பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளை அலசி ஆராய்ந்து சாமானிய அரசியல் நோக்கர்கள் சிலர் வெளிப்படுத்திய கருத்துகள் இவை..
தோல்வி பயத்தால் உறவுகளைக் களமிறக்கி ஆழம் பார்த்த தலைவர்கள்!
தருமபுரியில் பா.ம.க.வேட்பாளராக அன்புமணி ராமதாசும், விருதுநகர் தொகுதியில் தேமுதிக வேட்பாளராக பிரேமலதாவும், பா.ஜ.க. வேட்பாளராக சரத்குமாரும் ஏன் போட்டியிடவில்லை என்ற கேள்விக்கு தேர்தல் முடிவுகள் மூலம் பதில் கிடைத்துள்ளது.
நோட்டாவுக்கு கீழ் ஓட்டு வாங்கும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம் என்று டிடிவி தினகரன் போன்றவர்கள் விமர்சித்த நிலையில், இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் பா.ம.க. ஏன் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது? அன்புமணி ராமதாஸ் தன் மனைவி சவுமியாவை ஏன் தேர்தலில் நிறுத்தினார்? தன் கட்சியை பா.ஜ.க.வில் கரைத்துவிட்டு, மனைவி ராதிகாவை ஏன் விருதுநகர் தொகுதியில் சரத்குமார் போட்டியிட வைத்தார்? ஓபிஎஸ். டிடிவி தினகரன், சசிகலாவை ஓரம் கட்டிய பலவீனமான அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து, தன் மகன் விஜயபிரபாகரனை ஏன் விருதுநகரில் தேமுதிக வேட்பாளராக பிரேமலதா நிறுத்தினார்?
வெற்றி வாய்ப்பில் சந்தேகம் எழுந்ததாலேயே தாங்கள் தேர்தலில் போட்டியிடாமல், உறவுகளைக் களமிறக்கி, அவர்களுக்கு தோல்வி திசையைக்காட்டியுள்ளனர். கூட்டணிப் பேச்சுவார்த்தையின் போது, ராஜ்யசபா சீட்டுக்கு அடிபோட்டதும் இந்தச் சுயநலத்தின் வெளிப்பாடுதான்.
ஆன்மிக அரசியலும் பொய்ப் பரப்புரைகளும் தோற்றுப்போயின!
தியானம், அங்கப்பிரதட்சணம், மடிப்பிச்சை நாடகம் எல்லாம் வேலைக்கு ஆகாதவை என்பதை விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியின் தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளன.
இரவோடு இரவாக ச.ம.க.வை கலைத்துவிட்டு, தன் மனைவி ராதிகாவுக்காக, விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியை பா.ஜ.க. தலைமையிடம் கேட்டுப்பெற்றவர் சரத்குமார். சென்னையிலிருந்து கிளம்பிய சரத்குமாரும் ராதிகாவும் விருதுநகர் தொகுதியில் தங்களுக்குத் தெரிந்த சினிமா பாணி பிரச்சாரங்களையே தொடர்ந்து மேற்கொண்டனர்.
சூர்யவம்சத்தில் தேவயானியைக் கலெக்டர் ஆக்கியதுபோல் என்னை என் கணவர் சரத்குமார் எம்.பி.யாக்குவார் என்றார் ராதிகா. நடிகர், நடிகை என்பதால் இவ்விருவரையும் வேடிக்கை பார்ப்பதற்காகக் கூட்டம் கூடியதே தவிர, ஆதரிப்பதற்காக அல்ல. வெற்றிபெற்று எம்.பி.யானால் விருதுநகரில் ராதிகா தங்குவாரா? வழக்கம்போல் ஷூட்டிங்கிற்காக சென்னை போய்விடுவாரா? என்ற கேள்வி எழுந்தபோது, “நான் வெற்றிபெற்றால் எங்கும் போகமாட்டேன். என் வீடு விருதுநகரில் இருக்கிறது. இங்குதான் இருப்பேன்.” என்றார் ராதிகா.
இதைக்கேட்ட விருதுநகர் வாக்காளர்கள், நமக்குத் தெரியாமல் ராதிகாவுக்கு விருதுநகரில் வீடு இருக்கிறதா? என்று மண்டை காய்ந்தனர். பிறகுதான் தெரிந்தது, சரத்குமாரின் நண்பர் வீட்டை, தன் வீடு என்று ராதிகா கதைகட்டியது. இத்தகைய பொய்ப் பிரச்சாரம் வாக்காளர்களிடம் எப்படி எடுபடும்?“ அண்ணே, அண்ணியைக் கூட்டிக்கிட்டு கோயில் கோயிலா போங்க. ஒர்க்-அவுட் ஆகும்.” என்று உள்ளூர் பாஜகவினர் வழிகாட்ட, ஆன்மிக அரசியலைக் கையில் எடுத்தார் சரத்குமார். விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கெல்லாம் சென்று சாமி கும்பிட்டார். திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட கப்பலூரில் பிரச்சாரம் செய்தபோது மடிப்பிச்சையும் எடுத்தார் ராதிகா.
