சமீபத்தில் வேலை தேடுவதற்கான தளமும் செயலியுமான ‘லிங்க்டு இன்’ பக்கத்தில் ரஞ்சிதாவின் புகைப்படம், நித்யானந்தாமாயி சுவாமி என்ற தலைப்பில் இருக்க, அதன் கீழே கைலாசாவின் பிரதமர் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இயக்குநர் இமயம் என தமிழர்களால் பாராட்டப்படும் பாரதிராஜாவின் நாடோடித் தென்றல் படத்தில் அறிமுகமான ரஞ்சிதா, 20 படங்களுக்குப் பின் தன் கேரியரில் ஒரு தொய்வைச் சந்தித்தார். இந்த தொய்வு காலகட்டத்தில்தான் நித்தியானந்தாவுடனான அறிமுகம் ஏற்பட்டது. அதே காலகட்டத்தில் தமிழின் மற்றொரு இயக்குநரான மணிரத்னத்தின் ‘ராவணன்’ படத்திலும் வாய்ப்பு கிடைத்தது ரஞ்சிதாவுக்கு. சினிமாவா, ஆன்மிகமா என்ற நிலை வந்தபோது, நித்தியானந்தா அளித்த நம்பிக்கையின் அடிப்படையில் படவாய்ப்புகளை முற்றிலுமாக உதறித் தள்ளிவிட்டு நித்தியானந்தாவின் பிரதான சிஷ்யையாக மாறினார்.
காலம் நித்தியானந்தாவை உயரத்திலிருந்து பாதாளத்துக்குத் தள்ளி, நாடுவிட்டு நாடு ஓட வேண்டிய சூழல் உண்டான போது, கூடவே அவரது பிரதான சிஷ்யையாக ரஞ்சிதாவும் ஓட வேண்டியதானது. அப்போதெல்லாம் தான் இழந்த வாய்ப்புகளையும் உயரங்களையும் பற்றி குற்றம் சாட்டும் தொனியில் மீண்டும் மீண்டும் நித்தியானந்தாவிடம் பேசுவதை ரஞ்சிதா வழக்கமாக வைத்திருந்தார். அதற்குப் பரிசாகத்தான் கைலாசாவின் பிரதமர் பட்டத்தை ரஞ்சிதாவுக்கு அளித்திருக்கிறார் நித்தி.
லிங்க்டு இன் புரொஃபைலைத் தவிர வேறெந்த செய்தியும் ரஞ்சிதா குறித்து ஊடகங்களில் காணப்படாத நிலையில், நித்தியானந்தாவின் முன்னாள் சிஷ்யரும் தனது பழைய தர்மத்திலிருந்து ஒதுங்கி வாழும் ஒருவரைத் தொடர்புகொண்டு ரஞ்சிதா அலைஸ் நித்தியானந்தாமயி சுவாமி குறித்த விவரங்களைக் கேட்டோம்.
"நித்தியானந்தாவின் அடுத்தகட்ட தலைமைப் பொறுப்பு ரஞ்சிதாவிடம்தான் இருக்கிறது. டெக்னிக்கலாக கண்ட்ரோல் அவரிடம் வந்துவிட்டது. அங்கே உள்ளே இருப்பவர்களிடமிருந்து இப்போது வரும் தகவல் இதுதான். இதில் பழைய ஆட்களுக்குக் கொஞ்சம் வருத்தம் என்றாலும் நித்திக்கு அடுத்த இடத்தை அடைந்திருப்பது ரஞ்சிதாவுக்கு ஆதாயம்தான்'' என்கிறார்.