Skip to main content

நீங்கள் ஃபிட்டானவரா மிஸ்டர் மோடி???

Published on 24/05/2018 | Edited on 24/05/2018

தூத்துக்குடியே கொலைக்களமாக மாறியிருக்கிறது. ஒட்டுமொத்த தமிழகமும் பதற்றத்தில் தவிக்கிறது. உலக பத்திரிக்கைகள் கூட இதை அரசாங்கப் படுகொலைகள் என்று கண்டித்து எழுதிக்கொண்டிருக்கின்றன. மோடியும் ஓ.பன்னீர்செல்வமும் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் தெரியுமா?

களத்தில் இருக்கப்போவதில்லை என்று நமக்குத் தெரியும். ஆலோசனைக்கூட்டம்? ம்ஹும். அறிக்கைகள். ம்ஹும். பத்திரிக்கையாளர் சந்திப்புகள். ம்ஹும். வேறு ?

MODI


 

 

 

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுக வின் உயர்மட்டக் குழு, அதிமுக நிர்வாகி ஒருவரின் மகளின் பூப்புனித நீராட்டு விழாவில் பங்கேற்று விழாவை சிறப்பித்துக் கொண்டிருக்கிறது.

உலகின் எந்த மூலையில் ஒரு உயிர் போனால் கூட தன் ட்விட்டர் மூலம் கண்ணீர் வடிக்கும் மோடி, தூத்துக்குடி படுகொலைகளைப் பற்றி ஒரு கண்டனம் வேண்டாம், ஒரு வருத்தம் தெரிவித்திருக்கிறாரா என்றால் இல்லை.

ஆனால் விராட் கோலியிடம் ஃபிட்னெஸ் சேலஞ்ச் விளையாடிக் கொண்டிருக்கிறார் திரு.நரேந்திர மோடி. அது என்ன ஃபிட்னெஸ் சேலஞ்ச்? ஒன்றுமில்லை. ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் அவ்வப்போது எதையாவது ஒன்றை ஹேஷ்டேக் ஆக்கி சேலஞ்ச் செய்வது வழக்கம். கருப்பு வெள்ளை புகைப்பட சேலஞ்ச், நெயில்பாலிஷ் சேலஞ்ச், பழைய புகைப்பட சேலஞ்ச் என்று. அதில் இப்போது சுழன்று கொண்டிருப்பது இந்த ஃபிட்னெஸ் சேலஞ்ச். அதாவது நீங்கள் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை எடுத்து உங்கள் ட்விட்டரில் போடவேண்டும். போட்டுவிட்டு வேறு யாரையாவது போடுமாறு சேலஞ்ச் செய்யவேண்டும். அவர்களும் வீடியோ போட்டு வேறு யாரையாவது சேலஞ்ச் செய்யலாம். இப்படியே இது நீளும். நாம் உறுதியோடு இருந்தால் இந்தியா உறுதியோடு இருக்கும் என்கிற ஹேஷ்டேக்கோடு இது பரவுகிறது. மோடியும் கடந்த சில நாட்களாக இந்த ஃபிட்னெஸ் சேலஞ்ச் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.  

இந்நிலையில் நேற்று ஜிம்மில் தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை போட்டிருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தன் மனைவி அனுஷ்கா, முன்னாள் கேப்டன் தோனி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை சேலஞ்ச் செய்திருக்கிறார்.

கொடுமை என்னவென்றால் நேற்றிரவு போடப்பட்ட இந்த சேலஞ்சிற்கு இன்னும் அனுஷ்காவோ தோனியோ எந்த பதிலையும் போடவில்லை. பார்க்கவில்லையா இல்லை வேலைப்பளுவா தெரியவில்லை. ஆனால் முதல் ஆளாக முந்திக்கொண்டு இதை ஏற்றுக்கொண்டு பதில் போட்டிருப்பது ஒருநாள் கூட லீவ் போடாமல் தொடர்ந்து வேலை செய்பவர் என்று புகழப்படும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி.

காலை எழுந்ததும் முதல் வேலையாக விராட் கோலிக்கு பதில் சொல்லியிருக்கும் மோடி ‘சேலஞ்ச் ஏற்றுக்கொள்ளப்பட்டது கோலி. விரைவில் என் ஃபிட்னெஸ் சேலஞ்ச் வீடியோவை பதிவேற்றுகிறேன். நாம் உறுதியாய் இருந்தால் இந்தியா உறுதியாய் இருக்கும்’ என்று ட்வீட் செய்துள்ளார்.