சிவகாசியில் நம்பர் பிளேட் இல்லாத புல்லட்டில் ராதிகாவைப் பின்னால் அமரவைத்து, ஹெல்மெட் அணியாமல்தானே ஓட்டிச்சென்று பரபரப்பைக் கிளப்பினார் சரத்குமார். இவ்வாறாகப் பிரச்சாரத்தை முடித்துவிட்டு இருவரும் சென்னை சென்றுவிட்ட நிலையில், எக்ஸிட்-போல் முடிவுகள் தங்களுக்குச் சாதகமாக இல்லை என்பதை அறிந்தனர். மனைவி ராதிகாவின் எம்.பி. கனவு, தன்னுடைய பா.ஜ.க. மாநிலத்தலைவர் கனவெல்லாம் சீட்டுக்கட்டுகளாக சரிந்தபோது, அதிர்ந்து போனார் சரத்குமார். அந்த நேரத்தில்தான், மோடியின் கன்னியாகுமரி தியானம் சரத்குமாரின் மனக்கண்ணில் மின்னியது. மீண்டும் ஆன்மிகக் குளத்தில் குதித்து மூழ்க முடிவெடுத்தார்.
வாக்கு எண்ணிக்கை நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன், சட்டையைக் கழற்றிவிட்டு, விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோவிலில் உருண்டு புரண்டு அங்கப்பிரதட்சணம் செய்தார். இதனைத் தொடர்ந்து, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலிலும் சாமி கும்பிட்டனர். சரத்குமாரிடம் மீடியாக்கள் கேள்வி கேட்டன. இது “மனைவி ராதிகாவின் வெற்றிக்காக அல்ல. பிரதமர் மோடியின் வெற்றிக்காக பிரார்த்தனை செய்தேன்.” என்று சமாளித்தார்.
ஒர்க்-அவுட் ஆகாத சென்டிமென்ட்!
ஆரம்பத்தில் பா.ஜ.க.வா? அதிமுகவா? என்ற தேர்தல் கணக்குடன் இரண்டு இடத்திலும் கூட்டணிக்கு துண்டுபோட்டது தேமுதிக. பிறகுதான், திரைமறைவுப் பேரம் நடத்தி அதிமுகவுடன் கூட்டணி கண்டது. கேப்டனின் சொந்த ஊர் அருப்புக்கோட்டை பக்கமுள்ள ராமானுஜபுரம் எனச் சொல்லி, விருதுநகர் தொகுதியைக் கேட்டுப்பெற்றார் பிரேமலதா விஜயகாந்த். விஜயபிரபாகரனும் தனது பிரச்சாரத்தில் “அப்பா கேப்டன் விஜயகாந்த் இறந்து100 நாட்கள்தான் ஆகிறது..” என்பதையே திரும்பத் திரும்பச் சொல்லி பரிதவிப்பை வெளிப்படுத்தினார்.
விஜயபிரபாகரனின் தம்பி சண்முகப்பாண்டியனும் “எங்க அப்பாவுக்கு ஏதாவது செய்யணும்னு நினைச்சீங்கன்னா என்னுடைய அண்ணன் விஜயபிரபாகரனுக்கு வாக்களியுங்கள்.” என்று கேட்டுக்கொண்டார். பிரச்சாரத்தின்போது பிரேமலதா விஜயகாந்தும் தன் பங்குக்கு “உங்களுக்காக எங்களை கேப்டன் விட்டுச் சென்றுள்ளார்.” என்று கண்ணைக் கசக்கினார். “வெற்றி பெற்றால் விஜயபிரபாகரனுக்கு விருதுநகரில் திருமணம் நடக்கும்.” என்று உத்தரவாதம் அளித்தார்.
ஒவ்வொரு அரசியல் கட்சியையும், ஒவ்வொரு அரசியல் தலைவரையும் வாக்காளர்கள் அறிந்தே வைத்துள்ளனர். பிரச்சாரப் பாசாங்குகள் அவர்கள் அறியாததல்ல. விருதுநகர் தொகுதியில் விஜயபிரபாகரனுக்கு இரண்டாவது இடத்தையும், ராதிகா சரத்குமாருக்கு மூன்றாவது இடத்தையும் தந்துள்ளனர்.
இந்நிலையில், விருதுநகரில் வாக்கு எண்ணிக்கை நடந்தபோது, 13-வது சுற்றிலிருந்தே முறைகேடு நடந்துள்ளதாகவும், மறுவாக்கு எண்ணிக்கை நடத்தவேண்டுமென்றும் தலைமைத் தேர்தல் ஆணையம் வரையிலும் புகார் அளித்திருக்கிறார் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.