சத்தம் கேட்டு வந்த தொழிலதிபர் மோகனின் மகன் ஜீவன் மற்றும் அவர்களின் ஊழியர்களுடன் சேர்ந்து அந்த மர்ம நபரைப் பிடித்து கடுமையாகத் தாக்கியுள்ளனர். தாக்குதலில் படுகாயமடைந்து மயங்கி கீழே விழ... இதுகுறித்து சிவகாஞ்சிபுரம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீஸ் எஸ்.ஐ. மகேந்திரன், வட மாநிலத்தவரைப் போலிருந்த அந்த மர்ம நபர், குற்றுயிரும் குலையுயிருமாக இருந்ததால், உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உத்தரவிட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார், அந்த மர்ம நபர் வலிப்பு வந்து இறந்ததாகவும், சம்பவம் நடந்த வீட்டுக்கு வெளியே ராதா பார்ட்டி ஹால் அருகே மயங்கிக் கிடந்ததாகவும், சிகிச்சைக்காக போனபோது அவர் இறந்துவிட்டதாகவும், தற்போது காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அவருடைய பிணம் இருப்பதாகவும், அந்த நபரைப் பற்றிய விவரம் தெரிந்தால் சிவகாஞ்சிபுரம் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளருக்கு தகவல் கொடுக்கும்படி, காஞ்சிபுரம் முழுக்க போஸ்டர் ஒட்டி, இந்த கொலை வழக்கை இயற்கை மரணமாக மாற்றிவிட்டனர் என்றும், இதற்கென பெருந்தொகை வாங்கியுள்ளனர் என்றும் பெயர் தெரிவிக்க விரும்பாத ஒருவர் நக்கீரனுக்கு தகவலாகக் கொடுத்தார்.
இதையடுத்து, இவ்விவகாரம் குறித்து விசாரிக்க நக்கீரன் களமிறங்கியது. சம்பவம் நடந்த இடத்திற்கு அருகாமையிலிருந்த ராதா பார்ட்டி ஹால் வாட்ச்மேன் மணியிடம் இதுகுறித்து விசாரித்தோம். “ஆமாங்க அன்னைக்கு போலீஸ் நிறைய பேர் வந்திருந்தாங்க, ஆம்புலன்ஸ் வந்துச்சு, யாரோ ஒரு ஆளு மோகன் சார் வீட்ல திருடப்போனதாகவும், அப்ப துரத்தியபோது கீழ விழுந்து அடிபட்டதாகவும் சொன்னாங்க” என்று மட்டும் கூறினார்.
இதுதொடர்பாக தொழிலதிபர் மோகனின் மகன் ஜீவனிடம் பேசினோம். “சார் யாரும் கொலையெல்லாம் பண்ணல. என்ன சார் காமெடி பண்றீங்க. அன்னைக்கு வீட்டுக்கு யாரோ தெரியல, வடநாட்டுக்காரன் மாதிரி இருந்தான். மாடி ஏறி வந்தான், கீழே கொண்டு வந்துவிட்டு, போலீஸுக்கு ஃபோன் செய்தேன். அதுக்குள்ள மயக்கம் போட்டு விழுந்துட்டான். 108 ஆம்புலன்ஸுக்கு நான்தான் ஃபோன் பண்ணேன். வந்ததும் ஏத்தி அனுப்பி வச்சேன். நான் அடிச்சு கொன்னுட்டேன்னு சொல்றீங்களே? என்ன சார் நியாயம்?” என்று படபடத்தபடி தொடர்பைத் துண்டித்தார். ஜீவன், சம்பவம் நடந்த பழைய ரயில்வே ரோட்டில் திருமலா டிஎம்டி என்ற ஹார்ட்வேர்ஸ் கடையை அவருடைய அப்பாவோடு சேர்ந்து கவனித்து வருகிறார். அங்கே நேரில் சென்று கேட்டபோது இருவரும் வெளியே சென்றுள்ளதாகக் கூறினார்கள்.
சம்பவம் தொடர்பாக தொழிலதிபர் மோகனை தொடர்பு கொண்டோம். ஃபோனை எடுத்த பெண் ஒருவர், “என்ன விஷயம்” என்று கேட்டார். “போன ஏப்ரல் 15 ஆம் தேதி உங்க வீட்டுக்கு ஒரு திருடன் வந்ததாகவும், அவனை நீங்கள் அடித்ததால் செத்துப் போனதாகவும் சொல்கிறார்களே?” என்று கேட்டோம். அதற்கு அந்த பெண் “நாங்க அடிச்சதால அவன் செத்துட்டானா?” என்று கேட்டபடி, மோகனிடம் கொடுத்தார். அவரோ, “சார் எதுவா இருந்தாலும் நேர்ல வாங்க, ஃபோன்ல எல்லாம் பேச முடியாது” என்றபடி தொடர்பைத் துண்டித்தார்.
சம்பவம் தொடர்பாக சிவகாஞ்சிபுரம், காவல் ஆய்வாளர் விநாயகத்திடம் பேசினோம். “அங்க ஒருத்தர் இறந்து போனார் என்பது உண்மை. ரொம்ப உடம்பு சரி இல்லாததாலன்னு தகவல் வந்துச்சு. போஸ்டர்லாம் ஒட்டி அவரைப்பத்தி விசாரிச்சிட்டு வர்றோம். உடனே கொலைன்னு சொல்ல முடியாது. நாங்க விசாரிச்சு அப்படியிருந்தா கைது செய்வோம்” என்று தொடர்பை துண்டித்தார். சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் எஸ்.பி. சுதாகரை செல்போனில் தொடர்பு கொண்டபோது எடுக்கவேயில்லை. இது தொடர்பாக வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணனை தொடர்பு கொண்டோம். "இவ்வழக்கு தொடர்பாக உடனடியாக விசாரிக்கச் சொல்கிறேன்'' என்று உறுதியளித்தார்.
மேலும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை பிணவறை ஊழியரான முருகனிடம் ரகசியமாகக் கேட்டோம். “பாவம் சார். இந்திக்காரன் போல இருக்கு. செத்து 30 நாள் ஆச்சு. இன்னும் இவனோட சொந்தக்காரன் யாரும் வந்து பாடிய வாங்கல. என்ன பண்ணி சாவடிச்சான்னு தெரியல. பிழைப்பத் தேடி வராங்க. இதுபோல கொலை செஞ்சாக்கூட கேட்க நாதியில்லாம அனாதைப் பொணமா போறாங்க” என்று புலம்பினார். குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டிய காவல்துறையே ஒரு கொலையை இயற்கை மரணமாக மாற்ற முயன்றிருப்பதை உணர முடிந்தது.
இந்நிலையில் இவ்விவகாரம் பெரிதாவதை உணர்ந்தவர்கள், 20 நாட்களாகக் கேட்பாரற்று இருந்த உடலை எடுத்துச் சென்று தகனம் செய்துவிட்டனர். இதன்மூலம் இவ்விவகாரத்தில் உண்மை சாம்பலாக்கப்பட்டுள்ளது.