Skip to main content

சுதந்திர தினத்தன்று பிரதமருக்கு இருக்கும் உரிமை மாநில முதலமைச்சர்களுக்கு ஏன் இல்லை-கலைஞர்

Published on 14/08/2018 | Edited on 15/08/2018

72 வது சுதந்திர தினத்தை எட்டியிருக்கிறது இந்தியா. சுதந்திரம் கிடைத்தபின் 1974 வரை ஆளுநர்களே சுதந்திர தினத்தன்றும், குடியரசு தினத்தன்றும் மூவர்ணக் கொடியை மாநிலங்களில் ஏற்றிவந்தார்கள். அதுவரையில், முதலமைச்சர்கள் அதை வேடிக்கை மட்டுமே பார்க்கும் நிலை இருந்தது. ஆனால், செங்கோட்டையில் மட்டும் குடியரசு தலைவர் குடியரசுதினம் அன்று கொடியேற்றினார்,  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் சுதந்திர தினம் அன்று கொடியேற்றினார்.

 

kalaignar

 

 

 

இதை எந்த மாநில முதல்வரும் ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை, கொடியேற்றுவதில் என்ன இருக்கிறது என்று நினைத்தார்களோ என்பதும் புலப்படவில்லை. ஆனால், அதில் ஒரு மாநிலத்தின் உரிமை இருக்கிறது என்பதை யாரும் நினைக்கவில்லை தமிழகத்தை தவிர. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை தாண்டி, மத்தியால் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு கொடுக்கப்படும் அதிகாரம் என்பது ஜனநாயகமா?  பின் எதற்காக மக்கள் தேர்தலில் வாக்களித்து ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் இது போன்ற பல கேள்விகளை அதில் அடக்கிக்கொள்ளலாம். 1973ஆம் ஆண்டு வரை மாநிலங்களில் அந்த மாநில ஆளுநர்களே சுதந்திர தினம் மற்றும் குடியரசுத் தினம் ஆகிய இரு தினங்களிலும் கொடியேற்றி வந்திருக்கின்றனர்.

 

 

 

1974 ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி குடியரசுத் தினம் அன்று தமிழக ஆளுநராக இருந்த கோதர்தாஸ் காளிதாஸ் ஷா கொடியேற்றிவிட்டார். அதன்பின், அப்போது இரண்டாம் முறையாக தமிழக முதலமைச்சராக இருந்த கலைஞர் ஒரு கேள்வியை எழுப்பினார். சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய இந்த இரண்டு தினங்களிலும் மாநில முதலமைச்சர்கள் கொடியேற்ற மறுக்கப்படுகிறார்கள் என்று. மேலும் இது தொடர்பாக பிரதமர் இந்திரா காந்தியிடம் பல கேள்விகளை வைத்தார். மேலும், இதைப்பற்றி அவருடைய முரசொலி நாளிதழில் அறிக்கைகள், கட்டுரைகள் ஆகியற்றை எழுதிவந்தார்.

 

 

 

சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அப்போது எம்பியாக இருந்த முரசொலி மாறனிடம் கலைஞர் ஆச்சரியமாக," ஏன் முதலமைச்சர்களுக்கு மட்டும் கொடியேற்றும் வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை, ஆனால் பிரதமருக்கு சுந்தந்திர தினம் அன்று கொடியேற்ற அனுமதியிருக்கிறது என்றாராம்.  பிப்ரவரி மாதம் கலைஞர், இந்திரா காந்தியிடம், கோரிக்கை வைக்க, அடுத்த ஐந்து மாதங்கள் கழித்து அந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டது. அதாவது, அந்தந்த மாநிலங்களில் குடியரசுதினத்தன்று மாநில ஆளுநரும், சுதந்திரத்தினத்தன்று மாநிலத்தின் முதலமைச்சரும் கொடியேற்றுவார் என்று. அந்த வருட சுதந்திரத்தினத்தில் இருந்து இந்தியா முழுவதும் உள்ள முதலமைச்சர்கள் கொடியேற்றினர்.