'கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக பிரதமர் என்ற தகுதியை மறந்து பொய்களை வாரி வீசுகிறார். எனவே, தனக்கு 100 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும்' என்று மோடிக்கு சித்தராமய்யா நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். முன்னதாக சித்தராமய்யா அரசை 10 சதவீத கமிஷன் அரசு என்றும், கொலைகாரர்களை பாதுகாக்கும் அரசு என்றும் பலவிதமாக மோடி பிரச்சாரம் செய்தார். இந்தக் குற்றச்சாட்டுகளை பத்திரிகை விளம்பரமாகவும் பாஜக கொடுத்திருந்தது. அதற்கு பதிலளித்த சித்தராமய்யா, மோடி தனது குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வேண்டும் அல்லது தன்னுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த முன்வர வேண்டும் என்று காங்கிரஸ் சார்பில் விளம்பரம் கொடுத்தார்.
இந்த விவாதத்தில் பங்கேற்க தயார் என்று மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்தாலும், அப்படி ஒரு விவாதம் நடைபெறுமா என்பது சந்தேகமே என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள். பத்திரிகையாளர்களையே சந்திக்காத மோடி, பொதுமேடையில், பொதுமக்கள் முன்னிலையில் விவாதிக்க ஒப்புக்கொள்வாரா என்று அவர்கள் கேட்கிறார்கள். ஒருவேளை அப்படி நடந்தால் மிகப்பெரிய அதிசயமாகவே இருக்கும் என்றும் கூறுகிறார்கள்.
இதற்கிடையே கர்நாடகா தேர்தலில் மோடி தனது பிரதமர் பொறுப்பையும் மீறி இப்படி தொடர் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கு பல காரணங்களைக் கூறுகிறார்கள். சித்தராமய்யா தனது ஆட்சிக்காலத்தில் கர்நாடகாவில் நிறைவேற்றியுள்ள பல்வேறு மக்கள் நலத்திட்டங்களே மோடியை அச்சுறுத்துவதாக கருதப்படுகிறது. 'காலணி பாக்யா' என்ற பெயரில் 1 முதல் 10 ஆம் வகுப்புவரை படிக்கும் பள்ளிக் குழந்தைகளுக்கு ஷூ மற்றும் சாக்ஸ் வழங்கப்படுகிறது. 'அன்ன பாக்யா' என்ற பெயரில் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள குடும்பத்தில் உறுப்பினர் ஒருவருக்கு 7 கிலோ அரிசி வீதம் இலவசமாக வழங்கப்படுகிறது. 'பசு பாக்யா' என்ற பெயரில் பசுமாடு வாங்கவும், மாடுகள், வெள்ளாடுகள், செம்மறி ஆடுகளுக்கு ஷெட் அமைக்கவும் மானியம் வழங்கப்படுகிறது.
'ஆரோக்கிய பாக்யா' என்ற பெயரில் மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் விரிவான மருத்துவ உதவி வழங்கப்படுகிறது. 'லேப்டாப் பாக்யா' என்ற பெயரில் பட்ட மற்றும் தொழில்கல்வி படிக்கும் எஸ்சி, எஸ்.டி. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படுகிறது. 'பல்பாதுகாப்பு பாக்யா' என்ற பெயரில் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களைச் சேர்ந்த 58 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச பல் வைத்தியம் செய்யப்படுகிறது. 'பால் பாக்யா' என்ற பெயரில் அங்கன்வாடி மற்றும் தொடக்கக்கல்வி மாணவ மாணவியருக்கு இலவச பால் வழங்கப்படுகிறது. 'சைக்கிள் பாக்யா' என்ற பெயரில் 8ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியருக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்படுகிறது. திருமண உதவி பாக்யா திட்டம் என்ற பெயரில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது.
ஏற்கெனவே வழங்கப்படும் இந்தத் திட்டங்களோடும் இன்னும் பல திட்டங்களை தனது தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் அறிவித்துள்ளது. இந்தத் திட்டங்களை பாஜகவும் தனது தேர்தல் அறிக்கையில் காப்பி அடித்திருப்பதாக சித்தராமய்யா குறை கூறியிருக்கிறார். தேர்தல் நெருங்க நெருங்க தேர்தல் பிரச்சாரம் சூடுபறக்கத் தொடங்கியிருக்கிறது. காங்கிரஸ் சவாலை ஏற்று மோடி விவாதத்தில் பங்கேற்பாரா? அந்த விவாதம் நடக்குமா என்ற எதிர்பார்ப்பே இப்போது கர்நாடகாவில் பரவியிருக்கிறது.