தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், நரசிம்மமூர்த்தி என்பவர், சொத்துக்குவிப்பு ஊழல் வழக்கில் நான்காண்டு காலம் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா பற்றி கேட்ட கேள்விக்கு, இந்த ஜனவரி 27, 2021 -இல் விடுதலையாவார் என்ற பதிலைத் தந்துள்ளது கர்நாடக சிறைத்துறை நிர்வாகம். மேலும், தனக்கான தண்டனை தொகையை சசிகலா கட்ட தவறினால் ஜனவரி 27, 2022 -இல் விடுதலையாவார் என்றும் தெரிவித்துள்ளது. சசிகலா வரும் அக்டோபரிலேயே விடுதலையாவார் எனச் சொல்லப்பட்டு வந்த நிலையில், இந்தத் தகவல்கள் அ.ம.மு.க.வினரிடம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தினகரன் உள்ளிட்ட சசிகலா உறவினர்கள் பலரும் வழக்கறிஞர்களிடம் ஆலோசனை நடத்தியபடி இருக்கிறார்கள். இந்தச் சூழலில், கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு ஒரு கடிதத்தை சசிகலா எழுதியிருப்பதாகவும் தகவல்கள் கசிகின்றன. ஜனவரி 27 என தேதி குறிக்கப்பட்டிருப்பது குறித்து, சிறைத்துறை விதிகளில் மிகுந்த அனுபவமிக்க சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் கண்ணதாசனிடம் நாம் பேசியபோது, "சசிகலா உள்ளிட்டவர்களுக்கு நான்காண்டு காலம் தண்டனையும், 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது. அபராதத்தைக் கட்ட தவறினால், மேலும் ஒரு வருட காலம் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பதே தீர்ப்பு.
இதனடிப்படையில், சிறையில் சசிகலா அடைக்கப்பட்ட நாளின் போதே வழங்கப் பட்டுள்ள தண்டனைக் காலத்தைக் கணக்கிட்டு, அவரது விடுதலைக்கான தேதியும் தீர்மானிக்கப்பட்டு கோப்புகள் தயாரிக்கப்பட்டுவிடும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்விகள் கேட்கப்படும் போது, அந்தக் கோப்புகளில் இருக்கும் தேதியைத்தான் சிறைத்துறை நிர்வாகம் தெரிவிக்கும். அப்படிப்பட்ட தகவல்தான் தற்போது வந்திருக்கிறது.
அதேசமயம், சிறை விதிகளின்படி தண்டனைக் காலங்களில் சசிகலாவுக்கு சலுகை நாட்கள் கிடைத்திருக்குமானால், அதனைத் தேவைப்படுகிற போதுதான் பரிசீலிப்பார்கள். அப்படிப் பரிசீலிக்கும்போது சலுகைகளாக எத்தனை நாட்கள் கிடைக்கிறதோ, அந்த நாட்களை மொத்த தண்டனைக் காலத்திலிருந்து கழித்த பிறகே விடுதலை தேதியை முடிவு செய்வர். அந்த வகையில், முன் விடுதலை ஆவதற்கான வாய்ப்புகளும் இருக்கவே செய்கின்றன. அவரது விடுதலையில் அரசியல் விளையாடுகிறதா என்பது எனக்குத் தெரியாது?'' என்கிறார் அழுத்தமாக.
சசிகலாவின் விடுதலை தேதி குறித்த பரபரப்பு ஆளும்கட்சி அமைச்சர்களிடம் எதிரொலித்தபடி இருக்கிறது. சட்டமன்ற நிகழ்வுகள் முடிந்ததும் இதுகுறித்து, குற்றவியல் அரசு வழக்கறிஞர்களிடம் விவாதித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அப்போது, இந்தத் தேதியை வைத்துக்கொண்டு சசிகலா முன் விடுதலை ஆக மாட்டார் என்கிற முடிவுக்கு வராதீர்கள். கர்நாடக அரசு நினைத்தால் முன் விடுதலைக்கு அனுமதிக்கவும் செய்யலாம்'' என்று எடப்பாடியிடம் வழக்கறிஞர்கள் தெரிவித்திருப்பதாக அ.தி.மு.க.வின் மேலிட தொடர்புகள் கூறுகின்றன.
இதற்கிடையே, கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு சசிகலா கடிதம் எழுதியிருப்பதாக மத்திய உளவுத்துறை வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இதுகுறித்து விசாரித்தபோது, "பரப்பன அக்ரஹாரா சிறைத்துறையின் சூப்பிரன்டெண்ட் வழியாக கடந்த 10 நாட்களுக்கு முன்பு முதல்வர் எடியூரப்பாவுக்கும், கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி.க்கும் ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார் சசிகலா. அதில், தனக்கு வழங்கப்பட்ட தண்டனைக் காலம், பரப்பன அக்ர ஹாரா சிறைக்குள் அடைக்கப்பட்ட தேதி, பரோலில் வெளியே சென்ற நாட்கள் ஆகிய அனைத்தையும் குறிப்பிட்டுவிட்டு, கர்நாடக அரசின் சிறைத் துறை விதிகளின்படி, சிறையில் நேர்மையாக இருந்து வருகிறேன் என்பதையும், விதிகளுக்கு உட்பட்டு கன்னட மொழி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறேன் என்பதையும், அந்த வகையில் ஒரு கைதிக்கு கர்நாடக அரசு வழங்கும் சலுகை நாட்கள் அனைத்தும் எனக்கும் பொருந்தும் என்பதையும் தனது கடிதத்தில் தெரிவித்திருக்கிறார் சசிகலா.
அதனடிப்படையில், எனக்கான சலுகை நாட்களை கணக்கிட்டு அதனை எனது தண்டனை காலத்திலிருந்து கழித்து எனது விடுதலை தேதியை முடிவு செய்யுமாறு பணிந்து சமர்பிக்கிறேன் எனவும் சசிகலா வேண்டுகோள் வைத்துள்ளார்' என்கிறார்கள் மத்திய உளவுத் துறையினர்.
இந்த நிலையில், சசிகலா ஏற்கனவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் இணைந்து சில நாட்கள் சிறையில் இருந்துள்ளார். அந்த நாட்களும், சசிகலா இரண்டு முறை தமிழகத்திற்கு பரோலில் வந்த வகையில் 17 நாட்களும் என அனைத்தையும் கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது, சசிகலாவுக்கு அதிகபட்சம் 130 நாட்கள் சலுகை நாட்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், நன்னடத்தை விதிகளுக்காக வழங்கப்படும் இந்தச் சலுகை நாட்களை ஒரு கைதி தனது உரிமையாகக் கோர முடியாது. அரசாங்கத்தின் கண் அசைவினிலேயே சலுகை நாட்கள் முடிவு செய்யப்படுகின்றன. ஆக, எப்படி கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் சசிகலாவின் விடுதலையில் அரசியல் விளையாட்டுகள் இருப்பதால் கர்நாடக அரசு மனது வைத்தால் மட்டுமே அவரது முன் விடுதலை தீர்மானிக்கப்படும்’ என்கிறார்கள் சிறைத்துறை வழக்குகளைக் கையாளும் வழக்கறிஞர்கள்.