முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாயின் ஆட்சிக்காலத்தில்(2003) முன்மொழியப்பட்ட திட்டம் இந்த சாகர்மாலா திட்டம். இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் நாட்டில் உள்ள 7500 கிமீ நீளமுள்ள கடற்கரையையும் 14,500 கிமீ நீளமுள்ள உள்நாட்டு நீர்வழிகளையும் ஒன்றாக இணைத்து சரக்கு போக்குவரத்திற்கானதாக மட்டும் மாற்றுவதே. முதல்கட்டமாக 1000 கோடி செலவில் இந்தியாவிலுள்ள 12 துறைமுங்கள் மற்றும் 1,208 தீவுகளை சரக்கு போக்குவரத்திற்கு ஏற்றவாறு நவீனப்படுத்துவது, 189 கலங்கரை விளக்கங்களை நவீனப்படுத்துவது தொடங்கும். நாட்டின் பொருளாதாரத்தைத் தீர்மானிப்பதி
ஆனால் இவ்வளவு வளர்ச்சிகள் இருந்தாலும் தமிழத்திலுள்ள 7 கடற்கரை மாவட்டங்களில் மீன்பிடி தொழிலை ஆதாரமாகக் கொண்டுள்ள மக்கள் இதனால் பாதிக்கப்படுவர். மற்றும் கார்ப்ரேட் வர்த்தகம் தலைத்தோங்கும் என்று தமிழ் ஆர்வளர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழகத்தில் இந்தத் திட்டத்தை எதிர்த்து வருகின்றனர். காரணம் மத்திய அரசின் இந்தத் திட்டத்தின் அறிக்கையிலே இந்த திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகள் என ஒரு உரையையும் அளித்துள்ளது. அதாவது 7 கடற்கரை மாவட்டங்களில் உள்ள மீனவர்களில் 18 விழுக்காடு மக்கள் கடற்கரையை வாழ்விடமாக கொண்டுள்ளனர். அவர்களின் வாழ்விடங்கள் பறிக்கப்படும், இடைவிடாத போக்குவரத்து மாசினால் மீன்வளம் பாதிக்கப்படும் என்பதையே 'கிரிட்டிகல் ஸ்டேக் ஹோல்டர்ஸ்' என்று நாசுக்காக சொல்கிறது மத்திய அரசு. இத்திட்டத்தை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுக்கும் 'நாம் தமிழர் கட்சி' தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் 'மே பதினேழு' இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆகியோரிடம் இந்தத் திட்டம் குறித்துக் கேட்டோம்.
சீமான்
7000 கிமீ கடல்வழிச்சாலை, 14500 கிமீ உள்நாட்டு நீர்வழிச்சாலை, இதை ஒன்றிணைப்பதுதான் இந்த சாகர் மாலா திட்டத்தின் நோக்கம் என சொல்லப்படுகிறது. ஆனால் உண்மை நோக்கம் என்னவென்றால் ஏற்றுமதி இறக்குமதி. என்ன ஏற்றுமதி? இங்குள்ள நிலக்கரி, ஹைட்ரோகார்பன், மீத்தேன், ஈத்தேன், ஆற்றுமணல், மலைமணல் போன்ற வளங்களைக் கொள்ளையடித்து ஏற்றுமதி செய்வது. வெங்காயம் பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களை விளைவிக்க போதுமான வளம், நிலம் இருந்தும் அதை விளைவிக்க முடியாமல் இறக்குமதி செய்வது. இலங்கையில் திரிகோணமலையை சீனா 900 ஆண்டுகளுக்கு 9,500 கோடி லீசுக்கு எடுத்துவிட்டது. அதேபோல் தனுஷ்கோடியை மக்கள் வாழ வாய்ப்பற்ற இடம் என அறிவித்து ராணுவ முகாம் அமைக்கிறது மத்திய அரசு. அணு உலை அமைப்பதல்ல அணு பூங்கா அமைப்பதுதான் மத்திய அரசின் நோக்கம். அதேபோல் கடலூர் நாகபட்டினம் சுற்றியுள்ள 45 கிராமங்களை பெட்ரோலிய மண்டங்களாக அறிவித்துள்ள அரசு அதைச்சுற்றியும் இராணுவமுகாம் அமைக்கும். எல்லாம் இராணுவ மயமான பிறகு மக்களால் கிளர்ச்சியே செய்யமுடியாத, உரிமையை கேட்டுபெறமுடியாத நிலையை உருவாக்குவதே நோக்கம். இதுதான் நடக்கும் என கணிக்கமுடிகின்ற இந்த சூழ்நிலையில இதை அடுத்த தலைமுறை பிள்ளைகளுக்கு கொண்டுபோய் எச்சரிக்கை உணர்வை உருவாக்கவேண்டும். அடிமை இந்தியாவில் போராட ஒரு காந்தி, ஒரு பகத்சிங், ஒரு சுபாஷ் சந்திரபோஸ் உருவாக முடிந்தது. ஆனால் விடுதலை இந்தியாவில் அது கடினம். கருவிலேயே அழித்துவிடுவார்கள். அப்படிப்பட்ட போக்கு நடந்துவருகிறது.
