'இருட்டு அறையில் முரட்டு குத்து' திரைப்படம் கௌதம் கார்த்திக் நடிப்பில் கடந்த வாரம் வெளியாகி வசூல் ரீதியாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வெற்றி கிடைத்தது இளைஞர்களால்தான் என்கிறார்கள். ஏனென்றால் படம் முழுவதும் இரட்டை அர்த்த வசனங்கள்தான், இல்லை இல்லை கிட்டத்தட்ட அனைத்தும் வெளிப்படையான வசனங்கள் என்று படம் பார்த்தவர்கள் சொல்கிறார்கள். இந்தத் திரைப்படம் ஒரு சாராருக்கு மகிழ்ச்சியையும் கிளர்ச்சியையும் அளித்திருந்தாலும், பலரின் கோபத்தையும், எதிர்ப்பையும் பெற்றுவருகிறது. திரைத்துறையை சார்ந்தவர்களே இந்தப் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அடுத்து வெளியாகும் திரைப்படங்களின் வசூலையும் இந்தப் படம் பாதிக்கும் என்றும் புலம்புகின்றனர்.
இப்படி தமிழ் சினிமாவில் ஒரு சின்ன சலசலப்பை இந்த 'A' சான்றிதழ் ஏற்படுத்தியுள்ளது. "இந்தப் படத்தால் தமிழகத்தின் திரையரங்குகள் ஒவ்வொன்றும் பரங்கிமலை ஜோதி' போலாகிவிட்டதாக நடிகர் பொன்வண்ணன் வருத்தம் தெரிவித்திருந்தார். 'பரங்கிமலை ஜோதி' என்ற இந்தப் பெயர் இன்றளவும் பேசப்படுகிறது (ஒரு மாதிரியாகத்தான்). இன்று அந்தத் திரையரங்கு புதுப்பிக்கப்பட்டு, புதிய படங்கள் திரையிடப்பட்டாலும் அன்று அது ஏற்படுத்திய தாக்கம் குறையவில்லை. ஒரு காலத்தில், ஒவ்வொரு ஊரிலும் இது போன்ற திரையரங்குகள் இருந்தன. 'சாஃப்ட் பார்ன்' என்று அழைக்கப்படும் A சான்றிதழ் பெற்ற படங்கள் அங்கு திரையிடப்பட்டன. நாளடைவில் இணையம், மொபைல் போன்கள் பெருக்கத்தால் அவற்றுக்கான தேவையில்லாமல் போய் இப்பொழுது அந்த வகை திரையரங்குகள் கிட்டத்தட்ட இல்லாமல் போய்விட்டன. ஆனால், ஒரு காலத்தில், இந்த வகை படங்கள் மலையாள சினிமா உலகையே கைப்பற்றிய கதை தெரியுமா? 1995ஆம் ஆண்டு முதல் 2000ஆம் ஆண்டு வரை இரண்டு சூப்பர் ஸ்டார்களின் படங்களையே ஓடவிடாமல் இரண்டு நாயகிகள் அவர்களின் வசம் மலையாள திரையுலகை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள், தெரியுமா?
தமிழ்நாட்டிலிருந்து சென்று கேரளாவில் புகழ்பெற்றதில் மலர் டீச்சருக்கு முன்னவர் 'டிரைவிங் ஸ்கூல்' டீச்சர். ஆம், 'டிரைவிங் ஸ்கூல்' என்பது ஷகிலாவின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று. ஷகிலா நடித்த 'சாஃப்ட் பார்ன்' வகை படங்களின் ஆதிக்கம் 1995க்கு மேல் மெல்ல ஆரம்பித்து 2000ஆம் ஆண்டுகளில் தொடக்கத்தில் மலையாள சினிமாவையும், அங்கிருந்த முன்னணி நடிகர்களையும் மிகவும் பாதித்தது. எந்த அளவிற்கு பாதித்தது என்றால் 2001ஆம் ஆண்டு, மம்முட்டி நடிப்பில் 'துபாய்' என்ற படம் அப்போது மலையாளத்துக்கு பெரிய பட்ஜெட் என கருதப்பட்ட ஐந்து கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவானது. இந்தத் திரைப்படம்தான் அப்போது மம்முட்டி நடித்த திரைப்படங்களிலே அதிக பட்ஜெட் திரைப்படமாகும். ஆனால், ஷகிலாவின் படங்கள் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்ததால் மம்முட்டியின் திரைப்படம் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்தது. மம்முக்காவின் படம் மட்டுமல்ல லாலேட்டனின் படங்களும் தப்பவில்லை. மோகன்லால், ரம்யாகிருஷ்ணனின் நடிப்பில் நான்கு கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி, 2002ஆம் ஆண்டு வெளியான 'ஒன்னம்மான்' திரைப்படமும் மிகப்பெரிய தோல்வியடைந்தது. ஏனென்றால் அந்த வருடமும் ஷகிலாவின் திரைப்படங்கள் தியேட்டர்களில் கல்லாகட்டிக் கொண்டிருந்தது.
