கரோனா கொடூரத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கும் இந்த நேரத்தில், மின்வாரியம் தொடர்ந்து அனுப்பிவரும் மின்கட்டணத் தகவல், அவர்களை ஹைவோல்ட் அதிர்ச்சிக்கு ஆளாக்கிவருகிறது. அடுத்த நாளுக்கு என்ன செய்வது? என்று அன்றாடம் மக்கள் தவித்து வரும் நிலையில், இது அவர்களை விரக்தியின் விளைம்பிற்குத் தள்ளியிருக்கிறது. எனவே நீதிமன்றமோ, அரசின் நிவாரண அறிவிப்போ தங்களைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறார்கள் அவர்கள்.
அண்மையில் நடிகர் பிரசன்னா தனக்கு ஏற்பட்ட மின்கட்டண அதிர்ச்சியை பகிரங்கமாகவே வெளிப்படுத்த, அவருக்கு அரசியல்வாதிகள் பாணியில் மின்வாரியம் கண்டனம் தெரிவித்தது. வாரியத்தின் இந்தப் போக்கும் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியது. இது தொடர்பான குமுறல்கள் பரவலாக வெடித்தும் கூட அதைக்கண்டு கொள்ளாத படி மெளனம் சாதிக்கிறது எடப்பாடி அரசு.
”இந்த ஊரடங்கு காலத்தின் புதிய மின் சாதனங்களைக் கூட நாங்கள் வாங்கவில்லை. அப்படியிருந்தும் பல மடங்குக் கட்டணம் மிரளவைக்கிறது என இன்னொரு திரைப் பிரபலமும் புலம்பியிருந்தார். இயக்குனரும் நடிகருமான சேரனோ “தமிழகம் முழுவதும் மின்வாரியத்துறையின் செயல்பாடுகளில் ஒரு தெளிவின்மை தென்படுகிறது. ஒவ்வொரு மாதத்திற்கான மின்கட்டணம் இதுவரை மாதாமாதம் கட்டிய தொகையிலிருந்து இரண்டு மூன்று மடங்காக பில் வந்திருக்கிறது. ( கிராமங்களில் இருப்பவர்களுக்கும்) அதற்கான காரணம் சொல்லப்படவில்லை. இதுபோன்ற காலகட்டங்களில் மக்களுக்கு சலுகையோடு செயல்பட வேண்டிய நிர்வாகம் இப்படி அதிகப்படியாக வசூலிக்க நினைப்பது கேள்வியை எழுப்புகிறது” என்று சொல்லியிருக்கும் அவர், ”வீட்டுக்கு வாடகையே கட்டமுடியாதவர்கள் எங்கிருந்து மின்சார கட்டணம் இரண்டு மூன்று மடங்காக கட்டமுடியும்?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
“இவர்களுக்கே இப்படி அதிர்ச்சி என்றால் வீட்டு வாடகையைச் செலுத்த முடியாத சாமான்ய மக்கள் என்ன செய்வார்கள்? இதை எப்படித் தாங்குவார்கள்? வெறும் 90 ரூபாய்க்குள் வரும் தாராசுரம் பாரதி மோகனுக்கு 350 ரூபாயும், 2 ஆயிரம் ரூபாய் அளவுக்கு வரும் சென்னை பெருங்குடி குடும்பத் தலைவி வீணாவுக்கு 8,500 ரூபாய் அளவிற்கும் மின்கட்டணம் வந்திருப்பது உதாரணச்சான்று.
திருச்சியைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் கவிஞருமான கவிசெல்வா “கரோனா தாக்கப்பட்டு வருமானம் இன்றி, அரசாங்க நிவாரண உதவிகளும் கிடைக்காமல் அன்றாடம் உயிர்ப்போராட்டம் நடத்திவரும் மக்களுக்கு, இந்த சோதனைக் காலத்தில் ஆறுதல் தரவேண்டிய அரசு, இப்படிப்பட்ட கூடுதல் மின்கட்டணச் சுமையைக் கண்டும் காணமல் கள்ள மெளனம் சாதிப்பது வேதனைக்குரியது. எங்களுக்கே ஏறத்தாழ மூன்று மடங்கு கட்டணம் வந்திருக்கிறது” என்கிறார் ஆதங்கமாய்.
பொதுவாக இரண்டு மாதங்களுக்கு ஒருமுறைதான் மின் கட்டணம் கணக்கிடப்படுகிறது. ஆனால் கரோனா பரவல் காரணமாக, பிப்ரவரி மார்சுக்குப் பிறகு, மின்வாரியம் இதுபோல் கணக்கெடுக்காமல், முதலில் ஏப்ரம், மே, ஜூன், ஜீலை ஆகிய 4 மாதத்திற்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக மின்சார ரீடிங்கை எடுத்தும், சில இடங்களில் ரீடிங்கே எடுக்காமல் தோராய முறையிலும் கணக்கிட்டு மின் கட்டணத்தை நிர்ணயித்திருக்கிறது. கரோனா நெருக்கடியால் பிப்ரவரி மார்ச் மாதங்களின் பில்லையே பலரும் கட்டமுடியாத நிலையில் இன்னும் தவித்துவரும் நிலையில், மொத்தமாக 6 மாதத்திற்கான மின்கட்டணத்தையும் முழுதாகக் கட்டுச் சொல்கிறது மின்வாரியம்.
