சேலம் ஆவின் கழிவு நீரை தளவாய்ப்பட்டி ஏரியில் திறந்துவிடவும் கிராம மக்கள் திடீர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். ஏரியில் தேக்குவதால் விவசாயம் பாதிக்கும் என்றும் கூறுகின்றனர்.
சேலத்தை அடுத்துள்ள தளவாய்ப்பட்டியில் ஆவின் பால் பண்ணை இயங்கி வருகிறது. சேலம், நாமக்கல் மாவட்ட பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து நாளொன்றுக்கு சராசரியாக 4.50 லட்சம் லிட்டர் முதல் 5 லட்சம் லிட்டர் வரை பால் கொள்முதல் செய்து வருகிறது. தவிர, பால் பவுடர், ஐஸ்கிரீம், நெய், வெண்ணெய், நறுமணப்பால் உள்ளிட்ட மதிப்புக்கூட்டப்பட்ட பால் பொருள்களும் தயாரிக்கப்படுகிறது.
ஆவினில் பயன்படுத்தப்பட்ட நீர், அதன்பிறகு சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. இவ்வாறு சுத்திகரிக்கப்பட்ட நீர், பால் பண்ணையில் திறந்தவெளியில் இரண்டு குட்டைகளில் தேக்கி வைக்கப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட நீர்தான் என்றாலும், இதுபோன்ற ஆவினுக்கு தேவைப்படாத தண்ணீர் மட்டுமே தினமும் 5 லட்சம் லிட்டர் வரை சேகரமாகிறது. இந்த தண்ணீர் பால் பண்ணை நிலத்தில் நீண்ட காலமாக தேக்கி வைக்கப்படுவதால், ரொட்டிக்காரவட்டம், சித்தனூர் ஆகிய பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. நீரும் மாசடைந்துள்ளது.
பால் பண்ணை கழிவுநீரால் சண்முகம், குப்புசாமி, ரதி, சந்திரன் உள்ளிட்ட 15 பேரின் வீடுகளுக்குள் தரை தளத்தை பிளந்து கொண்டு 'குபுகுபு'வென்று ஊற்றெடுத்து வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட குமார் மற்றும் அவருடைய சகோதரர்கள் ரொட்டிக்காரவட்டத்தில் இருந்து கோயில் மரம் என்ற இடத்திற்கு இடம்மாறிச் சென்றுவிட்டனர். எந்த நேரமும் சுவர்கள் நீரில் ஊறிக்கொண்டே இருந்ததால் இரண்டு பேரின் பேக்கரி தயாரிப்புக்கூடங்கள் இடிந்து விழுந்து விட்டன.
இது ஒருபுறம் இருக்க, அக். 21ம் தேதி இரவு முதல் காலை வரை விடிய விடிய பெய்த கனமழையால், ஆவின் பால் பண்ணையில் தேக்கி வைக்கப்படும் கழிவுநீர், பூமிக்கடியிலேயே ஒரு கி.மீ. தூரத்திற்கு பாய்ந்தோடி வருகிறது. இந்த தண்ணீர், சித்தனூர், ரொட்டிக்காரவட்டத்தில் தங்கராஜ், நாராயணன், மாரியம்மாள் ஆகியோருக்குச் சொந்தமான வயல்களை மூழ்கடித்துள்ளன.
இதனால், ஆவின் பால் பண்ணையில் தேக்கி வைக்கப்படும் கழிவு நீரை போர்க்கால அடிப்படையில் உடனடியாக வேறு இடத்திற்கு அப்புறப்படுத்த வேண்டும் என்றுகூறி, கடந்த ஒரு வாரமாக தளவாய்ப்பட்டி, சித்தனூர், ரொட்டிக்காரவட்டம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் போராடி வருகின்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆவின் பொதுமேலாளர் விஜய்பாபு மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டனர். மக்களிடமும் கருத்து கேட்டனர். அதையடுத்து, பால் பண்ணையில் கிழக்குபுறத்தில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீரை மேற்கு புறத்தில் கால்நடை தீவனம் பயிரிடப்பட்டுள்ள பகுதிக்கு திருப்பி விடப்பட்டது. ஆனாலும், அந்த தண்ணீர் சுற்றுச்சுவரை துளைத்துக்கொண்டு வெளியேறியது.
அதன்பிறகு, அக். 23ம் தேதி காலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சிலர் ஆவின் பொது மேலாளரை நேரில் சந்தித்து தங்கள் பிரச்னைகளைக் கூறினர். தற்காலிக தீர்வாக, ஆவின் கழிவு நீரை தளவாய்ப்பட்டி ஏரிக்குள் கொண்டு செல்லலாம் என்ற யோசனையை இருதரப்பும் ஏற்றுக்கொண்டனர். ஆனால், மாலையில் விவசாயிகளை அமைப்பைச் சேர்ந்த மாதேஸ்வரன், திருவேங்கடம் ஆகியோர், தளவாய்ப்பட்டி ஏரிக்குள் ஆவின் கழிவு நீரை கொண்டு வந்தால் ஏரிக்குக் கீழ் பகுதியில் விவசாயம் அடியோடு பாதிக்கும் என்ற பிரச்னையை முன்வைத்தனர்.
