Skip to main content

குடியுரிமை விவகாரத்தை பற்றி பேசாத ரஜினி அண்ணாவை பற்றி பேசலாமா..? - இடும்பாவனம் கார்த்திக் பேச்சு!

Published on 13/03/2020 | Edited on 13/03/2020

நீண்ட இழுபறிக்கு பிறகு நேற்று செய்தியாளர்களை சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் வருகை தொடர்பாக சில செய்திகளை தெரிவித்தார். தனக்கு முதல்வர் பதவியில் விரும்பம் இல்லை என்றும், ஆட்சி அதிகாரத்தை தான் ஏற்கப்போவதில்லை என்றும் தெரிவித்தார். ரஜினியின் இந்த அறிவிப்புக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வரவேற்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில் இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்திக்கிடம் கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 

 

fg



ரஜினிகாந்த் நேற்று செய்தியாளர்களை சந்தித்து நீண்ட உரையை நிகழ்த்தினார். அரசியலுக்கு வருவது தொடர்பாக பல்வேறு கருத்துக்களை அவர் பத்திரிக்கையாளர்கள் முன்பு பேசினார். தனது பேச்சின் ஒரு பகுதியாக தனக்கு முதல்வர் பதவி மீது ஆசையில்லை என்றும், என்னால் முதல்வர் நாற்காலியை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை என்றும், எனக்கு அது செட்டாகாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ரஜினியின் இந்த கருத்துக்கள் ஒருபுறம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரின் ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் ரஜினியின் இந்த கருத்தை வரவேற்பதாக நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்துள்ளார். ரஜினியையும், அவரது அரசியல் பயணத்தையும் எதிர்த்து வரும் நீங்கள், தற்போது அவரின் அறிவிப்பை வரவேற்கும் நோக்கம் என்ன?

ரஜினிகாந்த் நான் முதல்வர் வேட்பாளராக இருக்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். அதனை நாங்கள் வரவேற்றுள்ளோம். முதல்வர் வேட்பாளர் என்ற முறையே தேர்தல் அரசியலில் இதுவரை இருந்ததில்லை. ஆனால் தற்போது முதல்வர் வேட்பாளர்களை அறிவிக்கிறார்கள், பிரதமர் வேட்பாளர்களையே முன்கூட்டியே அறிவிக்கும் நடைமுறைகள் இந்தியாவில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. ரஜினி தற்போது தலைமை பொறுப்புக்கு வரமாட்டேன், ஆட்சி பீடத்தை அலங்கரிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். அதனை நாங்கள் வரவேற்பதாக கூறியுள்ளோம். அந்த முடிவைத்தான் தற்போது ஆதரிப்பதாக கூறியுள்ளோம். மற்றபடி அவரிடம் பல்வேறு முரண்பாடுகள் எங்களுக்கு தொடர்ந்து இருந்து வருகின்றது. கட்சி தலைவராக அவர் இருப்பதாக கூறினாலும், முதல்வர் பதவியில் அமரமாட்டேன் என்று கூறியதைத்தான் ஏற்றுக்கொள்வதாக தொடர்ந்து கூறிவருகிறோம். 

எனக்கு பிடித்த தலைவர் அண்ணா என்று கூறுகிறார். அண்ணா என்ன சொன்னார், அவர் வாழ்க்கை முழுவதும் மாநில தன்னாட்சி பற்றி தானே பேசினார். மாநிலத்தில் இப்போது தன்னாட்சி நடைபெறுகின்றதா? அதை பற்றி ரஜினி ஏன் பேசவில்லை. மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படுகின்றது. அது வருடக்கணக்கில் கிடப்பில் கிடக்கின்றது. அதை பற்றி ரஜினி ஏதாவது பேசியிருக்கிறாரா? அதைபற்றி பேசினால் தானே அண்ணாவை அவர் எனக்கு பிடித்த தலைவர் என்று கூற தார்மீக தகுதியிருக்கும். ஆனால் அதைப்பற்றி அவர் எதுவுமே கூறவில்லை.

இன்று நாடு முழுவதும் அசாதாரண சூழ்நிலை நிலவுகின்றது. தேவையில்லாமல் குடியுரிமை திருத்த சட்டத்தை இயற்றி முஸ்லிம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளார்கள். இதைப்பற்றி அவர் ஏதாவது பேசினாரா என்றால் இந்த சட்டத்தை பற்றியோ அதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களுக்கு ஆதரவாகவோ அவர் எதையும் பேசவில்லை. மாறாக எதைபற்றியும் பேசாமல் எனக்கு அண்ணைவை பிடிக்கும் என்பது மக்களை ஏமாற்றும் செயலாகத்தான் நாங்கள் பார்க்கிறோம்.