இணையம் வந்ததிலிருந்து ஊடகங்கள் மக்களுக்கு நெருக்கமாக, ஏன் கிட்டத்தட்ட மக்களின் கைகளுக்கே வந்துவிட்டன. தனி நபரின் திறமையை வெளிப்படுத்த பல புதிய தளங்கள் வந்துவிட்டன. எங்கோ கேரளாவின் மூலையில் ஒரு எளிய தொழிலாளி பாடும் 'விஸ்வரூபம்' பாடல் கமல்ஹாசன் வரை சென்று, அவரை அழைத்து கௌரவப்படுத்துகிறார். திருப்பூரின் ஒரு எளிய வீட்டின் குழந்தை சொல்லும் 'தப்பு பண்ணுனா அடிக்காம திட்டாம குணமா சொல்லணும்' தமிழகம் முழுவதும் வைரல் ஆகிறது. இப்படி மக்கள் சினிமா என்னும் மாபெரும் திரையைத் தாண்டி பல புதிய திரைகளையும் பார்க்கத் தொடங்கிவிட்டனர்.
சமீபத்தில் வெளியான ஒரு குறும்படம் (குறும் குறும்படமென்றே சொல்லலாம்) இணையத்தை வலம் வருகிறது. ஒரு இளைஞனின் தனிமையை எந்த கூடுதல் சொல்லும் இல்லாமல் படமாக்கியிருக்கும் அந்தக் குறும்படத்தின் ஹைலைட் அதன் அழகிய ஃப்ரேம்கள்தான். ஒவ்வொரு காட்சியையும் பிரிண்ட் செய்து ஃப்ரேம் போட்டு மாட்டலாம், அத்தனை அழகு. அறையில் தனியே வாழும் அவனது மாலை அவனை மட்டும் பார்த்துக்கொண்டிருக்கும் தொலைக்காட்சியிலிருந்து தொடங்குகிறது. அந்தத் தனிமை மெல்ல விரிந்து ஒரு தெரு, ஒரு நிலப்பரப்பு, பின் இந்த உலகம் என பெரிய உலகில் ஒரு மனிதன் எவ்வளவு சிறியவன் என்பதை விவரிப்பது போல இருக்கிறது அந்த குறும்படம். பார்க்கும் ஒவ்வொருவரும் ஒரு அர்த்தம் வைத்துக்கொள்ளலாம், ஒவ்வொரு ரசிகரிடமும் ஒவ்வொரு மாதிரி பேசும் தன்மை கொண்டவை ஓவியங்கள். அப்படி ஒரு தொடரோவியமாய் நீள்கிறது 'ஐசோலேஷன்' (isolation) குறும்படம். பின்னணியில் 'எ சூஃபி அண்ட் எ கில்லர்' (a sufi and a killer) என்ற ஆல்பத்திலிருந்து ஒரு பாடல் ஒலிக்கிறது. இளையராஜாவின் 70கள் இசையின் சாயல், அதில் ஆங்கில குரல் கலந்து ஒரு சரியான காக்டெயிலாக போதை ஏற்றுகிறது அந்தக் குறும்படம். கதை, வசனம், பாடல்களுடன் திரைப்படங்களை மட்டுமே உச்சபச்ச காட்சி படைப்புகளாக அதிகம் பார்த்துப் பழகிய நமக்கு, இந்த குறும்படம் தருவது காட்சியில் புது அனுபவம்.
இதை படமாக்கிய ஆகாஷ் பிரகாஷ் யாரென்று விசாரித்தோம். 'அவள்' படத்தில் உதவி ஒளிப்பதிவாளராம். சித்தார்த் நடித்த 'அவள்' படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் நண்பராம் ஆகாஷ். 'அவள்' படம் அதன் ஒளிப்பதிவுக்காக பெரிதும் பேசப்பட்டது. இது பார்ட் 1. இன்னும் அடுத்த பகுதிகள் எடுத்தால் நன்றாக இருக்கும். பார்த்தவர்கள் வெயிட்டிங். மீண்டும் பார்க்கும்போது மனதில் தோன்றுவது 'தனிமை இத்தனை அழகா...' என்பதே.