ரூ.500 டிக்கெட்டில் சிறைக்குப் போகலாம்!
குற்றம் செய்து சிறைக்குப் போகும் காலம் போய், டிக்கெட் எடுத்து சிறைக்குப் போகும் காலம் வந்திருக்கிறது.
குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் சிறையில் அடைக்கப்படுவது வழக்கம்தான். தனக்காக குற்றம் செய்தவர்கள், நாட்டுக்காக குற்றம் செய்தவர்கள் என்று அவர்களில் பல ரகம் உண்டு. சிறையில் அடைக்கப்படுகிறவர்களில் சிலர் மேதைகளாகவும், பலர் மோசடிக்காரர்களாகவும் மாறியிருக்கிறார்கள். என்றாலும் பொதுவாக, சிறைச்சாலையை ஒரு கல்விக்கூடமாகவே ஒப்பிடுவார்கள்.
எது எப்படியிருந்தாலும் நாட்டுக்காவும், பொது நன்மைக்காகவும் சிறைவாசம் சென்றவர்களை வரலாறு போற்றுகிறது. குற்றச்செயல்களில் ஈடுபட்டு, சிறைக்குச் சென்றவர்களை இந்த நாடு தூற்றியிருக்கிறது.
சிறைக்குப் போவதை யாரும் விரும்பாத நிலையில், பழைய சிறைச்சாலை ஒன்றை தெலங்கானா சிறைத்துறை சுற்றுலாத்தலமாக மாற்றியிருக்கிறது. அந்தச் சிறையில் கைதிகளாக தங்கி சுற்றிப்பார்க்க கூட்டம் அலைமோதுகிறது என்றால் நம்ப முடிகிறதா உங்களால்?

தெலுங்கானா மாநிலத்தில் உள்ளது சாகர்ரெட்டி சிறைச்சாலை. இது ஐதராபாத் நிஜாம் காலமான 1796ஆம் ஆண்டு கட்டப்பட்டது. தற்போது இந்த சிறை தெலுங்கானா சிறை நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சிறைச்சாலை ‘ஜெயிலை உணருங்கள்’ (Feel the Jail) என்ற திட்டத்தின் மூலம் சுற்றுலாப் பயணிகளுக்கு பார்வைக்காக விடப்படுகிறது. இங்கு சிறைக்கைதியாக இருக்க நபர் ஒன்றுக்கு ரூ.500 வசூலிக்கப்படுகிறது. உள்ளே செல்பவர் 24 மணிநேரம் சிறைக்கைதியாக இருக்க அனுமதிக்கப்படுவார்.
சமீபத்தில் மலேசியாவைச் சேர்ந்த இங் இன் வோ மற்றும் ஓங் பூன் டெக் ஆகிய இரண்டு பேர் இந்த சிறைக்கு சென்றுள்ளனர். ஆன்லைன் மூலமாக இப்படி ஒரு இடம் இருப்பது தெரிந்து அங்கு சென்றவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அந்த நாளை குதூகலமாக கொண்டாடித் தீர்த்திருக்கின்றனர்.
இந்த சிறைக்குள் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு சிறைக்கைதிகளின் உடைகள், போர்வைகள், தண்ணீர் குடிக்கும் பாத்திரம் மற்றும் தட்டுகள் வழங்கப்படும். உள்ளே அவர்கள் இருக்கும் நேரத்தில் தோட்டவேலை, சிறையைச் சுத்தம் செய்தல் மற்றும் சிறைக்கைதிகளுக்கு வழங்கப்படும் வேறுசில வேலைகளைச் செய்யலாம். இந்திய பாரம்பரியத்தில் தயாரிக்கப்பட்ட உணவை சிறை நிர்வாகமே வழங்குகிறது. உணவைத் தவிர உள்ளே செல்பவர்களுக்கு முழு சிறை அனுபவம் இருக்கும் என்கின்றனர் சிறை நிர்வாகத்தினர்.
இந்த சிறை கண்காணிப்பாளர் சந்தோஷ்குமார் ராய், இதுவரை இந்த சிறைக்கு 47 பேர் சுற்றுலா நிமித்தமாக வந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் கொண்டாடியதைப் பார்க்கும்போது எங்களுக்கே மகிழ்ச்சியாக இருந்தது. சுற்றுலாப் பயணிகள், ஆவணப்படங்கள், ஊடகங்கள் என பலவற்றின் பார்வையில் இந்த சிறை சிக்கியுள்ள நிலையில், இனி வருகை அதிகருக்கும் என எதிர்பார்க்கிறோம் என உற்சாகம் பொங்க தெரிவித்துள்ளார்.

இந்த பாரம்பரியமிக்க சிறையை சுற்றுலாத்தலமாக மாற்றலாம் என்ற யோசனையை வி.கே.சிங் என்பவர்தான் முதன்முதலில் தந்திருக்கிறார். சில நடைமுறைச் சிக்கல்களைக் கலைந்தபின்னர், கடந்த 2016ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்கு சாகர்ரெட்டி சிறைச்சாலை விடப்பட்டது.
விரும்பி யாருமே சிறைக்கு போகமாட்டார்கள் என்ற நிலையை, இந்த சுற்றுலா சிறைச்சாலை மாற்றியிருக்கிறது. இனி ‘நான் ஜெயிலுக்குப் போறேன்.. நான் ஜெயிலுக்குப் போறேன்..’ என எவ்வளவு சத்தமாகக் கூவினாலும், ‘யார்ரா நீ கோமாளி’ என இந்தச் சிறையைச் சேர்ந்த எந்தக் காவலரும் தடுத்து நிறுத்த மாட்டார்கள்.
- ச.ப.மதிவாணன்