இது தொடர்பாக அவர்கள் மேலும் கூறுகையில், ''தளவாய்ப்பட்டி ஏரி இன்னும் முழுமையாக தூர்வாரப்படவில்லை. ஆழமும் குறைவாக உள்ள இந்த ஏரியில் கனமழை வந்து, அந்த தண்ணீர் தேங்கினாலே கரைக்கு மேலே வந்துவிடும் அபாயம் இருக்கிறது. அத்துடன் ஆவின் கழிவு நீரும் சேர்ந்தால் நிச்சயமாக கரையைக் கடந்து விவசாய நிலத்திற்குள் புகுந்து விடும். நிலத்தடி நீரும் பாதிக்கப்படும்.
இதனால் ஏரிக்கு கீழ்ப்புறத்தில் இருந்து கஞ்சமலை வரை கரும்பு, நெல், கடலை விவசாயம் செய்து வரும் விளைநிலங்கள் முற்றிலும் பாதிக்கப்படும். மேலும், இந்த ஏரியில் தண்ணீர் ஓடிச்செல்லும் வகையில் இல்லாமல் தேங்கியே கிடக்கிறது. அப்படியான நிலையில் ஆவின் கழிவுநீரையும் கொண்டு வந்து தேக்கி வைப்பது சுற்றுச்சூழலுக்கு உகந்தது அல்ல,'' என்றனர்.
அக். 23ம் தேதி மாலையில் நாமும் (நக்கீரன்) தளவாய்ப்பட்டி ஏரியை நேரில் பார்வையிட்டோம். ஏரிக்கரை பலமின்றி இருந்தது. இந்த ஏரியின் கழுங்கு பகுதியில் இருந்து கால்வாய் வெட்டப்பட்டுள்ளது. அந்தக் கால்வாய் வழியாக ஆவின் தண்ணீரை கொண்டு சென்றாலும் அப்பகுதி மக்களும் எதிர்க்க வாய்ப்பு இருக்கிறது.
இதற்கிடையே, இரவு 7 மணியளவில் ஆவின் மேலாளர் மெய்யழகன் (சிவில்) தலைமையில் ஊழியர்கள் சிலர், பொக்லின் இயந்திரங்களுடன் தளவாய்ப்பட்டி அரசு துவக்கப்பள்ளிக்கு எதிரில் ஆவின் சுற்றுச்சுவரை துளையிட்டு, அதில் பிவிசி குழாய் பொருத்தி, அதன்மூலம் பண்ணையில் இருந்து கழிவு நீரை சாக்கடை கால்வாயில் திறந்து விடுவதற்கான பணிகளில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த விவசாய அமைப்பைச் சேர்ந்த திருவேங்கடம், மாதேஸ்வரன் மற்றும் ஊர் மக்கள் சார்பில் சிவராமன், தோழர் சுந்தரம் உள்ளிட்டோர் நிகழ்விடத்தில் கூடினர். அவர்கள் உடனடியாக பணிகளை நிறுத்தும்படி கூறினர். எக்காரணம் கொண்டும் ஏரிக்குள் ஆவின் தண்ணீரை விடக்கூடாது என்றனர். இதையடுத்து ஆவின் ஊழியர்கள் அப்பணிகளை நிறுத்திவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
அதையடுத்து, உடனடியாக தளவாய்ப்பட்டி சமுதாயக்கூடத்தில் ஊர் மக்கள் கூடி பேசினர். அதில், ஆவின் நிறுவன கழிவு நீரை, நிரந்தர மற்றும் நீண்டகாலத் தீர்வாக திருமணிமுத்தாற்றில் கொண்டு சேர்க்க வேண்டும் என்று முடிவெடுத்தனர். இந்த முடிவுக்கு ரொட்டிக்காரவட்டம், சித்தனூரைச் சேர்ந்த தங்கராஜ், நாராயணன் உள்ளிட்டோரும் ஒப்புக்கொண்டனர். இது தொடர்பாக ஆவின் பொது மேலாளரை சந்தித்துப் பேசவும் முடிவெடுத்துள்ளனர்.
தளவாய்ப்பட்டி மக்களின் நாற்பதாண்டு கால பிரச்னையை ஆவின் நிறுவனமும், மாவட்ட நிர்வாகமும் போர்க்கால அடிப்படையில் கருதி சுமூக தீர்வு காண வேண்டும் என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.