Skip to main content

சுபஸ்ரீ மரணம்; நக்கீரனுக்கு கிடைத்த பிரத்யேக ஆவணம்! 

Published on 23/05/2023 | Edited on 23/05/2023

 

Subhasree case; Nakeeran received a special document!

 

தொடர் முயற்சிக்குப் பிறகு சுபஸ்ரீயின் பிரேதப் பரிசோதனை அறிக்கை ‘நக்கீரனுக்கு’ பிரத்யேகமாகக் கிடைத்திருக்கின்றது. பிரேதப் பரிசோதனை அறிக்கைக்கு செல்லுமுன், ‘ஈஷாவின் சைலன்ஸ் ஹவர்’ நிகழ்ச்சியில் கலந்துகொள்ள 11-12-2022 அன்று சென்ற சுபஸ்ரீ, 18-12-2022 அன்று ஈஷாவை விட்டு வெளியேறி பின்னங்கால் பிடறித்தெறிக்க ஓடினார். இதனை சி.சி.டி.வி. காட்சிகளும் உறுதிப்படுத்தின. ஆனால், அன்று மாயமான சுபஸ்ரீ சரியாக இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையான 01-01-2023 அன்று மாயமான அதே செம்மேட்டுப் பகுதி காந்தி காலனியில் மூன்று நபர்களுக்குச் சொந்தமான தென்னந்தோப்பின் கிணற்றில் குப்புறக் கிடந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.

 

01-01-2023 ஆலாந்துறை காவல் நிலையத்தாரால் பதிவு செய்யப்பட்ட வழக்கின்படி சுபஸ்ரீயின் உடலை அன்றே பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தியது கோவை அரசு மருத்துவமனை. அவசர அவசரமாகப் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் என்ன? யாருக்காக இதனைச் செய்கிறீர்கள்? என மாதர் சங்கமும், உறவினர்களும் கேள்வியெழுப்பிய நிலையில் அதனை பொருட்படுத்தாது பிரேதப் பரிசோதனை செய்து உறவினர்களிடம் வலுக்கட்டாயமாக ஒப்படைத்தது ஆலாந்துறை காவல்துறை. ஆனால் பிரேதப் பரிசோதனை அறிக்கையை சுபஸ்ரீயின் கணவருக்குக் கூட இறுதிவரை வழங்காத ஆலாந்துறை காவல்துறை, யாருக்காகவோ தன்னுடைய கட்டுப்பாட்டில் மறைத்து வைத்து அழகு பார்த்தது. இத்தகைய நிலையில், சுபஸ்ரீயின் பிரேதப் பரிசோதனை அறிக்கை ‘நக்கீரனுக்கு’ பிரத்யேகமாக கிடைத்த நிலையில் அதனை அப்படியே பதிவு செய்கின்றோம்.

 

Subhasree case; Nakeeran received a special document!

 

தடயவியல் மருத்துவத்துறை, கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி & மருத்துவமனையால் வழங்கப்பட்ட பி.எம். எண் 12/2023, தேதி 01.01.2023 கொண்ட பிரேதப் பரிசோதனை ஆய்வறிக்கையோ, க்ரைம் எண் 191/2022-ன் படி ஆலாந்துறை காவல் நிலையத்தாரால் 01.01.2023 அன்று பிற்பகல் 03.55 மணிக்கு பெறப்பட்ட கடிதத்தின் மூலம் சிந்து என்கின்ற பெண் எஸ்.எஸ்.ஐ. உடனிருக்க, 34 வயதுடைய சுபஸ்ரீ என்ற பெண்ணின் உடல் பகுப்பாய்வு செய்யப்பட்டது. மருத்துவர்கள் ஜெயசிங், பால வெங்கட பெருமாள் ஆகியோரால் 04.35 மணிக்கு தொடங்கப்பட்ட பிரேதப் பரிசோதனையில் முதற்கட்டமாக பிரேதத்தின் அங்க அடையாளங்களாக, “சுமார் 34 வயதுடைய ஒரு பெண்ணின் உடல் அது! அதனுடைய விரல் மற்றும் கால் நகங்கள் புஷ் நிறத்தில் இருந்தன. உடம்பில் அணிந்திருந்த ஆடைகளில் சேறு படிந்திருந்த நிறத்தில் கால் சட்டை மற்றும் மேல்சட்டை, வெள்ளை மற்றும் வயலட் நிற உள்ளாடைகள் அணியப்பட்டிருந்தன. இடது மணிக்கட்டில் ஈஷாவின் அடையாளமான எண் 111-420-76 கொண்ட பேண்டும், இடது மோதிர விரலில் ஒரு மெட்டா மோதிரமும், வலது மோதிர விரலில் தங்க மோதிரமும் இருந்தது. இரண்டு காதுகளும் சிதைந்து துளைக்கப்பட்ட நிலையில் காதில் வளையங்கள் இல்லை. பற்களுக்கு இடையில் நாக்கின் நுனி கடிக்கப்பட்ட நிலையில் மேல் உதட்டின் மேல் மீன் கடித்த அடையாளமும் இருந்தது. இடது கீழ் முன் பகுதியில் புருவம் இல்லாமலும், வலது மற்றும் இடது ஆள்காட்டி விரலின் நுனிப் பகுதி சிதைந்த நிலையிலுள்ள எலும்பை வெளிப்படுத்துகிறது. எனினும் இறுதி அறிக்கைக்காக உள்ளுறுப்புகள் ஒதுக்கப்பட்டு ரசாயன ஆய்வுக்கு அனுப்பப்பட்டது’ என்கின்றது முதற்கட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கை.