 

modi

 

 

உங்கள் மக்கள் கொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் மிஸ்டர் மோடி. அதுவும் எந்த தவறும் செய்யாமல். தன் அடிப்படை உரிமையான சுத்தமான காற்றைக் கேட்டு போராடியதால். பிறக்கும்போதே கேன்சரோடு பிறக்கும் குழந்தைகள் இனியாவது ஆரோக்கியமாய் பிறக்க வேண்டும் என்று. இந்த கேடு என்னோடு போகட்டும், என் சந்நிதி நன்றாக வாழட்டும் என்று. தன் மண்ணில் உட்கார்ந்துகொண்டு, தன்னை சாகடிக்கும் ஒரு கார்ப்பரேட் கம்பெனி இனியும் அதை செய்யக்கூடாது என்று.

ஒரு மனிதன் சுதந்திரமாய் வாழ்வதற்கான அத்தனை உரிமையும் அவனுக்கு இருக்கிறது என்று சொல்கிறது இந்திய அரசியலமைப்புச் சட்டம். அந்த உரிமைக்காக அவர்கள் கேள்வி எழுப்பினால், சுட்டுக்கொல்கிறது காவல்துறை. விரட்டி அடிக்கிறது காவல்துறை. சுற்றிநின்று அடித்து நொறுக்குகிறது காவல்துறை. இரவு வீடு புகுந்து சிறுவர்களையும் மிதிக்கிறார்கள். அடித்து இழுத்துச் செல்கிறார்கள். பெண்கள் மண்டையை கம்பிகளால் உடைக்கிறார்கள்.   இரண்டாம் நாளும் சுட்டுக்கொன்றிருக்கிறது. மூன்றாம் நாளும் சுட்டுக்கொல்கிறது. நாயைக் கூட இப்போது இப்படி ரோட்டில் சுடமுடியாது மிஸ்டர் மோடி. ஆனால் என் மக்கள் சுடப்படுகிறார்கள். இணைய சேவை முடக்கப்படுகிறது. தொலைக்காட்சி ஒளிபரப்புகள் நிறுத்தப்படுகின்றன. தங்கள் தொலைதொடர்புக்காக மட்டும்தான் செல்பேசி சேவையைக் கூட இன்னும் பயன்பாட்டில் வைத்திருக்கிறார்கள். 

இது கலவரம் இல்லை மிஸ்டர் மோடி. அரசாங்கம் திட்டமிட்டு நிகழ்த்தும் படுகொலை. ஒவ்வொரு தோட்டாவாய் சுட்டு சுட்டு கைகள் வலிக்கிறதோ என்னவோ, மத்தியப் படைகள் தூத்துக்குடிக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இன்னும் கொலைகள் தொடர வாய்ப்பிருக்கிறது. இது எல்லாம் யாருக்காக? வேதாந்தா என்றொரு நிறுவனம். ஒரு கார்ப்பரேட்… ஓ மன்னிக்கவும். உங்கள் தோஸ்த் அல்லவா அவர்? உங்களிடம் போய் விளக்கிக் கொண்டிருக்கிறேன். ஆம். அவர் நிறுவனத்திற்காகத் தான். இந்த அரச பயங்கரவாதம் ஒரு பக்கா ‘குஜராத் மாடல்’ என்று சொல்லியிருக்கிறார் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரி. எல்லா புகழும் உங்களுக்கே.

 

 

இன்னொன்றையும் நினைவுபடுத்த விரும்புகிறேன். நீங்கள் சென்னை வரும்போது எந்த ப்ரோட்டோகாலிலும் இல்லாமல், சட்டையில் தேசியக்கொடியையும் சட்டைப் பிளவில் பூணூலையும் காட்டிக்கொண்டு உங்களை வரவேற்பாரே திரு எஸ்.வி.சேகர். அவர் மீது இங்கு ஒரு வழக்கு இருக்கிறது. இன்னும் ஏன் அவரை கைது செய்யவில்லை என்று நீதிமன்றமே கேட்கிறது. ஆனாலும் ஒரு மாதத்திற்கு மேலாகியும் அவர் கைது செய்யப்படவில்லை மிஸ்டர்  மோடி. காவல்துறையின் சுண்டு விரல் கூட அவர்மேல் படவில்லை.

ஆனால் வெறும் நல்ல காற்றைக் கேட்டதற்காக, அதை ஒரு கார்ப்பரேட் கம்பெனியை எதிர்த்து கேட்டதற்காக, காவல்துறையின் குண்டுகள் எங்கள் மக்களின் உடல்களை துளைத்துக் கொண்டிருக்கிறது. மூளைகளை சிதறடித்துக் கொண்டிருக்கிறது. இதயத்தை பதம் பார்த்துக் கொண்டிருக்கிறது.நீங்களோ விராட் கோலியுடன் ஃபிட்னெஸ் சேலஞ்ச் விளையாடிக்கொண்டு இருக்கிறீர்கள். எங்கள் உயிர்களுக்கான கண்ணீரும் கோபமும் கண்டனமும் உங்கள் ஸ்கெட்யூலில் ஏன் எப்போதும் இல்லாமல் போகிறது?

