சேலம் மாநகராட்சி துப்புரவு ஊழியர் ஒருவர், குடும்ப உறுப்பினர்களின் பெயரில் போலி சம்பள பட்டியல் தயாரித்து, நூதன முறையில் 88 லட்சம் ரூபாய் சுருட்டியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
சேலம் மாநகராட்சியில் 60 கோட்டங்கள் உள்ளன. நிர்வாக வசதிக்காக அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி, சூரமங்கலம், அஸ்தம்பட்டி என நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பபட்டு உள்ளன. மாநகராட்சியின் முதன்மை அலுவலக ஊழியர்கள், மண்டல அலுவலக ஊழியர்கள் முதல் துப்புரவு தொழிலாளர்கள் வரை மொத்தம் 5500- க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். மாதம் பத்து கோடி ரூபாய்க்கு மேல் சம்பளச் செலவினங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சேலம் மாநகராட்சியின் கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகம் தாதகாப்பட்டியில் செயல்பட்டு வருகிறது. இந்த மண்டலத்தில் துப்புரவு ஊழியராக பணியாற்றி வருபவர் வெங்கடேஷ் (38). இவருடைய தந்தை குணசேகரன், சேலம் மாநகராட்சியில் துப்புரவு ஆய்வாளராக பணியாற்றி, ஓய்வு பெற்றவர். அவர் ஓய்வு பெறுவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பே வெங்கடேஷை துப்புரவு தொழிலாளியாக உள்ளே கொண்டு வந்தார்.
பி.காம்., முதலாம் ஆண்டுடன் படிப்பை நிறுத்தியிருந்த வெங்கடேஷ், கடந்த பத்து ஆண்டுகளாக கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்தில் சம்பள செலவின 'பில்' பட்டியல் தயாரிக்கும் பணியில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். கொண்டலாம்பட்டி மண்டலத்தில் மட்டும் 1500 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். மாதந்தோறும் அவர்களுக்கான சம்பள பட்டியல் தயாரித்து, ஊதியத்திற்கான காசோலைகளை இந்தியன் வங்கியில் செலுத்தும் வேலைகளும் வெங்கடேஷிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் கடந்த பத்து நாள்களுக்கு முன்பு, 2018&2019ம் ஆண்டறிக்கை தொடர்பான ஆவணங்களில், சில விவரங்கள் திருத்தி எழுதப்பட்டு இருப்பது குறித்து அலுவலக கணக்காளர் வெங்கடேசன் என்பவர் கண்டுபிடித்தார். இதனால் சந்தேகம் அடைந்த அவர், ஆண்டறிக்கை தொடர்பான ஆவணங்களை உடனடியாக டேபிளில் கொண்டு வந்து வைக்கும்படி, துப்புரவு ஊழியரான வெங்கடேஷிடம் கேட்டுள்ளார்.
அதற்கு அவரும், 'இதோ தருகிறேன்... அதோ தருகிறேன்' என்று சாக்குபோக்கு சொன்னாரே தவிர, கடைசிவரை கோப்புகளை சமர்ப்பிக்காமல் நாளைக் கடத்தி வந்துள்ளார். மேலும், குறிப்பிட்ட ஆவணங்கள் தொடர்பான சந்தேகம் எழுந்ததில் இருந்து, துப்புரவு ஊழியரான வெங்கடேஷ் சொல்லாமல் கொள்ளாமல் விடுப்பில் சென்று விட்டார். இது, அலுவலக கணக்காளர் வெங்கடேசனுக்கு மேலும் அய்யத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து, முந்தைய ஆண்டின் தணிக்கை அறிக்கை, ஆண்டறிக்கை குறித்த கோப்புகளை ஒன்று விடாமல் ஆய்வு செய்ததில் சம்பள செலவின பட்டியல்கள் பலவற்றில் திருத்தம் செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. கொண்டலாம்பட்டி மண்டலத்தில் பணியாற்றாத ஊழியர்கள் சிலரின் பெயர்களில் சம்பளம், கிராஜூவிட்டி தொகைகள் போலி காசோலைகள் மூலமும், போலி 'பில்' பட்டியல் மூலமும் மோசடியாக கையாடல் செய்யப்பட்டு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. துப்புரவு ஊழியரான வெங்கடேஷ், சம்பள பட்டியல்கள், காசோலைகளை வங்கியில் சமர்ப்பிக்க கொண்டு செல்லும் வழியிலேயே, போலியாக சம்பள பட்டியல் தயாரித்தும், காசோலைகளை திருத்தியும் மோசடி செய்திருப்பதையும் ஆதாரங்களுடன் கண்டுபிடித்தனர்.
இந்த மோசடி குறித்து அலுவலக கணக்காளர் வெங்கடேசன், அலுவலக கண்காணிப்பாளர், கொண்டலாம்பட்டி மண்டல உதவி ஆணையர் ரமேஷ்பாபு ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டு சென்றார். அவர்கள் மூலம் மாநகராட்சி ஆணையர் சதீஷின் கவனத்திற்கும் எடுத்துச் செல்லப்பட்டது.