 

Subhasree case; Nakeeran received a special document!

 

ரசாயன ஆய்வு அறிக்கை எண் CBE/Tox.h/07/2023 தேதி 18.01.2023 மற்றும் எண் RT.8002/2023,CBE/BIOL/02/2023ன் இறுதி அறிக்கையோ, “உள்ளுறுப்புகளில் எந்த விஷமும் இல்லை. மார்பெலும்பு மற்றும் நீர் மாதிரியில் டயட்டம் கண்டறியப்படவில்லை. யோனி ஸ்வாப் மற்றும் ஸ்மியர்களில் விந்தணுக்கள் கண்டறியப்படவில்லை. நீரில் மூழ்கியதாலேயே மரணம்” என்றது.

 

“கடந்த சில நாட்களுக்கு முன்பு சுபஸ்ரீயின் வழக்கினை விரைந்து முடிக்க ஆலாந்துறை காவல் நிலையத்திற்கு உத்தரவு வந்தது. இதன் ஒருகட்டமாக இந்த பிரேதப் பரிசோதனை அறிக்கையை முன்வைத்து சுபஸ்ரீயின் கணவர் பழனிக்குமாரை குற்றவாளியாக்க முனைந்துள்ளது காவல்துறை. குறிப்பாக, சுபஸ்ரீ இந்த சம்பவத்திற்கு முன்பு இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றதாகவும், இதனை சரிசெய்ய வேறு வழியில்லாமல் ஈஷாவில் விட்டுச் சென்றுள்ளதாகவும், மீண்டும் கணவரிடம் சென்றால் இம்சை என்ற அளவில் கணவருக்குத் தெரியாமல் ஓடி வந்து கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்திருக்கலாம். ஆகையால் குற்றவாளி சுபஸ்ரீயின் கணவர் பழனிக்குமாரே என கதை புனைந்து வருகின்றது ஆலாந்துறை காவல்துறை. யாரையோ காப்பாற்ற பழனிக்குமார் குற்றவாளி ஆகிறார்” என்கிறார் அங்கு பணியாற்றும் நேர்மையான போலீஸார் ஒருவர்.

 

பழனிக்குமாரின் உறவினர் ஒருவரோ, “அது எப்படி..? பழனிக்குமார் குற்றவாளி ஆக முடியும்..? செம்மேடு சி.சி.டி.வி. காட்சிகள் தவிர ஈஷாவிலிருந்து வெளியேறிய எவ்வித சி.சி.டி.வி. காட்சிகளையும் ஈஷா வெளியிடவில்லை. அப்படி எனில் சந்தேகம் ஈஷா மீதுதான்! அதுபோக, பழனிக்குமாரின் புகார் படி, சுபஸ்ரீ கலந்துகொண்ட சைலன்ஸ் வகுப்பு காலை 11 மணிக்கு முடிவடையும் என்பதால் அவரை அழைத்துச் செல்ல காத்திருந்தேன். பிற்பகல் 3 மணி வரையும் அவர் வராததால் ஈஷா மையத்தினரிடம் விசாரிக்கையில் சுபஸ்ரீ சர்ப்ப வாசல் வழியாக காலை 9.30 மணிக்கு வெளியே சென்றதாகத் தெரியவந்தது. பின் 90******38 என்கின்ற எண்ணிலிருந்து வந்த மிஸ்டுகாலை கொண்டு விசாரிக்கையில் என்னுடைய கணவரிடம் பேச வேண்டுமென ஒரு பெண் மொபைலை வாங்கிப் பேசியதாகத் தெரியவந்தது. அதன்பின் தொடர்ச்சியாக விசாரிக்கையில், ‘சுபஸ்ரீ கால்டாக்சியில் ஏறி செம்மேடு முட்டத்துவயலில் இறங்கியதாகக் கூறப்படுகின்றது’ என்கின்றது. கணவரை விட்டு ஓட நினைப்பவர் எதற்காக கணவரிடம் பேச முயற்சிக்க வேண்டும்? இப்பொழுதும் கூறுகிறேன். விசாரிக்க வேண்டியது ஜக்கியைத்தான். தன்னையும், தன்னுடைய ஈஷாவையும் காப்பாற்ற ஜக்கி போடும் தகிடுதத்தம்தான் இது” என்கிறார் அவர்.

 

இது இப்படியிருக்க, பிரேதப் பரிசோதனை அறிக்கையில், “வலது மற்றும் இடது ஆள் காட்டி விரலின் நுனிப்பகுதி சிதைந்த நிலையில் உள்ள எலும்பை வெளிப்படுத்துகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. யாரையோ சுட்டிக்காட்டி அழுத்தமாகப் பேசிய நிலையில் சுபஸ்ரீயின் விரல் சிதைக்கப்பட்டிருக்கலாம். இதை ஏன் விசாரிக்கவில்லை? சுபஸ்ரீ இறுதியாக பழனிக்குமாரிடம் பேச முயற்சித்த கால் டாக்சி ஓட்டுநரை தீர விசாரிக்காதது ஏன்? உள்ளூர் போலீஸை தவிர்த்து சி.பி.சி.ஐ.டி. போலீஸார் விசாரித்தால் மட்டுமே சுபஸ்ரீயின் மர்ம மரணத்திற்கு விடை கிடைக்கும்” என்கின்ற ஆதங்கக் குரல்கள் காவல்துறை தலைமையை நோக்கி எழுகின்றன.