'சாகர்மாலா திட்டத்தினால் துறைமுகம் சார்ந்த மீன் பதப்படுத்துதல் போன்ற பயிற்சிகள் மற்றும் துறைமுகம் சாராத மாற்று வேலைவாய்ப்பு பயிற்சிகள், விவசாயம் செய்வது, கைவிணைப் பொருட்கள் செய்வது போன்ற பயிற்சிகள். மீனை ஏற்றுவது இறக்குவது போன்ற பயிற்சிகள் அளிக்கப்படும்' என்று மத்திய அரசு கூறுகிறது. அப்போ இவர்களுடைய நோக்கம் ஆழ்கடலுக்குள் மீனவன் மீன் பிடிக்க செல்லக்கூடாது, கூட்டிணைவு (corporate) நிறுவனங்கள் கையில் கொடுத்திட வேண்டும். விளைநிலத்தை விட்டு வேளாண்குடிமக்களை வெளியேற்ற வேண்டும், கடல் பரப்பை விட்டு மீனவனை வெளியேற்றவேண்டும், பொறுப்புகளை எல்லாம் கார்ப்ரேட் எனும் கூட்டிணைவு நிறுவனங்களுக்கு தாரைவாக்க வேண்டும் என்பதே நோக்கம். இந்த சாகர் மாலா திட்டம் என்பதே மண்ணில் உள்ள வளங்களை கொள்ளையடிக்கும் ஒரு பெரும்முயற்சி எனவேதான் இதை எதிர்க்கிறோம்.
திருமுருகன் காந்தி
காடுகளில் இருந்து எப்படி பழங்குடிகள் வெளியேற்றப்படுகின்றார்களோ, விவசாய நிலங்களிலிருந்து எப்படி விவசாயிகள் வெளியேற்றப்படுகிறார்களோ அதுபோல மீனவர்களை கடலிலிருந்து வெளியேற்றும் வழிமுறையே இந்தத் திட்டத்தின் அடிப்படை கொள்கை. மீனவர்களின் கடல், மீனவர்களுடைய கடற்கரை மற்றும் வாழும் நிலப்பரப்பு போன்றவைகளை கையகப்படுத்தி கார்ப்ரேட்டிடம் ஒப்படைப்பதே இந்தத் திட்டம். இந்தத் திட்டத்தில் மேம்படுத்தப்படும் துறைமுகம் வெறும் வணிக துறைமுகம் மட்டுமல்ல அது பின்னாளில் ராணுவ துறைமுகமாகவும் மாற்றப்படும்.
திரிகோணமலை துறைமுகத்தின் அருகில் உள்ள சம்பூரில் அனல்மின்நிலையம் அமைக்க கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை இந்திய அரசு கையகப்படுத்தி அங்கு வாழ்ந்து வந்த பூர்வீக குடிகளை வெளியேற்றியது. அந்தப் பகுதியை பாதுகாக்க இராணுவத்தை நிறுத்தியது. இப்படி இருக்க திரிகோணமலையை அமெரிக்காவினுடைய கப்பல் படை பாதுகாப்புத் தளமாக மாற்றுவதற்கான ஒப்பந்தத்தை போடுவதற்காகவும் அந்த துறைமுகத்தை பயன்படுத்துவதற்காகவுமே இனப்படுகொலை அங்கு நடத்தப்பட்டது. இதுதான் அதன் அடிப்படை.
எண்ணூரிலிருந்து ஆரம்பித்து தமிழ்நாட்டின் கடைசி கடற்கரை கிராமமான நீராடிவரை பல்வேறு துறைமுகங்கள் வரப்போகின்றன. அந்த துறைமுகங்கள் அனல்மின்நிலைய துறைமுகங்களாக, சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கான துறைமுகமாக அல்லது ராணுவ பயன்பாட்டிற்கான துறைமுகமாக இருக்கும். அப்பொழுது அப்பகுதியில் உள்ள பூர்விக குடிமக்களை முற்றிலும் அகற்றப்படும் சூழ்நிலை வரும்.
அப்படி வெளியேற்றப்பட்ட மீனவர்களை மறுவாழ்விற்க்கு கொண்டுவருவது, மீனவர்களை மாற்று தொழிலுக்கு பயிற்றுவிப்பது என மத்திய அரசு சொல்கிறதே, அதற்கு ஒதுக்கப்பட்ட பணம் வெறும் 4000 கோடிதான், அந்த 4000 கோடியும் ஒட்டுமொத்த 7000கிமீ கடற்கரையிலுள்ள ஒட்டுமொத்த மீனவனுக்கானது. அப்பொழுது தமிழ்நாட்டு மீனவனுக்கு எவ்வளவு இருக்குமென நன்கு யோசித்துப் பாருங்கள். இதிலுள்ள சதியை மனதில் கொள்ளுங்கள். இந்த துறைமுகங்கள் தனியார் மயமாகப்போகின்றன. சுற்றி தனியார் தொழிற்சாலைகள் வரப்போகிறது. எனவே கடல்மாசடைந்து மீன் வளம் குறையும்.
ஒரு நாட்டின் துறைமுகங்கள்தான் நாட்டின் பொருளாதாரத்தை முடிவுசெய்யும் இடம், அப்படிபட்ட துறைமுகங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலும் இல்லாமல் மாநில அரசின் கட்டுப்பாட்டிலும் இல்லாமல் தனியார் கார்ப்ரேட் கைகளில் இயக்கப்படும்போது பொருளாதாரமும் அவன் சார்ந்து நிற்கப்போகிறது. அதனால் அங்கு நமக்கு கூலிவேலைதான் கொடுக்கப்படும், அடிமை இந்தியாவில் இருந்தது போல.
சந்திப்பு : அருண்பாண்டியன்