ஒரு அரசு நிகழ்ச்சி, ஒரு அரசியல் நிகழ்ச்சி. சில மணிநேர இடைவெளியில் நடந்த இந்த இரண்டும், இருவேறு விதமான கருத்துகளையும், இரு தலைவர்களின் வெவ்வேறு இலக்குகளையும் நமக்கு புலப்படுத்திக் காட்டுகிறது.
கோவையில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “எங்களுக்கு ஓட்டுப் போட்ட மக்களுக்கு மட்டுமல்ல, ஓட்டுப் போடாத மக்களுக்கும் சேர்ந்து பணியாற்றுவதுதான் என் லட்சியம்; என் அரசு கடைசிவரை இதை கடைப்பிடிக்கும்” என்று பேசினார்.
திண்டிவனத்தில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்த பாட்டாளி மக்கள் கட்சியின் திண்டிவனம், செஞ்சி, மயிலம், வானுார் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், “செஞ்சி நமது கோட்டை.. ஆனால் கோட்டைவிட்டு உட்கார்ந்திருக்கிறோம். தேர்தலில் போட்டியிடக் கூட ஆள் இல்லை என்கிறீர்கள். வேட்பாளர்கள் இருந்தாலும், அவர்களுக்கு வேலை செய்யாமல் எதிர்க் கட்சிக்கு வேலை செய்கிறீர்கள். வீடுவீடாகச் சென்று பிரச்சாரம் செய்யுங்கள். சமூகவலைதளங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளுங்கள்” என்று பேசினார். அதிலும், சில இடங்களில் கடும் காட்டமாகவும் பேசியிருக்கிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர் சொற்களின் உச்சரிப்பும், குரல் அழுத்தமும், கட்சிதான் அனைத்தும் என காத்திருக்கும் தொண்டர்களுக்கு மனதின் ஓரத்தில் ஒரு நெருடலை உருவாக்கலாம். அந்த வகையில்தான் அப்பேச்சு அமைந்திருந்தது.
அதேபோல், ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நடந்த பொதுக்குழு கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், “துரோகிகள் கட்சியை விட்டு வெளியேறிவிடுங்கள். மானம், சூடு, சொரணை உள்ள வன்னியன் மாறி ஓட்டுப் போடுவானா? என் மூச்சு உள்ளபோதே கோட்டையில் போய் அன்புமணி ராமதாஸ் உட்கார வேண்டும்” என பேசினார்.
இப்படி மூன்று தசாப்தங்களாக அரசு அரியணையை எட்டிப்பிடிக்க முயன்றுவரும் பாமகவை, அதன் இலக்கை அடையவிடாமல் தடுப்பது என்ன..? பாமக கவனிக்க தவறியதும், கவனிக்க மறுப்பதும் என்ன..? "கட்சியில் வேட்பாளர்கள் கூட இல்லையா" என நிர்வாகிகளிடம் தலைவர் காட்டமாக கேட்குமளவுக்கு அக்கட்சியை கொண்டு சென்றது எது..?
பாமகவின் மீது வைக்கப்படும் முக்கிய விமர்சனங்களில் ஒன்று அது ஒரு சமூகத்திற்கான கட்சி என்பது. ஆனால், அதே கட்சிதான் ஏழுமலை எனும் தலித்தை கட்சியின் பொதுச் செயலாளராகவும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் ஆக்கியது. அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸும் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அம்பேத்கரின் சிலைகளை நிறுவியதற்கு காரணமாக இருந்தார். இப்படி தங்கள் மீதான சாதிய ரீதியிலான பிம்பங்களை உடைத்தெறிய அக்கட்சி தொடர்ந்து முனைந்து கொண்டேதான் இருந்திருக்கிறது. ஆனாலும், பொது ஜனத்திற்கான கட்சி என்று தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள பாமக எடுத்த முயற்சிகளையும் கடந்து, அது சமூகத்தின் ஒரு சாராருக்கான கட்சிதானோ என்ற சந்தேகத்தை அவ்வப்போது நிகழும் சில அழுத்தமான சம்பவங்கள் மக்களுக்கு எழுப்பிக்கொண்டேதான் இருந்து வந்திருக்கிறது எனலாம்.
பெரியாரின் இயக்க அரசியலிலிருந்து, வாக்கு அரசியலுக்கு அண்ணா தனது பாதையை மாற்றியபோது ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்று முழங்கினார். தி.க.விற்கும், தி.மு.க.விற்குமான ஒரு பெரும் வித்தியாசம் அது. ஒரு தலைமையின் கீழ் நாங்கள் இயங்குகிறோம், இந்தத் தலைமை எங்களை வழிநடத்தட்டுமென மக்களும், அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் முடிவு எடுக்கும்போது, அந்த இயக்கமும், அதனை வழிநடத்தும் தலைமையும் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்காக மட்டுமின்றி ஒட்டு மொத்த சமூகத்திற்காகவும் இயங்க வேண்டும் என்பது அவசியமாகிறது. குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நின்று அது செயல்படுதல் வேண்டும்.