கோடி கோடியாக பணம் போட்டு எடுத்த படங்களெல்லாம் தோற்கிறதே, ஷகிலா படங்களின் பட்ஜெட் எவ்வளவாக இருக்கும் என்று பார்த்தால் 5லிருந்து 20 லட்சத்திற்குள்தான். ஆனால் வசூல் இரண்டு கோடி, மூன்று கோடி என்று போனது. இதனாலே ஷகிலாவின் சம்பளம் நாள் ஒன்றிற்கு இரண்டு லட்சம் ஆனது. அப்போது மலையாள திரைப்பட உலகில் ஷகிலாவின் ஒரே போட்டியாக இருந்தது ஷர்மிலி மட்டுமே. ஆம், அந்த வகை படங்களில் அவர் சூப்பர் ஸ்டார் என்றால் இவர் உலகநாயகி. 2001ஆம் ஆண்டு மலையாளத்தில் 89 படங்கள் வெளியாகின. அதில் 57 படங்கள் A சான்றிதழ் பெற்ற 'சாஃப்ட் பார்ன்' படங்கள் ஆகும்.
இந்த மாதிரி படங்கள் பெரிய நடிகர்களை மட்டுமல்லாது துணை நடிகர்களையும், திரையரங்குகளையும் பாதித்தது. மொத்தத்தில் சினிமா துறையையே பாதித்தது. 'இந்த மாதிரியான திரைப்படங்களை நாங்கள் திரையிடமாட்டோம் என்று உறுதியாக இருந்தன இதனால் அவையெல்லாம் திருமண மண்டபங்களாகவும், வணிக வளாகங்களாகவும் உருமாறின. அங்கு பிரபலமான குணச்சித்திர நடிகர்களான ஸ்ரீவித்யா, முரளி போன்றோரெல்லாம் சின்னத்திரைக்கு சென்றனர். இந்தப் போக்கைத் தடுக்க மம்முட்டி இதனை எதிர்த்து சில நடவடிக்கைகள் எடுத்து அப்போதைய முதல்வர் அந்தோணி கவனத்திற்குக் கொண்டு சென்றார். பின்னர், திரையரங்குகள் கண்காணிக்கப்பட்டு சென்சார் செய்யப்படாத காட்சிகளைத் திரையிடும் திரையரங்குகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. அப்படியும் சில மாதங்களுக்கு மேல் அந்த வகை படங்கள் ஆட்சி செய்தன. பின்னர் மெல்ல, மலையாள சினிமாவில் அடித்த புதிய அலையும் மோகன்லால், மம்முட்டி இருவரும் கொடுத்த நல்ல படங்களும் சேர்ந்து மலையாள திரையுலகை கரை சேர்த்தன.
இப்படி, கல்வியறிவில், அரசியல் தெளிவில், சித்தாந்த அடிப்படையில் முன்னணியில் இருக்கும் ஒரு மாநிலத்தில் கலைவடிவமும் மாஸ் மீடியாவுமான திரையுலகை 'அந்த' வகை படங்கள் கைப்பற்றிய வரலாறு இன்னும் பலருக்கும் புதிராகத்தான் இருக்கிறது. தமிழிலும் அவ்வப்போது கவர்ச்சி அதிகமான, இரட்டை அர்த்த வசனங்கள் மிகுந்த படங்கள் வந்திருக்கின்றன, வசூலையும் அள்ளியிருக்கின்றன. ஆனால், அந்த அளவுக்கு, நேரடி A சான்றிதழ் ஷகிலா, ஷர்மிலி படங்கள் ஆதிக்கம் செலுத்துவது இங்கு நடந்ததில்லை. அப்படி நடந்துவிடுமோ என்ற பயமும் இருக்கத்தானே செய்யும்.