இப்போது சொல்லுங்கள் மிஸ்டர் மோடி …. நீங்கள் ஃபிட்டானவர்தானா ? உங்கள் இந்தியா ஃபிட்டானதுதானா ?

Next Story

பிரதமர் இல்லம் முற்றுகை; ஆம் ஆத்மியினர் குண்டுக்கட்டாக கைது

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Siege of Prime Minister's House; Aam Aadmi Party Arrested for Bombing

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், அதில் 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்.

இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாமல் தவிர்த்து வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை ஆம் ஆத்மி கட்சியினர் எடுத்து வருகின்றனர்.

தமிழகத்திலும் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தை முற்றுகையிட ஆம் ஆத்மி கட்சியினர்  முற்பட்டனர். ஆனால் காவல்துறை சார்பில் அதற்கு அனுமதி இல்லை எனத் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தடையை மீறி பிரதமர் மோடி இல்லத்தை முற்றுகையிட முயன்ற ஆம் ஆத்மி கட்சியினர் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் அதிகப்படியான போலீசார் குவிக்கப்பட்டிருப்பதால் பரபரப்பாக உள்ளது.

Next Story

வீறு கொண்டு எழுந்த விராட்; பஞ்சாப்பை திணறடித்த தினேஷ்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
rcb vs pbks ipl live score updated kohli dinesh creates the magic

ஐபிஎல் 2024 ஆறாவது லீக் ஆட்டம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி பஞ்சாப் அணி முதல் பேட் செய்ய களமிறங்கியது. அந்த அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. அந்த அணியின் முக்கிய ஆட்டக்காரர்களில் ஒருவரான பேர்ஸ்டோ 8 ரன்களில் ஆட்டம் இழக்க அடுத்து வந்த பிரப் சிம்ரன் சிங் 25 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அடுத்து வந்த லிவிங்ஸ்டன் 17 ரன்களில் ஆட்டம் இழந்தார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபக்கம் கேப்டன் தவான்  பொறுப்பாக ஆடி 45 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். சாம் கரண்,  ஜித்தேஷ் சர்மா ஜோடி ஓரளவு அதிரடி காட்டியது. சாம் கரண் 17 பந்துகளில் 23 ரன்களும் ஜித்தேஷ் சர்மா 20 பந்துகளில் 27 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். கடைசி கட்ட ஓவர்களில் சஷாங் சிங்கின் 21 ரன்கள் பஞ்சாப் அணிக்கு கௌரவமான ஸ்கோரை எட்ட உதவியது. 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது.

பெங்களூர் அணி தரப்பில் சிராஜ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் தயால், அல்சாரி ஜோசப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி ஆடத் தொடங்கியது. ஆரம்பம் முதலே அதிரடியைத் தொடங்கினார் கோலி. கேப்டன் டுபிளசிஸ் 3 ரன்களில் வீழ்ந்தார். க்ரீன் 3 ரன்களில்  ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடிய பட்டிதார் 18 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த மேக்ஸ்வெல் 3 ரன்களில் வெளியேறி மீண்டும் ஏமாற்றினார். அடுத்து வந்த அனுஜ் ராவத் ஓரளவு நிதானம் காட்ட மறுபக்கம் கோலி தனது அதிரடியைத் தொடர்ந்தார். 

அணியின் வெற்றிக்கு 4 ஓவர்களில் 47 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கோலி 77 ரன்களில் அவுட் ஆனார். பின்னர் அனுஜ் ராவத்தும் 11 ரன்களில் எல்.பி.டபுள்யூ ஆக ஆர்சிபி அணிக்கு சிக்கல் எழுந்தது. பின்னர் தினேஷ் கார்த்திக்குடன் இம்பாக்ட் வீரராக தயாலுக்கு பதிலாக மகிபால் லொம்ரோர் களமிறங்கினார். வந்தவுடன் அதிரடி காட்டத் துவங்கினார். பின்னர் தன் பங்கிற்கு தினேஷ் கார்த்திக்கும் அதிரடியைத் தொடங்கினார். தினேஷ் கார்த்திக் 10 பந்துகளில் 28 ரன்களும், லொம்ரோர் 8 பந்துகளில் 17 ரன்களும் எடுத்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

இறுதியில் ஆர்சிபி அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி தரப்பில் ரபாடா, ப்ரார் தலா 2 விக்கெட்டுகளும், ஹர்ஷல், சாம் கரண் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். சிறப்பாக ஆடி 77 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த கோலி ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டு போட்டிகளில் ஆடியுள்ள ஆர்சிபி அணிக்கு இது முதல் வெற்றியாகும். இதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் பெங்களூரு அணி 6ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. முதல் ஐந்து இடங்களில் ராஜஸ்தான், சென்னை, குஜராத், கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் உள்ளன.