வாக்கு அரசியலுக்கு வந்த திமுகவும், அதிமுகவும் அதனைத் தான் செய்தன. அதுவே ஆளும் இருக்கைக்கான பாதையை அக்கட்சிகளுக்கு அமைத்துக்கொடுத்தது. ஒரு விஷயமோ, ஒரு கூட்டமோ இறுதிவரையில் மாறாமல், அது நமக்கானதாகவே இருக்கும் எனக் கருதி செயலாற்றுவது என்பது மாற்றத்தை ஏற்றுக்கொள்ள விரும்பாத மனநிலையையே வெளிப்படுத்துவதாக எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
கட்சியைத் துவக்கி 30 ஆண்டுகள் கடந்து தொடர்ந்து செயலாற்றி வரும் எந்த ஒரு தலைவருக்கும் இருக்கும் அடிப்படையான ஆதங்கம்தான் தலைமை இடத்திற்கு வர முடியவில்லையே என்பது. ஆனால், ஒரு குறிப்பிட்ட சாராரை மட்டுமே குறிவைத்து நகர்ந்து செல்லும்போது அது மற்ற சாரார் மனதில் ஒருவித பாதுகாப்பின்மையை உருவாக்கும். இங்குதான் அண்ணா தனது கட்சிக்காரர்களை தம்பிகளாக்கி, தம்பிகளுக்கு அனைவரையும் அரவணைத்துச் செல்லும் ரகசியத்தை கற்றுக்கொடுத்து ஆட்சி அதிகாரத்தை திமுக வசமாக்குகிறார். அதன் நீட்சியையே இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் வெளிப்படுத்துகிறார் எனலாம்.
குறிப்பாக ராமதாஸ், “தமிழ்நாட்டில் மூன்றாவது பெரிய கட்சி நாம் என்று சொல்லிக்கொள்கிறோம். ஆனால், தேர்தலில் போட்டியிட ஆள் இல்லை என கட்சியினர் சொல்கின்றனர்” என்று சொல்லி வேதனைப்படுகிறார். ஆனால், மாற்றம் வேண்டி பல இளைஞர்கள் காத்துக்கொண்டிருக்கும்போது, அவர்கள் ஏன் பாமகவின் பக்கம் வர மறுக்கிறார்கள், அவர்களை எப்படி தங்கள் பக்கம் ஈர்ப்பது என பாமக சிந்தித்து பார்க்க வேண்டியது அவர்களுக்கு காலத்தின் கட்டாயமாகியுள்ளது.
பாமக துவங்கிய காலத்தில் பெரும் மக்கள் திரளை அந்தக் கட்சியின் பக்கம் ஈர்த்தது, அந்தக் கட்சியின் நிறுவனர் ராமதாஸின் போராட்டமும், கள அரசியலும்தான். ஆனால், இன்று அன்புமணியின் கள போராட்டமும், அரசியலும் கேள்விக்குள்ளாக்கும் தருணத்தில் இருக்கிறது. 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தருமபுரி தொகுதியிலிருந்து போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதன்பின் நடந்த மாநிலங்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், அவரின் மாநிலங்களவை செயல்பாடுகளும், வருகை பதிவும் அவரின் அரசியல் தீவிரத்தை பெரும் விமர்சனத்துக்குள்ளாக்கி வருகிறது.
நம் பள்ளியில், கல்லூரியில், பணியிடத்தில் நமது இருக்கையின் மறு இருக்கையில் இருப்பவன் சக மனிதன் என இந்தத் தலைமுறையின் பெரும் பங்கினர் மாறிவர. அதனை முழுதாக ஏற்காமல், ‘நாடகக் காதல்’, ‘மானம், சூடு, சொரணை உள்ள வன்னியன் மாறி ஓட்டுப் போடுவானா’ என்பன போன்ற சொல்லாடல்களை கட்சியின் மையமாக வைத்து நகர்த்த நினைப்பதும், 1987ல் நடந்த இட ஒதுக்கீடு போராட்டம், மதுவுக்கு எதிரான போராட்டம், 2020ம் ஆண்டு நடந்த இட ஒதுக்கீடு போராட்டமின்றி, மற்ற மக்கள் பிரச்சனைக்காக வீதிகளில் இறங்கி நின்று அது எந்த அளவிற்கு சென்றுள்ளது, அது எங்கு தடைப்பட்டுள்ளது என்பனவற்றை ராமதாஸ் உள்ளிட்ட அக்கட்சியின் மூத்தத் தலைவர்கள் சுயபரிசோதனைக்கு உட்படுத்த வேண்டிய நேரம் இது எனலாம்.