Skip to main content

வழக்குப் போட்டால் பயப்பட மாட்டோம்... எகிறி அடிப்போம் - பேராசிரியை சுந்தரவள்ளி பேச்சு!

Published on 07/11/2020 | Edited on 07/11/2020

 

jlk

 

மனுநீதி தொடர்பாக சர்ச்சை எழுந்த நிலையில், பா.ஜ.க.வினர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர், திருமாவளவனுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர். இதனை எதிர்த்தும், மனுநீதியைத் தடை செய்ய வலியுறுத்தியும் சென்னையில் போராட்டம் நடைபெற்றது.

 

இதில் கலந்து கொண்ட பேராசிரியர் சுந்தரவள்ளி பாஜகவினரை கடுமையாக தாக்கிப் பேசினார். அவரின் பேச்சு வருமாறு, "இன்றைக்கு இந்தியா முழுவதும் சனாதனத்துக்கு எதிரான போர் நடைபெற்று வருகின்றது. பிற்படுத்தப்பட்ட மக்களை, நீங்கள் வந்து பாருங்கள் என்று அழைப்பதை எதிர்த்து இன்றைக்குப் போர் புரிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்தியாவில் போர் என்றால் அது தமிழகத்தில் இருந்து புறப்பட்டதாக இருக்க வேண்டும். எனவே அதை இன்றைக்கு நாம் ஆரம்பித்து வைத்துள்ளோம். ஏனென்றால், கருப்பு, சிவப்பு, நீலம் என்று மூன்று படைகளை வைத்திருக்கின்ற மாநிலம் நம்முடையது.

 

பெரியவர்கள் எல்லாம் இருக்கிறார்கள் என்பதற்காக நான் அடக்கிப் பேச வேண்டியிருக்கிறது. இந்தக் காவிக் கும்பலை அவர்களின் போக்கிலே சென்றுதான் அடக்க வேண்டியிருக்கும். அது காவிக்கும்பல் மட்டும் அல்ல, காலிக் கும்பல். அவர்களை அடித்து விரட்ட படைகளைக் கொண்ட தலைவர்கள் தேவையில்லை, எங்களை மாதிரி தொண்டர்கள் போதும். எங்களுக்குப் பயம் ஏற்படுத்த வழக்குப் போடுவேன் என்று கூறுகிறார்கள். எங்களை வழக்குகள் போட்டு எல்லாம் பயமுறுத்த முடியாது. 

 

நாங்களே இந்த வழக்குகளுக்கு எல்லாம் அஞ்ச மாட்டோம். திருமா எப்படிப் பயப்படுவார் என்று நினைக்க வேண்டாமா? அண்ணன் திருமா உங்களுக்கு என்ன தனி ஆளாகத் தெரிகிறாரா? அவர் தமிழ்நாட்டில் தனி ஆளா அல்லது இந்தியாவில் தனி ஆளா? இல்லை, மானுட விடுதலையை நேசிக்கும் கோடிக்கணக்கான தம்பி தங்கைகள் அவர் பின்னால் நிற்கிறோம். நீங்கள் வந்து பாருங்கள், எங்கள் அண்ணனுக்கு முன்னாடி கோட்டையாக நாங்கள் நிற்போம்.

 

உங்களால் அவரை தொடக்கூட முடியாது.  நான் மேடைக்காகப் பேசுகிற ஆள் இல்லை என்பது இங்கு இருப்பவர்களுக்கு நன்றாகத் தெரியும். அண்ணன் கூப்பிட்டுப் பதவி கொடுக்க மாட்டார். ஏனென்றால் நான் இந்தக் கட்சியிலேயே இல்லை. நாம் கூவுகிறதை வைத்து மக்கள் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது என்பதற்காக தெளிவாகச் சொல்கிறேன். அவரின் பின்னால் அணிதிரள ஒரே ஒரு காரணம் இருக்கிறது. அது, ஒடுக்கப்பட்ட மக்களின் ஒரே குரலாக அவர் இருப்பதே காரணம். 

 

cnc

 

பா.ஜ.க என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறது என்றால் எல். முருகனை வைத்து நம்மை எடை போட்டுவிடலாம் என நினைக்கிறது. அவர் யார், பா.ஜ.க மாநிலத் தலைவராக இருக்கிறார். ரப்பர் ஸ்டாம்பாக தொடர்ந்து இருந்து வருகிறார். அதைப் போல தமிழக மக்களையும் பா.ஜ.க.வினர் நினைத்துவிட்டார்கள். ஆனால் தமிழக மக்கள் விவரமானவர்கள், ஏமாற மாட்டார்கள், அவர்களை நாட்டை விட்டு அடித்து விரட்டுவார்கள் என்பதை மட்டும் உறுதியாகக் கூறிக்கொள்கிறேன்.

 

எதற்காக அண்ணன் மீது தற்போது வழக்குப் போட்டுள்ளார்கள் தெரியுமா? ஒருவாரமாக அண்ணன் அடித்த அடி அப்படி. ஆளுநரை வாபஸ் வாங்கு என்று போராட்டம் நடத்தி அடிமடியில் கைவைத்தார். அவரை எப்படி கட்டிப்போடலாம் என்று யோசித்து இப்படி ஒரு வதந்தியை அவர்கள் கட்டவிழ்த்துள்ளார்கள். இந்தப் பொய்ப் பித்தலாட்டம் எல்லாம் தமிழ்நாட்டில் செல்லுபடியாகாது. குஜராத்தில், ஹரியானா மாநிலங்களிலேயே உங்களைத் தூக்கிப்போட்டு மிதிக்கும் போது, தமிழ்நாட்டில் இருக்கும் நீலப்படை இளைஞர்கள் உங்களைச் சும்மா விடுவார்களா என்ன, எனவே இவர்களின் 'பாச்சா' தமிழகத்தில் பலிக்காது" என்றார்.