ராகுல் காந்தி மற்றும் மோடியின் அமெரிக்கப் பயணம், சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்து மூத்த அரசியல் விமர்சகர் முனைவர். ராம சுப்பிரமணியன் நம்மோடு கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறார்.
ராகுல் காந்திக்கு அமெரிக்காவில் மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. அறிவார்ந்த பேராசிரியர்கள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் என்று அனைவரும் அவரைப் பாராட்டினர். கேட்ட கேள்விகளுக்கு மிகச் சரியாக அவர் பதிலளித்தார். அதன் பிறகு அமெரிக்காவுக்கு மோடி வந்தார். மோடிக்கு அங்கு பெரிய மரியாதைகள் வழங்கப்பட்டன. சீனாவின் அசுர வளர்ச்சி அமெரிக்காவுக்கு பிடிக்கவில்லை. ஆசியாவில் சீனாவை எதிர்கொள்ளக்கூடிய நிலையில் இருப்பது இந்தியா தான். அதனால் இந்தியாவுடன் நல்லுறவை வலுப்படுத்த வேண்டியது அவர்களுக்கான கட்டாயம்.
மோடிக்கு அமெரிக்காவில் கிடைத்த மரியாதை மோடிக்கானது அல்ல. இந்தியாவுக்குக் கிடைத்த அங்கீகாரம். நாடாளுமன்ற கூட்டத்தில் 'மோடி மோடி' என்று ஆதரவாளர்கள் கூச்சலிட்டதை அமெரிக்கா ரசிக்கவில்லை. அமெரிக்காவில் பல்வேறு பத்திரிகையாளர்களிடம் மோடியின் வருகைக்கு எதிர்ப்பும் இருந்தது. பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குக் கூட டெலிப்ராம்ப்டர் மூலம் தான் மோடி பதிலளித்தார். அதில் வருவதை அப்படியே பார்த்து அவர் படித்தார்.
மோடியை கேள்வி கேட்ட பத்திரிக்கையாளரை பாஜகவினர் கடுமையாக சமூக வலைத்தளங்களில் தாக்கினர். இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது. சமீபத்தில் அண்ணாமலை லண்டன் சென்றார். அங்கு House of Lords-ல் அவர் பேசியதை பெரிய சாதனை போல் இங்குள்ள துதிபாடிகள் பேசுகின்றனர். ஆனால் யார் வேண்டுமானாலும் அங்கு சென்று பேசலாம் என்பது தான் உண்மை. இந்தியா வளர்ந்து வருகிறது என்பது உண்மை. ஆனால் 2011 காலகட்டத்திலேயே நாம் வளர்ந்திருந்தோம்.
இதற்கு முன்பிருந்த ஆட்சியாளர்கள் ஒன்றுமே செய்யவில்லை என்று இவர்கள் கூறுவது தவறு. கச்சத்தீவை மீட்பேன் என்று அண்ணாமலை கூறுகிறார். கண்டிப்பாக அவரால் முடியாது. கச்சத்தீவை இனி யாராலும் மீட்க முடியாது என்பதுதான் உண்மை. இலங்கை குறித்து இவர்கள் பேசும் விஷயங்களை அங்குள்ள தமிழர்களும் ரசிக்கவில்லை, சிங்களர்களும் ரசிக்கவில்லை. அண்ணாமலையின் பேச்சுக்கள் இன்னும் தீய விளைவுகளை ஏற்படுத்துவது போல் தான் இருக்கின்றன. பேசும் வார்த்தைகளில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்.