நாங்குநேரியில் பள்ளி மாணவரை சக மாணவர்கள் கொலை வெறியில் கொடூரமாக வெட்டிய சம்பவம், நீட் தேர்வில் ஆளுநர் பேசியது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு கல்வியாளரும், அரசியல் விமர்சகருமான ராமசுப்பிரமணியம் நமக்கு பேட்டி அளித்தார். அவரது பேட்டியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை.
நீட் தேர்வு வந்தபிறகு தான் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அதிகளவில் இடம் கிடைக்கிறது என்கிறார்கள்?
இதை விட முட்டாள் தனமாக சிந்திக்க முடியாது. ஏழரை சதவிகித இட ஒதுக்கீடு இல்லையென்றால் எத்தனை மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்திருக்க முடியும். இதனையெல்லாம் பார்க்கும் பொழுது மத்திய அரசில் அறிவாளிகளே இல்லையா என்ற கேள்வி எழுவதோடு. அவர்கள் தங்கள் கருத்துகளே சிறந்தது என எண்ணுகிறார்கள். தமிழ்நாட்டில் இருந்து முன்வைக்கும் அனைத்து வாதத்தையும் கேட்டுவிட்டு ஒன்றும் செய்யமுடியாது என கூறுவது எந்த விதத்தில் நியாயமாக இருக்கும். இதனைவிடக் கொடுமை பாஜகவிற்கு ஒத்துழைக்கும் பல நபர்கள் நியாயத்திற்கு எதிராக உள்ளனர்.
பள்ளிப் படிப்பை முறையாக படித்திருந்தால் நீட் தேர்வில் தேர்ச்சி பெறலாம் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறதே?
இந்த முறை நீட்டில் தேர்ச்சி பெற்ற 83% சதவிகித அரசு பள்ளி மாணவர்கள் இரண்டாவது, மூன்றாவது முறை எழுதுபவர்களும், சில தன்னார்வலர்களால் உதவி பெற்றும், நிதியுதவிகளை நாடியும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசுப் பள்ளியில் பயிலாத மாணவர்களில் 70% சதவிகித பேர் பலமுறை தோல்வியுற்ற பின் மறுதேர்வு எழுதுபவர்கள். ஆக நிலைமை இப்படி இருக்கிறது. இவர்களைப் போல தேர்வு எழுதியவன் தான், மாணவன் ஜெகதீசும்.
இந்த வருடம் ராஜஸ்தான் கோட்டாவில் மட்டும் 16 மாணவர்கள் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் அனிதா தொடங்கி இன்று ஜெகதீசன், அவனது அப்பா உட்பட 16 பேர் தற்கொலை செய்துள்ளனர். இப்படி தொடர்ந்து சம்பவங்கள் நிகழ, சரியான கருத்துகளை தரவுகளை தமிழ்நாடு முன்வைக்கும் போது, அதற்கு மத்திய அரசு செவி சாய்க்காமல், அவர்களுக்கு ஏற்றதை செய்வது நாட்டிற்கே மிகப் பெரிய ஆபத்தாக முடியும்.