான ஓட்டு வாங்கியிருந்தது. ஆனால் குமாரசாமியோ குறைவான சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றிருந்தார். ஆட்சியமைக்கப் போன எடியூரப்பாவால் ஆட்சியமைக்க முடியாமல் போன போது, அடுத்தபடியாக கவர்னரை சந்திக்கப்போன குமாரசாமி தான் முதல்வராக ஆனார். 2019 நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிட்ட சிதம்பரம் தொகுதியில் அவரது வெற்றிக்கு அரும்பாடுபட்டார். தேர்தல் முடிவின் இழுபறியின் போது கடைசிவரை உடன் இருந்து வெற்றியை உறுதி செய்யும் வரை வாக்கு எண்ணும் மையத்தில் இருந்தார்.

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர்ச்சியாக சமூகநீதி கருத்துக்களை தன் எழுத்தின் மூலம் பல இளைஞர்களைத் திராவிட சிந்தனைகளில் ஈர்த்தவர். சோழன் ராஜா ப்ராப்தி, மக்களோடு நான், தோழர். சோழன் ஆகிய புத்தகங்களை எழுதி உள்ளார்.

 

ss dmk

 

2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சரவை ஒதுக்கும்போது பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக  தேர்ந்தெடுக்கப்பட அவர், தொடர்ச்சியாக பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டதும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. இளைஞர்களுக்குத் தொடர்ச்சியாக திராவிட இயக்க கொள்கைகள் குறித்த வகுப்புகளை எடுத்து வந்தார். அமைச்சரான பின்னரும் அந்த வகுப்புகளை எடுத்து வந்தார். அந்த வகையில், 29 மார்ச் 2022 அன்றும், இளைஞர்களுக்கு வழக்கம்போல் திராவிட இயக்க கொள்கைகள், திராவிட மாடல் குறித்து வகுப்பெடுத்துக் கொண்டிருந்தபோது, இலாக்கா மாற்றப்பட்ட தகவல் அவருக்கு வந்தது.

 

கடந்த காலங்களில் அரியலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் மாநில அளவில் பெரிய அமைச்சரவை பொறுப்பு யாருக்கும் கிடைத்ததில்லை, தங்களுக்கு கிடைத்திருப்பதற்கு வாழ்த்துக்கள் என்று பல்வேறு தரப்பினர் வாழ்த்து சொல்லி வருகின்றனர்.