நோய்த் தொற்று காரணமாக பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில் மக்கள் பலர் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர். அவர்களுள் சிலர் மாற்றுத் தொழில்கள் செய்து வாழ்கின்றனர். சிலர் மோசடியிலும் ஈடுபடுகின்றனர்.
போக்குவரத்து முடங்கியதால் தனியார் பேருந்து ஓட்டுனர் ஒருவர் வறுமையால் வேப்பங்கொட்டை விற்று, குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார். முதியவர்கள் இருவர் சுயதொழில் செய்து வாழ்கின்றனர். இன்னொருவர் போலி வங்கியையே நடத்தி மோசடி செய்துள்ளார். இப்படிப் பலதரப்பட்ட மக்களின் வாழ்வியல் பற்றியது இக்கட்டுரை.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையைச் சுற்றியுள்ள கிராம மக்கள் அனைவரும் விவசாயம் மற்றும் அதுசார்ந்துள்ள கூலி வேலையை மட்டுமே நம்பியுள்ளனர். ஆனால் சில ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால் பெரிய அளவில் விவசாயம் செய்ய முடியவில்லை. அதன்மூலம் விவசாயக் கூலிகள் பிழைக்கவும் முடியவில்லை. இப்படி வாழ்க்கைப் போராட்டத்தில் பலர் பெங்களூர், மும்பை, சண்டிகர், சென்னை, கேரளா எனப் பல்வேறு ஊர்களுக்கும் பிழைப்புத் தேடிச் சென்று விடுவார்கள். அப்படிச் சென்றவர்கள் கிராமங்களில் ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் திருவிழாக்களுக்கும் உறவுகளின் திருமணம் போன்ற காரியங்களுக்கு மட்டுமே ஊருக்கு வந்து செல்வார்கள்.
அப்படிப்பட்ட மக்கள் தற்போதைய கரோனா தாக்கத்தினால் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி உள்ளனர். கிராமத்தில் ஏதாவது ஒரு வேலை செய்து கஞ்சியோ கூழோ குடித்து உயிர் வாழ்வோம் என்று வந்தவர்கள், கடந்த மூன்று மாதங்களாக வேலை வாய்ப்புக் கிடைக்காமலும் சுதந்திரமாக எங்கும் சென்று வேலை தேட முடியாமலும் அப்படியே வேலை கிடைத்தாலும் சென்று திரும்ப முடியாத நிலையிலும் தவித்து வருகின்றனர்.
நகரங்களில் உள்ள ஹோட்டல்கள், பேக்கரி கடைகள், ஜவுளிக்கடைகள், நகைக்கடை இப்படி அனைத்து வியாபாரக் கடைகளும் வியாபாரம் இல்லாமல் முடங்கிக் கிடக்கிறது. அரசு தடை உத்தரவினால் அவ்வப்போது கடைகள் மூடப்படுவதாலும் மக்களிடம் வருமானம் இல்லாததால் கடைகளைத் தேடி மக்கள் வரத்தும் குறைந்துவிட்டது.
வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் குடும்பத்தைக் காப்பாற்றியாக வேண்டும். அரசு கொடுத்த ஆயிரம் ரூபாய் வைத்துக் கொண்டு எத்தனை நாளைக்குச் சாப்பிட முடியும்? எனவே பல்வேறு மக்களும் தங்களால் இயன்றதைச் செய்து வருமானத்துக்கு வழி தேடும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
உளுந்தூர்பேட்டை பாளையப்பட்டு தெருவில் வசிக்கும் முதியோர்கள் உஷாராணி. அவரது கணவர் பாவாடை. உஷாராணி கால் நடக்க இயலாத மாற்றுத்திறனாளி. இவர்கள் பல நாட்களாக அரைகுறையாகச் சாப்பிட்டு, பசி பட்டினி கிடந்து பார்த்துவிட்டு, தற்போது சிறு தொழிலாக தங்கள் வீட்டிலேயே கைமுறுக்கு எள்ளடை கடலைமிட்டாய் போன்ற தின்பண்டங்களைச் செய்து அதைச் சின்னச் சின்ன பாக்கெட்டுகளில் அடைத்து ஒரு பாக்கெட் 20 ரூபாய் என்று தெருக்களில் விற்பனை செய்கிறார்கள். அதோடு சில கடைகளிலும் கொடுத்து அவர்கள் விற்பனை செய்து தரும் பணத்தைக் கொண்டு தங்கள் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.