இதையடுத்து, துப்புரவு ஊழியர் வெங்கடேஷிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில், அவர் தனது தம்பி மோகன், தாயார் விஜயா மற்றும் பிரபாவதி ஆகியோரை கொண்டலாம்பட்டி மண்டலத்தில் பணியாற்றும் ஊழியர்கள் என போலியாக பெயர்களை சேர்த்து, அவர்களின் பெயர்களில் போலி காசோலை தயாரித்து இதுவரை 88 லட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக இவ்வாறு நூதன முறையில் கையாடல் செய்துள்ளார் வெங்கடேஷ். இதற்காக மோகன், விஜயா, பிரபாவதி ஆகியோரின் பெயர்களில் வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டு, ஏடிஎம் அட்டையும் பெற்றுள்ளார்.
எல்லா விவரங்களையும் திரட்டிய நாம், இது தொடர்பாக வெங்கடேஷிடம் செப். 11ம் தேதி, செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது, ''நான் எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை. யாரோ தப்பாக சொல்லி இருக்கின்றனர். நீங்கள் கேட்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது,'' என்று பட்டும் படாமலும் பதில் அளித்தார்.
இந்நிலையில் மீண்டும் நேரில் விசாரிப்பதற்காக, சேலம் கருங்கல்பட்டி கலைஞர் நகரில் உள்ள வெங்கடேஷின் வீட்டுக்கு செப். 13ம் தேதி மாலையில் சென்றோம். அங்கு அவரும், அவருடைய இரண்டாவது மனைவி, குழந்தைகள் ஆகியோருடன் வீட்டில் பணியன் அணிந்த நிலையில் இருந்தார். அவர் மீது எழுந்துள்ள புகார் குறித்து நேருக்கு நேராக கேட்டபோதும், அப்படி எல்லாம் எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை என்றார்.
''நான் இது சம்பந்தமாக எங்கள் ஹெச்ஓடியிடம் (மாநகராட்சி ஆணையர்) பேசிவிட்டுத்தான் எதுவாக இருந்தாலும் சொல்ல முடியும். இப்போது எதற்கு அதைப்பற்றி எல்லாம் கேட்கிறீர்கள்? இப்போது நான் லீவில் இருக்கிறேன். நீங்க எதாவது எழுதினால் நாங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வோம். எதுவாக இருந்தாலும் நான் அப்புறம் சொல்கிறேன்,'' என்றார். அவரிடம், 'உங்கள் மீது போலீஸ் கமிஷனரிடமும் புகார் கொடுக்கப்பட்டு உள்ளதாக கொண்டலாம்பட்டி மண்டல ஊழியர்கள் சொன்னார்கள்,' என்றோம். அதன்பிறகு அவரே பேசினார்...
''குடும்பத் தேவைகளுக்காக தனியார் ஃபைனான்சில் 25 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கி இருந்தேன். அதற்கு வட்டி அதிகமானதால் கடன் நெருக்கடி அதிகமானது. அதனால் தப்பு செய்ய நேர்ந்துவிட்டது. அதை நான் திருப்பிச் செலுத்தி விடுகிறேன் என்று சொல்லி விட்டேன். இப்போதுகூட முதல்கட்டமாக கடந்த 7ம் தேதி, 4 லட்சம் ரூபாய் கட்டியிருக்கிறேன். என் அம்மா பெயரில் உள்ள வீட்டை விற்கவும் முடிவு செய்திருக்கிறேன். அதை விற்றால் எப்படியும் 40 லட்சம் ரூபாய் கிடைக்கும். அதன்பிறகு கொஞ்ச காலத்தில் மீதப்பணத்தையும் செலுத்தி விடுவேன்,'' என்றவர், ''ஆமா...போலீஸ் வந்து விசாரிப்பார்களா..? போலீசுக்கெல்லாம் எதற்கு போகிறார்கள்? அதை மட்டும் கொஞ்சம் நிறுத்தி வைக்கும்படி நீங்கள் சொல்ல முடியுமா? ஒரு உதவியாக கேட்கிறேன்...,'' என்றார்.
இந்த பகீர் மோசடி ஒருபுறம் இருக்க, ஏற்கனவே துப்புரவு ஊழியர்களுக்கான பற்றாக்குறை இருக்கும்போது, துப்புரவு ஊழியரான ஒருவரை எதற்காக அலுவலகத்தில் சம்பள 'பில்' பட்டியல் தயாரிக்கும் பணிகளில் ஈடுபடுத்த வேண்டும்?, தனியொரு நபராக இவ்வளவு பெரிய மோசடியில் ஈடுபட்டிருக்க முடியுமா? இதில் வேறு அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கிறதா? என்ற வினாக்களும் எழுந்துள்ளன. இதேபோன்ற நூதன மோசடிகள், சேலம் மாநகராட்சியின் மற்ற மண்டல அலுவலகங்களிலும் நடந்திருக்கலாம் என்றும் சிலர் அய்யங்களை எழுப்பியுள்ளனர்.
இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் சதீஷிடம் கருத்து கேட்பதற்காக பலமுறை செல்போனில் தொடர்பு கொண்டும், அவர் அழைப்பை ஏற்காமல் தவிர்த்தார். பதில் சொல்வாரா மாநகராட்சி ஆணையர்?