ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா ஒரு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்திருக்கிறார். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 22ஆம் தேதிக்கு முன்பு 19ஆம் தேதியே அவர் உடல்நலக்குறைவாக இருந்ததாகவும், சுப்ரீம் கோர்ட்டில் சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக நடைபெறும் விசாரணை மற்றும் சொத்துக் குவிப்பு வழக்கிற்காக சிறையில் இருந்தது அவரது உடல்நிலையை பாதித்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
ஜெயலலிதாவுக்கு ஸ்டிராய்டு மருந்துகள் தோல் வியாதி தொடர்பாக கொடுக்கப்பட்டதாகவும், அந்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்திருந்தார். மொத்தம் 59 பக்கங்கள் வரும் அந்த பிரமாணப்பத்திரத்தில் வெறும் 5 அல்லது 6 பத்திகள்தான் ஜெயலலிதா உடல்நிலை பற்றி சசிகலா குறிப்பிட்டிருந்தார். ஆனால் சசிகலா இந்த பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டிருந்ததை நக்கீரன் 2016 செப். 29 இதழிலேயே குறிப்பிட்டிருந்தது.
போயஸ் கார்டனில் இரவு 9.30 மணி அளவில் ஜெ.வை அவரது அறையில் பார்க்க போன சசிகலா அவர் இருக்கையில் மயங்கி சாய்திருந்ததை பார்த்து அலறிவிட்டார். உடனடியாக டாக்டர் சிவக்குமார் அப்பல்லோவில் இருக்கும் டாக்டர் செல்வக்குமாரை தொடர்பு கொண்டிருக்கிறார். டாக்டர் செல்வக்குமாரும், சிவக்குமாரும் சேர்ந்து முதலுதவி சிகிச்சைகளை மேற்கொள்கிறார்கள்.
போயஸ் கார்டனில் ஒரு மினி மருத்துவமனையே இயங்குகிறது. அனைத்து வசதிகளும் இருக்கின்றன. ஜெ.வுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் சிவக்குமார், ஜெ.வின் மயக்க நிலை மாறாததை கண்டு பதட்டம் அடைகிறார். அவசரமாக அப்பல்லோவுக்கு கொண்டு செல்லும்போது இரவு 10.30 மணி என நக்கீரன் குறிப்பிட்டிருந்தது.
அதை தனது பிரமாண பத்திரம் வாக்குமூலமாக உறுதிப்படுத்திய சசிகலா, ஆம்புலன்ஸ்சில் ஜெ.வை. கொண்டு செல்லும்போது ஜெ. திடீரென கண் விழித்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார். அதேபோல் ஜெ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 22ந் தேதிக்கு அடுத்து 23ஆம் தேதி அவர் நார்மலாகி காவேரி பிரச்சனை தொடர்பாக அதிகாரிகளுடன் விவாதித்ததாக சசிகலா குறிப்பிட்டிருக்கிறார். அதைத்தொடர்ந்து காவிரி பிரச்சனை தொடர்பாக முதல்வரின் செயலாளர்கள் நடராஜன், வெங்கட்ரமணன் ஆகியோர் மற்றும் அரசு வழக்கறிஞருடன் விவாதித்ததாக சசிகலா குறிப்பிடுகிறார்.
லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலேவை நான்தான் டாக்டர் என கைக்காட்டியதாகவும், அவரை அடுத்த அறைக்கு கொண்டு செல்லும்போது ஓ.பி.எஸ்., நிலோபர் கபில் ஆகிய அமைச்சர்கள் பார்த்ததாகவும், இறுதியாக ஜெ.வுக்கு சிகிச்சை அளித்தபோது அவரை பரிசோதித்த 20 டாக்டர்கள் மற்றும் ஜெ.வுக்கு தினமும் எடுக்கப்பட்ட சர்க்கரை அளவு குறித்த குறிப்பேடுகள் ஆகியவற்றை சுட்டிக்காட்டிருக்கிறார்.
இறுதியாக ஜெயலலிதா உயிர் பிரியும்போது ஜெய் அனுமான் என்கிற சீரியலை பார்த்துக்கொண்டிருந்ததாகவும் அப்போது சசிகலா காபியுடன் அங்கு வந்ததாகவும் சீரியலை பார்த்துவிட்டு குடிக்கிறேன் என்று சொன்ன ஜெயலலிதா திடீரென வலிப்பு நோய் வந்து அவதிப்பட்டதாகவும், நாக்கு தள்ளி இறந்துபோனதாகவும் சசிகலா கூறுகிறார். ஜெயலலிதா எவ்வாறு நாக்குதள்ளி இறந்தார் என ஜெயலலிதாவின் சவ அடக்கத்தின்போதும் வந்தவர்களிடம் நடித்துக்காட்டிக்கொண்டிருந்தார் சசிகலா. உண்மையில் இதைப்பற்றியும் நக்கீரன் பதிவு செய்துள்ளது. ஜெய்அனுமான் சீரியல் பார்த்துக்கொண்டிருந்த ஜெயலலிதாவை விட்டு சசிகலா வெளியே சென்றுவிட்டார். ஜெய்அனுமான் சீரியல் பார்த்துக்கொண்டிருந்த ஜெயலலிதாவுக்கு இருதய நிறுத்தம் வரும்போது அங்கு ஒரு டாக்டர் மட்டுமே இருந்தார். அவர் பெயர் வெங்கட் ராமன். அவர் ஜெயலலிதாவுக்கு இருதய நிறுத்தத்திற்கு முதலுதவி சிகிச்சைகளை செய்து கொண்டிருக்கும்போது உள்ளே வந்த சசிகலா ஆர்ப்பாட்டம் செய்து கதறி அழுதார். அதற்குள் ஜெயலலிதா அபாய கட்டத்திற்கு சென்றுவிட்டார். உடனடியாக ஆபரேஷன் தியேட்டருக்கு எடுத்துச் சென்று அவரது இருதயத்தை எந்திராத்தால் மசாஜ் செய்தார்கள். அதன் பிறகு ஈசிஎம்மோ மிஷினில் அவரை இணைத்தார்கள். அதன் பிறகு 5ஆம் தேதி ஜெயலலிதா இறந்தார் என நக்கீரன் தெளிவாக குறிப்பிட்டிருந்தது.
அதற்கு நேர் மாறாக சசிகலா பிரமாண வாக்குமூலத்தை தாக்கல் செய்திருக்கிறார். ஜெயலலிதாவுக்கு தோல் நோய்க்காக ஸ்டிராய்டு மருந்து அளிக்கப்பட்டது, ரத்த அழுத்தத்திற்காக ஒரு மாத்திரையை ஜெயலலிதா போட்டிக்கொண்டிருந்தார். இந்த இரண்டும் ஜெ.வின் சர்க்கரை அளவை வழக்கத்திற்கு மாறாக அதிகரித்தது என நக்கீரன் மிக தெளிவாக பதிவு செய்திருந்தது. ஜெ.வுக்கு சிகிச்சையின்போது ஒரு சில நேரத்தில் நினைவு வந்ததையும், அவரை தரைதளத்திற்கு மாற்றி ஸ்கேன் எடுத்ததையும் நக்கீரன் பதிவு செய்திருந்தது. காலம் கடந்த பிறகு இப்பொழுது விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு 5 மாதங்களுக்கு பிறகு, ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தில் வசதியான விசயங்களை பிரமாண வாக்குமூலமாக பதிவு செய்திருக்கிறார் சசிகலா.