கடந்த இரண்டு வாரங்களாக தமிழகம் முழுவதும் பல அரசியல் விமர்சனங்கள், விவாதங்களில் "சிலை" என்ற ஒற்றை வார்த்தையே சுற்றி சுற்றி வருகிறது. ஒரு பக்கம் ஜெ.வின் நிமிரா விசுவாசிகள் உருவாக்கிய சிலையில் ஆறு விரல்கள், தஞ்சையில் ராஜராஜசோழன் சிலையை காணவில்லை, திரிபுராவில் லெனின் சிலை அகற்றம், பெரியார் சிலை நீக்கப்படும் என்று ஹெச்.ராஜாவின் அட்மின் போட்ட பதிவு, எம்.ஜி.ஆர் சிலை திறப்பு விழாவில் பேச்சால் விளாசிய புதிய அரசியல்வாதி ரஜினிகாந்த் என இந்த ஒருவார சம்பவங்கள் அனைத்தும் சிலை, சிலை என சிலை வட்டாரத்திலேயே சுற்றிவருகிறது.
மதத்தின் அடிப்படையில் பார்த்தால் சிலை என்பது வழிபடும் தெய்வத்தின் உருவமாக நம்பப்படுவது. அரசியல் அடிப்படையில் சமூகத்தில் வாழ்ந்த தலைவர்களையும் அவர்கள் நமக்கு விட்டுச் சென்ற கருத்துகளையும் நினைவுபடுத்தும் அவர்களின் மாதிரி உருவங்களாகும். இரண்டுமே நேரடியாக மக்களின் உணர்வுடன் தொடர்புடையது. அப்படிப்பட்ட உணர்வுகளை கொச்சைப்படுத்துவதும், அரசியல் செய்வதும் நிம்மதியற்ற சூழலையும் சமூக பூசல்களையுமே உருவாக்கும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. சரி, இந்த சிலைகள் சம்மந்தமாக சில சுவாரஸ்யங்களை கொண்டது என்பதை நாம் அறிந்து கொள்வோமா...
தமிழகத்தில் எப்பொழுதுமே உருவம் சார்ந்த ஈர்ப்பு (icon based affection) தொன்று தொட்டு இருந்து வருகிறது. இன்றளவில் கூட மேடை நாடகங்களில் அரசியல் பிரபலம் போலவும் சினிமா பிரபலம் போலவும் வேடமிட்டு வருபவர்களை பார்த்து வியந்து, மெய்சிலிர்க்கும் ஒரு மக்கள் கூட்டம் இருக்கிறது.அதே போலதான் சிலையும். இங்கு எல்லாமே ஒரு வைகையில் ஐகான்(icon) தான். வெள்ளைத் தொப்பி போட்டு கருப்பு கண்ணாடி போட்டால் எம்.ஜி.ஆர், மொட்டையடித்து கந்தல் துணியுடன் குச்சியை பிடித்தால் காந்தி என தலைவர்களின் உருவங்கள் தான் அவர்களின் கருத்துக்களையும் தாங்கி நிற்கின்றன சிலைகளாக.
1968-ஆம் ஆண்டு இரண்டாவது உலக தமிழ் மாநாடு நடத்த வேண்டும் என்ற பெரும் முனைப்புடன் அண்ணா செயல்பட்டு தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்த சூழலில் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்ட யோசனைதான் அண்ணாவிற்கு ஒரு சிலை வைக்கவேண்டும் என்பது. ஆனால் இதை முதலில் முற்றிலும் நிராகரித்த அண்ணாவை தனது அன்புத் தொல்லைகளால் சம்மதிக்க வைத்தார் எம்.ஜி.ஆர். இதற்காக அவரது புகைப்படங்களை வைத்து அண்ணாவின் உருவம் சிலையாக உருவாகத் தயாரானது. அண்ணாவின் உருவம் எனக்கு அச்சு அசலாக வேண்டுமென்ற எம்.ஜி.ஆரின் கட்டளைக்கு சிற்பிகளிடமிருந்த வந்த ஒரே பதில், அதற்கு அண்ணாவே மாதிரியாக அமர வேண்டும் என்பதுதான். பிறகு மீண்டும் அண்ணாவை அன்புத் தொந்தரவு செய்து அவரை நேரில் அமரவைத்து அவரின் சிலையை உருவாக்கினார்கள். அந்த சிலைதான் இன்று அண்ணா சாலையை அலங்கரித்து நிற்கிறது.
இன்றும் மெரினா பீச்சில் உள்ள உழைப்பாளர் சிலையை பார்க்கும் போதெல்லாம் உழைக்கும் வர்க்கம் என்றாவது தழைத்தோங்கும் என்ற எண்ணம் ஒவ்வொரு உழைப்பாளியின் மனதிலும் வந்து போகிறது. அந்த சிலையில் உள்ள நால்வரில் இருவருக்கு மாடலாக ஓவியக்கல்லூரி மாணவர் ஓவியர் ராமுவும் மீதமுள்ள இருவருக்கு மாடலாக கல்லூரி வாட்ச்மேன் சீனிவாசன் என்பவரும் அமர்ந்தனர். உழைப்பாளர்களின் உணர்வையும் உறுதியையும் 1959 முதல் இன்றுவரை தாங்கி நிற்கிறது அந்தச் சிலை.
கயத்தாரிலுள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலை இன்றும் தமிழனின் வீரத்தை பறைசாற்றி நிற்கிறது. அந்த சிலைக்கு மாதிரியாக நின்று போஸ் கொடுத்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் கட்டபொம்மனாகவே வாழ்ந்த நடிகர் சிவாஜி கணேசன். அதே போல் மெரீனா கண்ணகி சிலைக்கு நடிகை கல்பனாதான் மாதிரியாக அமர்ந்தார்.
இப்படி இங்கே காமராஜர், பெரியார், இந்திராகாந்தி, இராஜாஜி, பாரதியார், அம்பேத்கர் என எல்லா தலைவர்ளுக்கும் சிலையும் உண்டு, வரலாறும் உண்டு. இப்படி ஒவ்வொரு தலைவர்களின் உணர்வுகளையும் நினைவுகளையும் தாங்கி நிற்கும் இந்த சிலைகளை தற்கால அரசியல் காழ்புணர்ச்சிக்காக உபயோகிப்பதும் கொச்சைப்படுத்துவதும் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பெரியார் சிலை விஷயத்தில் உணரவேண்டியவர்கள் உணர்ந்திருப்பார்கள். அறத்தைத் தாங்கி நிற்கும் சிலைகளை வைத்து அரசியல் வளர்க்க கூடாது.