Skip to main content

மாற்றுத் திறனாளிகளை வைத்து விளம்பரம் தேடாதீர்கள்- தீபக் நாதன் பேச்சு!

Published on 17/04/2020 | Edited on 17/04/2020

கரோனா தொற்று காரணமாக உலக நாடுகள் செய்வதறியாது திகைத்து நிற்கிறார்கள். இந்தியா இரண்டாவது முறையாக ஊரடங்கை நீட்டித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக ஏழை, எளிய மக்களுக்கு நிவாரண உதவிகளை அனைத்து மாநில அரசுகளும் அறிவித்துள்ளன. மாற்றுத் திறனாளிகளுக்கும் இலவச உதவி மையத்தை அரசு ஏற்படுத்தியுள்ளது. அதில் உள்ள குறைகள் என்னென்ன, என்ன மாறுதல்கள் செய்ய வேண்டும் என்பது குறித்து டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் தீபக் நாதனிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 


  k



உலகம் முழுவதும் உள்ள மக்கள் கரோனா காரணமாக முடங்கிக் கிடக்கிறார்கள். பெரிய நாடுகளே என்ன செய்வது என்று அறியாமல் தவித்து வருகிறார்கள். இந்தியா போன்ற உழைக்கும் மக்கள் அதிகம் இருக்கின்ற நாடுகளில் இந்த ஊரடங்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மாற்று திறனாளிகள் இந்த ஊரடங்கால் பாதிக்கப்படாத வகையில் அவர்களுக்கு உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை பற்றி உங்களின் பார்வை என்ன?

முன் எப்போதும் இல்லாத வகையில் அசாதாரண சூழ்நிலையாகத்தான் இதை பார்க்க வேண்டும்.  ஆனால் மற்ற மாநிலங்கள் இதை எப்படி எடுத்துள்ளார்கள், நாம் எப்படி எடுத்துக்கொண்டுள்ளோம் என்று கண்டிப்பாக பார்க்க வேண்டும்.  மாற்று திறனாளிகளுக்கான உதவி மையம் என்பது மிக அருமையான திட்டம். அதில் எந்த ஒரு மாற்றுக்கருத்தும் கிடையாது. அதில் மற்றொரு வரவேற்கதக்க அம்சம் என்னவென்றால் காது கேட்க முடியாதவர்களுக்கும் இதில் வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இது அனைத்துமே சிறப்பான திட்டங்கள்தான். ஆனால் நமக்கு களத்தில் இருந்து வரும் செய்திகள் வேறுமாதிரியாக இருக்கின்றது. ஒரு அசாதாரண நிலைக்கு ஒரு சாதாரண எதிர்வினை சரியாக இருக்காது. 
 

nakkheeran app



அவர்கள் அறிவித்துள்ள தொலைபேசி எண்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. அவர்கள் 50 தொலைபேசி இணைப்புக்கள் வைத்திருக்கிறார்கள். 2011 சென்செக்ஸ் படி தமிழகத்தில் 11 லட்சம் மாற்றுத்திறனாளிகள் இருக்கிறார்கள். தற்போதைய நிலையில் தமிழகத்தில் 18ல் இருந்து 20 லட்சம் மாற்று திறனாளிகள் இருக்கிறார்கள். பல நேரங்களில் அந்த உதவி மையங்கள் செயல்படுவதில்லை. இல்லை என்றால் ரிங் செல்கிறது, ஆனால் யாரும் எடுப்பதில்லை. இது களத்தில் இருந்து எங்களுக்கு வருகின்ற தகவல்கள். அதையும் தாண்டி அவர்கள் அறித்துள்ள நிவாரணங்கள் எங்களுக்கு போதுமானதாக இல்லை. அனைத்து பொருட்களையும் அவர்கள் அதிகப்படுத்தி தந்தால்தான் அனைவருக்கும்  உதவியாக இருக்கும். 

அரசால் இயன்றதை செய்கிறார்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா அல்லது இன்னும் அவர்களால் செய்ய முடியும் என்று எடுத்துக்கொள்வதா, இதனை எப்படி பார்க்கிறீர்கள்?

அரசால் நிச்சயம் இன்னும் அதிகமாக செய்ய முடியும். அதனால்தான் அரசின் நோக்கம் சரியானதுதான் என்று கூறினேன். ஆனால் நோக்கம் சரியாக இருந்து, உக்தியும் சரியாக இருந்தால்தான் ஒரு விஷயத்தை வெற்றிகரமாக செய்ய முடியும். அப்போதுதான் ரிசல்ட் சரியான முறையில் இருக்கும். மதுரையை சேர்ந்த ஒரு மாற்றுத்திறனாளி என்ன சொல்கிறார் என்றால், அரசாங்கம் கொடுக்கும் அரிசி, சீனி, காய்கறி என்று ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக புகைப்படம் எடுக்கிறார்கள், எங்களுக்கு சிறிய அளவு உதவி செய்துவிட்டு, பெரிய அளவில் அதை விளம்பரப்படுத்துகிறார்கள் என்று வேதனை தெரிவித்துள்ளார்.

அரசு நல்ல நோக்கத்தில் கொடுக்க முற்பட்டாலும் அதிகாரிகள் அதிலும் வருவாய் அதிகாரிகள் எப்படி செயல்படுவார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும். ஒரு சின்ன விஷயத்துக்கு கூட லஞ்சம் வாங்குவார்கள் என்பதை நாம் அனைத்து படங்களிலும்கூட பார்க்கலாம். கைப்புண்ணுக்கு எதற்கு கண்ணாடி, அவர்கள் எங்களுக்கு கொடுப்பது போதுமானது அல்ல. அதனை அதிகப்படுத்தி தர வேண்டும். எங்களை வைத்து விளம்பரம் தேடாதீர்கள் என்பதே எங்களின் கோரிக்கைகளில் மிக முக்கியமானது.