நான்கு ஆண்டு ஆட்சி முடிவில் தாழ்த்தப்பட்ட மக்களை சீண்டிப் பார்த்துள்ளது மோடி அரசு. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களின் மீதான வன்கொடுமைகளான இழிவாகப் பேசுதல், புறக்கணித்தல், பாகுபாடு செய்தல் என ஆதிக்க சாதியினர் உள்ளிட்ட பிறரால் செய்யப்படும் பல்வேறு விதமான இழிவுகளை தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்து 1989ல் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று தலித் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை எழுப்பியுள்ளது.
இந்த வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக மகாராஷ்டிராவில் சுபாஸ் காசிநாத் மகாஜன் என்பவர் தொடுத்த வழக்கில் உச்சநீதி மன்ற நீதிபதிகளான ஏ.கே.கோயல் மற்றும் யூ.யூ.லலித் ஆகியோர் இச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாகவும் பலர் பாதிக்கப்படுவதாகவும் கூறி விசாரணை செய்து அதன்பின் வழக்கு பதிவு செய்யுமாறு தீர்ப்பளித்து உள்ளனர்.
நீதித் துறையில் அரசின், ஆளும் கட்சியின் குறுக்கீடு இருப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகளே மக்கள் மன்றத்தை நாடும் நிலையில் வன்கொடுமைக்கான இச்சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் தீர்ப்பாகவும் இதன் பின்னணியில் இருக்கும் அரசியலையும் தலித் மக்கள் சந்தேகத்தோடும் கொந்தளிப்போடும் கவனித்தனர். நினைத்தது போலவே இத்தீர்ப்பைக் குறித்து மத்திய ஆளும் பிஜேபி அரசு மௌனம் காத்த நிலையில் நாடு முழுவதும் தலித் அமைப்புகள், கட்சிகள் சார்பாக ஏப்ரல் 2ஆம் தேதி பந்த் அழைப்பு விடுத்தன.
தமிழகத்தில் DYFI, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் பல கட்சிகள் இதனைக் கண்டித்து ஆர்ப்பாட்டமும் அறிக்கைகளும் செய்தன. தற்போது காவிரி பிரச்சனை ஸ்டெர்லைட் என வேறு பக்கம் தீவிரமான நிலையில் வட இந்தியாவில் பெரும் கலவரத்தோடு பந்த் நடந்துள்ளது. பல இடங்களில் ரயில்கள் மறிக்கப்பட்டன.
உத்திரப்பிரதேசம், மத்திய பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், பஞ்சாப், பீஹார் மாநிலங்களில் உக்கிரமாக ஆரம்பித்த பந்த்தில் தலித் மக்கள் திரளாக கலந்து கொண்டனர். வழக்கம் போல தலித் பேரணிகளின் நடுவே கல்லெறிந்தும் கலவரம் செய்தும் வன்முறையில் கொண்டு போய் நிறுத்தின சில ஆதிக்க சாதி அமைப்புகள். ராஜஸ்தானில் பார்ட்மீர் மாவட்டத்தில் கர்னி சேனா என்ற அமைப்புக்கும் தலித்களுக்குமிடையே மோதல் நிகழ்ந்து நூற்றுக்கணக்கானவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கர்னி சேனா, 'ராஜ்புத்' எனும் ஆதிக்க சாதி அமைப்பு என்று தெரிய வருகிறது. ஜோத்பூரில் மாலி எனும் ஆதிக்க சாதியினர் தாக்குதலில் தலித் ஒருவரின் கால் வெட்டப்பட்டது.
இது போன்ற மோதல்கள் வட மாநிலங்களில் பரவிய நிலையில் ஆழ்வர் மாவட்டத்தில் காவல் நிலையத்துக்கு தீவைக்கப்பட்டது. மத்திய பிரதேசத்தில் மட்டும் 6 பேர் பலியான நிலையில் உத்திரப்பிரதேசத்தில் இருவர் ராஜஸ்தானில் ஒருவர் என 9 பேர் நேற்று இந்தத் தீர்ப்பின் விளைவாகவும் அரசின் மௌனத்தாலும் பலியாகியுள்ளனர். போராட்டம் தீவிரமானதும் மத்திய அரசு அவசரமாக மறு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. கடந்த 20ம் தேதி முதல் இன்று வரை ஏன் மௌனமாக இருந்தது என்று மக்கள் வினவுகின்றனர். இதுவரை 9 பேர் பலி என செய்திகள் சொன்னாலும் இதை விட அதிகமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது.
முதலில் இஸ்லாமியர்களை எதிரிகளாக்கி ஓட்டு சம்பாதித்த பிஜேபி அரசியல், தற்போது தலித் மக்களை வன்முறையாளர்களாக முத்திரை குத்தும் விதமாக செயல்படுகிறது என தலித் அமைப்பினர் குற்றம் சாட்டுகின்றனர். பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் ஒன்றாக திரளும் விதமான அரசியல் முன்னெடுப்பினை பகுஜன் சமாஜ் கட்சி செய்வதாகவும் அதனை கலைக்கவே இம்மாதிரியான குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் சந்தேகிக்கின்றனர்.
சமூக நீதியின் முன்னோடி மாநிலமான தமிழகம் இந்தப் பிரச்சனையில் போராட்டங்களை முன்னெடுக்காமைக்கு காவிரி பிரச்சனை காரணமாக சொல்லப்பட்டாலும் அனைத்து போராட்டங்களிலும் தலித் மக்கள் கலந்து கொள்ளும் நிலையில் அவர்களுக்கான போராட்டத்தில் யாரும் வராமல் இருப்பது வழக்கமாக உள்ளது என பலர் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் கூறியுள்ளனர்.