Skip to main content

ரஜினியை கண்டு அரசியல் கட்சியினர் பயப்படுகிறார்கள் - ரவீந்திரன் துரைசாமி பேச்சு!

Published on 23/01/2020 | Edited on 23/01/2020

துக்ளக் ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய சில செய்திகள் சர்ச்சையாகி உள்ள நிலையில் இதுதொடர்பாக அவர் மீது காவல்துறையினரிடம் சிலர் புகார் தெரிவித்திருக்கிறார்கள். இந்நிலையில் இதுதொடர்பாக அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமியிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் பின்வருமாறு, 

துக்ளக் விழாவில் ரஜினி பேசியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெரியார் குறித்து அவர் பேசியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பல அமைப்புகள் வேண்டுகோள் விடுத்த நிலையில், நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று ரஜினி நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தில் ரஜினியின் நிலைபாடு பற்றி உங்களின் கருத்து என்ன?

ரஜினிகாந்த் இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை. ஆனால் முதல்வரை விட, எதிர்கட்சி தலைவரை விட விற்பனை வலிமை அதிகம் கொண்டவராக, புகழ்மிக்கவராக அவர் இருக்கிறார் என்பதை அரசியல் தெரிந்த அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அவர் எவ்வளவு வாக்குகளை வாங்குகிறார் என்பதெல்லாம் வரப்போகின்ற தேர்தலில் முடிவாகின்ற விஷயம். ஆனால் பரபரப்புகளை உண்டாக்கூடிய வல்லமையை அவர் பெற்றிருக்கிறார் என்பதே தற்போதைய களம் சொல்லும் செய்தியாக இருக்கிறது. அவரை பற்றி பேசினால் தான் மக்கள் மத்தியில் ஈர்ப்பு இருக்கிறது என்பது என்பதை நாம் நேரடியாக பார்க்க முடிகின்றது. இந்த விஷயத்தில் ரஜினியை எதிர்க்க யாருக்கும் துணிவில்லை என்பதை கடந்த சில நாட்களாக நாம் நேரில் பார்க்கும் சம்பவங்களே சாட்சியாக இருந்து வருகின்றது. 

 

gjk



அவர் பாஜகவுடன் நட்பாக இருக்கிறார், பேசுகிறார் என்று கூறுகிறார்களே தவிர பெரியார் குறித்த அவரின் கருத்துக்கு ஓட்டு வங்கி உள்ள எந்த கட்சியினரும் கடுமையான கருத்துக்கனை இதுவரை தெரிவிக்கவில்லை. இதில் இருந்தே அவரை எதிர்க்க முடியாது என்பதை பெரும்பாலான கட்சியினர் சொல்லாமல் சொல்லி வருகிறார்கள். இந்த விஷயத்தில் மு.க ஸ்டாலின் கூட ரஜினியை எதிர்த்து பெரிய அளவிலான கண்டனங்களை தெரிவிக்கவில்லை. நாங்கள் தலைவராக கருதும் பெரியாரை நீங்கள் எப்படி இவ்வாறு கூறலாம், தமிழ மண்ணில் இதற்கு நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியிருக்கலாம் இல்லையா? ஆனால் அப்படி எந்த ஒரு அறிக்கையும் அவர் விடவில்லை. ஏனென்றால் முதல்வர் ஓட்டத்தில் அவரும் இருக்கிறார் என்பது ஸ்டாலினுக்கு மிக நன்றாக தெரியும். எனவே அவர் தற்போது நாகரீக அரசியலை மேற்கொண்டு வருகிறார். அதை நான் வரவேற்கிறேன்.

ரஜினி அரசியலுக்கு வந்தால் அனைத்து சாதியினரும் அவருக்கு ஆதரவு கொடுக்கின்ற சூழ்நிலைகள் தற்போது உருவாகி வருகிறது. இதை பல பேரால் தற்போது ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் பெரியாரிஸ்ட்டுகள் இந்த விவகாரத்தை கையில் எடுத்து பார்க்கிறார்கள். இது தேவையில்லாத ஒன்று. அவரை இந்த மாதிரியான செய்திகளை மிகைப்படுத்தி கட்டுப்படுத்த பார்க்கிறார்கள். அது நடக்காது, அவரை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. பெரியார் உயிரோடு இருந்திருந்தால் ஆமாம், நான் தான் சொன்னேன் என்று கூறியிருப்பார். அவர் யாருக்கும் பயந்து பேசமாட்டார். அவருடைய அனைத்து உரைகளையும் நான் கேட்டிருக்கிறேன். அதை அனைத்தையும் இங்கே பேச முடியாது. எனவே இதை வைத்து பெரியாரிஸ்ட்டுகள் அரசியல் செய்கிறார்கள். யாருக்குமே பெரியார் அப்படித்தான் சொன்னார் என்று சொல்ல துணிவில்லை என்பதே எதார்த்தமான உண்மை.