விக்னேஷ்காந்த்... இணைய வானொலி ஆர்.ஜேவாக நமக்கு அறிமுகமாகி தமிழில் யூ-ட்யூப் பரவலாகத் தொடங்கிய காலகட்டத்திலேயே அதில் களமிறங்கி இன்று வரை வெற்றிகரமாகத் தொடரும் இவர் 'மீசைய முறுக்கு', 'தேவ்' படங்களின் மூலம் சினிமாவிலும் கால் பதித்துள்ளார். பிஸியான நிகழ்ச்சி தொகுப்பாளரான இவர், இதற்கிடையில் தனது 'பிளாக் ஷீப்' குழுவினருடன் 'நவயுக ரத்தக்கண்ணீர்' எனும் மேடை நாடகத்தையும் நடத்தி வருகின்றார். அவருடன் நம் உரையாடல்...
'நவயுக ரத்தக்கண்ணீர்' மேடை நாடகம் நடத்தும் நோக்கம் எப்படி வந்தது?
ஒரு மேடை இருக்கு, அதுல பிளாக் ஷீப் குழு ஏதாவது பண்ணுங்கன்னு சொல்லும்போது வந்துச்சு. எங்க வீடியோவுல அரசியல் பேச்சு குறைஞ்சுட்டாலும் எங்களுக்குள்ள அந்தத் தாக்கம் இருந்துகிட்டுதான் இருக்கு. எங்க குழு பசங்களோட நடிப்புத் திறமையையும், அரசியல் கருத்துக்களையும் சொல்ற ஒரு விஷயமாக நாடகத்தைத் தேர்ந்தெடுத்தோம். நவயுக ரத்தக்கண்ணீர் கதையை இணையதள தொடரா எடுக்க நினைச்சோம். அப்புறம் அதை படமாக்க முயற்சி பண்ணுனோம், இறுதியில் நாடகம்தான் இதுக்கு சரியான ஊடகம்னு தோனுச்சு. ஏன்னா, ரத்தக்கண்ணீர் படமே நாடகமா இருந்து படமா மாறுனதுதான்.
உங்க சமூக கருத்துக்களை வீடியோவுல சொல்றதுக்கும் இப்படி நாடகங்கள் மூலமா மக்களை நேர்ல சந்திச்சு சொல்றதுக்கும் என்ன வித்தியாசம்னு நினைக்குறிங்க?
மேடை நாடகத்தின் பாதிப்பு அதிகமா இருக்கும். ஏன் சினிமாவுல சிகரெட் பிடிக்குறதும், ஆபாசமா பேசுறதும் மக்களை கெடுக்குற விஷயம்னு வருத்தப்படுறோம்னா, வீடியோவுல பதிவு பண்ணும்போது ஒருத்தரோட கருத்தா மட்டும் போய்சேரும், ஆனால் படத்துலயும் நாடகத்துலயும் பாக்கும்போது பார்வையாளன் தன்னையும் ஒரு கதாபாத்திரமா நினைச்சுதான் பாக்குறான். அதனால நாடகத்துல சொல்லப்படுற கருத்துக்கள் அதிக விளைவை ஏற்படுத்தும். டிஜிட்டல் மீடியாவுல அது நடக்குறது இல்ல.
ஆர்.ஜே, வீ.ஜே, அப்பறம் ப்ளாக் ஷீப் யூ-ட்யூப் சேனல், இப்ப படத்துலயும் நடிக்குறீங்க. இதுல எந்த வேலை உங்களுக்கு ரொம்ப பிடிச்சது?
நிகழ்ச்சி தொகுப்பாளர் (anchoring). ஒவ்வொரு மேடை ஏறும்போது சரியாய் வேலைய செஞ்சுடணும், எப்படியாவது மக்களை மகிழ்விக்கணும்னு நினைச்சு பயந்து பயந்து ஏறுவேன். கேமரா முன்னாடி நடிக்குறப்ப இல்லாத பயம், டிஜிட்டல் மீடியாவுல ஒரு ஸ்கிரிப்ட் எழுதி அதை செயல்படுத்துறப்ப இல்லாத பயம், தொகுப்பாளரா மேடையில ஏறும்போது இருக்கும்.