இது குறித்து அவரிடம் கேட்டபோது, ‘எத்தனை நாளைக்கு பட்டினி கிடக்க முடியும்? கடுமையான வேலை செய்யும் உடல் வலிமை எங்களிடம் இல்லை சில நாட்களாக இந்தத் தின்பண்டங்களைச் செய்து விற்று, அதன் மூலம் வரும் வருமானத்தைக் கொண்டு வாழ்க்கையை ஓட்டி வருகிறோம். இதன் மூலம் தினசரி 200 முதல் 300ரூபாய் வரை கிடைக்கும். எண்ணெய், மளிகைச் சாமான்கள் வாங்க வேண்டும். மீதமுள்ளதை வைத்துதான் நாங்கள் சாப்பிட்டு வருகிறோம். அரசு எங்களைப் போன்றவர்களுக்கு வங்கிகள் மூலம் சிறு கடனுதவி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் நாங்கள் போய் நேரடியாகக் கேட்டால் வங்கி அதிகாரிகள் பிச்சைக்காரர்களைப் பார்ப்பது போன்று தூத்தி விடுகிறார்கள். தவிர கடன் கொடுக்க மறுக்கிறார்கள்,’ என்கிறார்கள் பாவாடை மற்றும் அவரது மனைவி உஷாராணி.
உளுந்தூர்பேட்டை அன்னை சத்யா தெருவில் வசித்து வருபவர் மணிகண்டன். தனியார் பேருந்து ஓட்டுநரான இவர் தனது உழைப்பின் மூலம் குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். இந்தநிலையில் நோய்த்தொற்று காரணமாக தொடர்ந்து மார்ச் மாதம் 23ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் பொதுப் போக்குவரத்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, குறிப்பிட்ட சில நாட்கள் மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த நிலையில் ஜூலை 31 ஆம் தேதி வரை பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அரசுப் பேருந்து ஓட்டுநர்களுக்கு அரசு ஊதியம் வழங்குகிறது. ஆனால் தனியார் பேருந்து மற்றும் கார், வேன் ஓட்டுநர்களுக்கு அரசின் மூலம் எந்தவிதமான ஊதியமும் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் தனியார் நிறுவனங்கள் அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச தொகையை இடைக்கால ஊதியமாக வழங்கி வருகின்றனர். இதனிடையே நிர்வாகம் வழங்கும் அந்த ஊதியத்தை பெற்றும் முழுமையாகக் குடும்பத்தைக் காப்பாற்ற முடியாத நிலையில் தவிக்கும் பல குடும்பங்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையில் தனது குடும்பத்தைக் காப்பாற்ற தனியார் பேருந்து ஓட்டுநர் மணிகண்டன், கடந்த ஒருவாரமாக கிராமம் தோறும் சென்று வேப்பங்கொட்டைகள் பொறுக்கி, அதைக் கடைகளில் விற்று, அதில் கிடைக்கும் தொகையைக் குடும்பத்திற்காக செலவழித்து வருகிறார். நாளொன்றுக்கு சுமார் 2 கிலோ முதல் 3 கிலோ வரை மட்டுமே கிடைக்கும். இந்த வேப்பங்கொட்டையைப் பதப்படுத்தி, அதன்பின்னர் கடையில் விற்று அதில் கிடைக்கும் தொகையைத் தனது குடும்பத்திற்குச் செலவழித்து வருவதாகக் கூறுகிறார்.
மணிகண்டன் போன்ற தனியார் பேருந்து, லாரி, கார், வேன் ஓட்டுநர்களுக்கும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது என்று கூறுகிறார் மணிகண்டன்.