முதலில் லோக்கல் சேனல் வீ.ஜே ஆகணும்னுதான் ஆசை இருந்துச்சு. நான்லாம் வீ.ஜேவுக்கு ஃபோன் பண்ணி "உங்கள ரொம்ப புடிக்கும் மேடம், சூப்பரா பண்றீங்க"னு வலியுற வகை. 'சன் மியூசிக்' சேனலுக்கு கால் பண்ணிட்டு எத்தனையாவது கால்னு எண்ணிக்கிட்டு இருப்பேன். ஒரு முறை லோக்கல் சேனலுக்கு ஆடிஷனுக்கு போயிருந்தப்ப, அங்க ஒருத்தர் "நீ நல்லா பண்ற தம்பி, ஆனால், உன் உருவமும் நிறமும் இதுக்கு ஒத்துவராது, உன் திறமையை ரேடியோவுல காட்டு"னு சொன்னாரு, அப்புறம்தான் நான் ஆர்.ஜே ஆகணும்னு நினைச்சேன்.
ஆரம்பத்துல உங்க உருவத்தை வச்சு நீங்க வீஜே ஆக முடியாதுனு சொல்லும்போது உங்களுக்கு எப்படி இருந்தது? அதை எப்படி எதிர்கொண்டீர்கள்?
இப்ப சொன்னா அதெல்லாம் ஓவரா இருக்கும். அப்போ அது கஷ்டமான விஷயம்தான். அதுவும் நம்ப அளவே திறமை இருக்க ஒருத்தர் உருவத்தால் மட்டுமே மேல போகுறத பாக்குறது ரணமா இருக்கும். ஆனால், அதெல்லாம் தாண்டி உங்கள நீங்க நம்பும்போதுதான் பாசிட்டிவிட்டி கிடைக்கும். ஒன்னு கிடைக்கலைனா அதை நம்மளே உருவாக்கணும்னு எண்ணம் வரணும்.
மீசையை முறுக்கு டீம், இப்ப தேவ் பட டீம் மாதிரி நல்ல டீம்லாம் தானா அமைஞ்சதா? இல்ல நீங்களே ஏற்படுத்திக்கிட்டதா?
நாங்க 5 பேரா இருந்து ஆரம்பிச்சபோதே ஒரு புது பையன டீம்ல சேக்கணும்னா அவனுக்கு திறமை இருக்கணும்னு முக்கியம் இல்ல. திறமை இல்லாதவனுக்கு வேலை கத்துக்கொடுத்துடலாம். நாங்க பண்பை மட்டும்தான் பார்ப்போம். 24 மணி நேரமும் வேலை செய்ய தயாரா இருக்கானா, தனக்குனு இல்லாம பக்கத்துல இருக்கவன் ஜெயிச்சாலும் சந்தோஷப்படுறானா, எதையும் எதிர்பார்க்காம இருக்கானானு பாத்துதான் சேத்துக்குவோம். அதனாலேயே பாசிட்டிவான டீம் அமைஞ்சுது. இன்னொரு விஷயம் பாஸிட்டிவா யோசிச்சுக்கிட்டு பாசிட்டிவான டீமோட நடந்து போகுற பொது, உங்களுக்கு என்ன வேணுமோ அது தானா கிடைக்கும்.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் 'பிளாக் ஷீப்' டீம் படம் பண்றீங்க. அவருக்கும் உங்க டீமுக்குமான நட்பைப் பற்றி?
எங்களுக்கும் அவருக்கும் பாசிட்டிவிட்டிலதான் இணைப்பு வந்தது. அவ்வளவு பாசிட்டிவான மனிதர் அவர். நான் எப்பவுமே சொல்றது என்னனா சிவகார்த்திகேயன் வெற்றிக்கு காரணம் அவரோட திறமை உழைப்பை எல்லாம் தாண்டி அவர் ஜெயிக்கணும்னு தமிழ்நாட்டுல இருக்க மக்கள் எல்லாரும் நினைச்சோம். அந்த பாசிட்டிவிட்டியாலயும் வெற்றிபெற்ற மனிதர் சிவகார்த்திகேயன். அதனாலேயே எனக்கு அவரை ரொம்பப் பிடிக்கும். நாங்க முதலில் ஆரம்பிச்ச ஸ்டுடியோவை அவர்தான் திறந்து வச்சார். இப்ப படம் பண்ணும்போதும் அவர்தான் தயாரிக்கிறார்.