கரோனா காலத்தில் வேலைவாய்ப்பு கிடைக்காவிட்டாலும் உழைத்துப் பிழைக்கும் உளுந்தூர்பேட்டை இளைஞர் மணிகண்டன் முதிய வயதில் கைமுறுக்குச் செய்து அதைவிற்றுப் பிழைக்கும் உஷாராணி – பாவாடை.
இப்படிப்பட்டவர்கள் மத்தியில் உழைக்காமலேயே மக்களை ஏமாற்றி பிழைக்கும் வேலையையும் சிலர் செய்து வருகின்றனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த எல்.என்.புரம். ஸ்டேட் பேங்க் நகரைச் சேர்ந்தவர் சையதுகலீல். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி லட்சுமி. கணவன் - மனைவி இருவரும் வங்கி அலுவலர்களாக இருந்து ஓய்வு பெற்றவர்கள். பாரத ஸ்டேட் வங்கி வடக்கு பஜார் கிளை அலுவலகம் ஒன்று இவர்கள் வீட்டில் இயங்கி வருவதாக பண்ருட்டி பாரத ஸ்டேட் வங்கி முதன்மை மேலாளர் வெங்கடேசனிடம் அதே பகுதியைச் சேர்ந்த நாராயணன் என்பவர் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து வங்கி முதன்மை மேலாளர் வெங்கடேசன் நேற்று முன்தினம் அந்த போலி வங்கி செயல்பட்டதாகக் கூறப்பட்ட அந்த வீட்டிற்குச் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார் அப்போது இறந்த வங்கி அலுவலர் சையது கலீல், தனது வீட்டில் பாரத ஸ்டேட் வங்கி வடக்குக் கிளை என்ற பெயரில் போலியாக வங்கி லெட்டர் பேடு, ரப்பர் ஸ்டாம்ப், காசோலைகள் ஆவணங்கள் அனைத்தையும் தயார் செய்து ஒரு வங்கி செயல்படுவது போன்று அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ளார்.
இதையெல்லாம் ஆய்வுசெய்த வங்கி மேலாளர் வெங்கடேசன் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கரிடம் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை செய்தனர் அதில் மேற்படி நபர்கள் அனைவரும் போலித்தனமாக பாரத ஸ்டேட் பேங்க் என்ற பெயரில் மக்களை ஏமாற்றுவதற்காகவும் அதன்மூலம் பணம் பறிப்பதற்காக ஒருவாங்கியை உருவாக்கியுள்ளனர் என்பது விசாரணை மூலம் உறுதி செய்யப்பட்டது அதன்பேரில் போலிவங்கி உருவாக்கி நடத்துவதற்கு முயற்சி செய்த கமல்பாபு, இந்த வங்கிக்குத் தேவையான ரப்பர் ஸ்டாம்ப் செய்துகொடுத்த கடை உரிமையாளர் மாணிக்கம், இவர்களுக்கு உறுதுணையாக இருந்த அருணா பிரிண்டர்ஸ், உரிமையாளர் குமார், கலைவாணி பிரிண்டர்ஸ் உரிமையாளர் ராஜகோபால் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து நால்வரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
உழைக்காமலேயே பணம் சம்பாதிப்பதற்காக தேசியமயமாக்கப்பட்ட பாரத ஸ்டேட் பேங்க் பெயரில் ஒரு வங்கியை உருவாக்கும் அளவிற்கு இளைஞர்கள் ஒன்றுகூடி திட்டமிட்டுச் செயல்படுவதற்குள் காவல்துறையிடம் சிக்கிக் கொண்டுள்ளனர். இந்தக் கரோனா தடையுத்தரவு காலத்தில் இதுபோன்ற நடவடிக்கையின் மூலம் மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் செயல்பட்டுள்ளனர்.
இந்த கரோனா ஊரடங்கு காலத்தில் மொத்தமாக மக்கள் பலரை வறுமையில் தள்ளியிருக்கிறது என்பதைத் தான் இதிலிருந்து நம்மால் விளங்கிக்கொள்ள முடிகிறது.