அதிலும் மார்சுக்குப் பிறகான 4 மாத மின்கட்டணம் வழக்கத்தை விடவும் நான்கைந்து மடங்கு அதிகரித்திருப்பதாக மக்கள் மத்தியில் குமுறல் வெடித்திருக்கிறது. தற்போது மின் வாரிய கட்டணக் கவுண்ட்டர்கள் திறக்கப்படாத நிலையில் இருப்பதால், அங்கே முறையிடவும் முடியாமல், அடுத்து என்ன ஆகுமோ, மின்சார இணைப்பைத் துண்டித்து விடுவார்களோ? என்ற குழப்பத்திலும் அச்சத்திலும் மக்கள் பரிதவிக்கிறார்கள்.
இதற்கிடையே மின்கட்டணத்தை இரண்டு மாதத்திற்கு ஒரு முறை என்ற கணக்கீட்டின் அடிப்படையில் வசூலிக்க வேண்டும் என்று தேசிய மக்கள் கட்சித் தலைவர் எம்.எல்.ரவி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். அதேபோல், வழக்கறிஞர் ராஜசேகர் என்பவர், மின்கட்டணம் செலுத்துவதற்கான காலத்தை நீட்டிக்கவேண்டும் என்று நீதிமன்றம் சென்றிருக்கிறார். இவையெல்லாம், மக்களின் மின்கட்டணத் திணறலையே வெளிபப்டுத்துகிறது.
மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமோ நீதிமன்றத்தில் “மார்ச் மாதம் எடுக்கப்பட்ட கணக்கின்படி, மொத்தம் 1 கோடியே 35 லட்சத்து 13 ஆயிரத்து 545 நுகர்வோரில், 8 லட்சத்து 45 ஆயிரத்து 762 நுகர்வோர்கள் மட்டும், அதாவது சுமார் 6.25 சதவீதம் பேர் மட்டுமே, மின் கட்டணமாக ரூ.343.37 கோடி செலுத்தாமல் உள்ளனர். அதேபோல் மே மாதம் செலுத்த வேண்டிய மின் கட்டணத்தில் 12 லட்சத்து 94 ஆயிரத்து 904 பேர் மட்டுமே ரூ.287.94 கோடி செலுத்தவில்லை. ஜூன் மாதம் 18 லட்சத்து 44 ஆயிரத்து 128 பேர் சுமார் ரூ.478.36 கோடி ரூபாய் மின் கட்டணத்தை செலுத்தவில்லை” என்று தெரிவித்திருக்கிறது. இந்தப் புள்ளிவிரக் கணக்கே மக்களின் இயலாமையைத்தான் காட்டுகிறது. இதை உணர்ந்தாவது திணறுகிறவர்களை, அதிலிருந்து மீட்க உரியவர்கள் முன்வர வேண்டும்.
அதே சமயம், மின்கட்டணத்தை எப்படி எல்லாம் அதிகமாக நிர்ணயிக்கிறார்கள் என்பதை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவே தன் அறிக்கை மூலம் தெளிவாக விளக்கியிருக்கிறார். அதில் அவர், ” 100 யூனிட்டுக்குக் கீழே மின்சாரம் பயன்படுத்துவோருக்கு, கட்டண விலக்கு அளிக்கப்படுகின்றது. மின்சாரப் பயன்பாட்டை இரு மாதங்களுக்கு ஒருமுறை கணக்கிடும்போது, இரு மாதங்களுக்கான பயன்பாட்டு அளவைக் கணக்கிட்டு, அதை இரண்டால் வகுத்து, ஒவ்வொரு மாத பயன்பாட்டுக்காக வரையறுக்கப்பட்டுள்ள விகிதப்படி கட்டணம் வாங்க வேண்டும். ஆனால், இரண்டு மாதங்களுக்கும் சேர்த்துப் பயன்படுத்தப்பட்ட மொத்த மின் அளவீட்டைக் கணக்கிடுகின்றார்கள். எடுத்துக்காட்டாக, ஒரு வீட்டின் மாத மின்சாரப் பயன்பாடு 400 யூனிட் என்றால், 2 மாதங்களுக்கு 800 யூனிட் என குறிக்கப்படுகின்றது. இதை இரண்டால் வகுத்து 400 யூனிட் கட்டண விகிதங்களில், யூனிட்டுக்கு ரூ.3 என கட்டணம் பெற வேண்டும்.
ஆனால் மின் வாரியம், ஒட்டுமொத்தமாக 800 யூனிட் கட்டண விகிதப்படி, ஒரு யூனிட்டுக்கு ரூ.4.60 என்ற வீதத்தில் கட்டணம் வாங்குகின்றது. இதே போன்று 1,000 யூனிட் மின்சாரம் பயன்படுத்துவோருக்கு, அதை இரண்டு 500 யூனிட்டுகளாகப் பிரித்து, ஒரு யூனிட்டுக்கு ரூ. 4.50 கட்டணம் வசூலிக்க வேண்டும். ஆனால், ஒட்டுமொத்தமாக, 1,000 யூனிட்டுக்கு உண்டான கட்டண விகிதப்படி யூனிட் ஒன்றுக்கு ரூ.5.75 கட்டணம் வாங்குகின்றார்கள். இத்தகைய கணக்கீட்டு முறையில், மின் நுகர்வோர், 20 முதல் 30 விழுக்காடு வரை கூடுதலாக மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உருவாகின்றது” என்று தெளிவாகவே விவரித்திருத்திருக்கிறார்.
அவர் சொல்வது போல் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை ரீடிங் எடுத்தாலும், அதற்கு ஒவ்வொரு மாத ரீடிங்கின் அடிப்படையிலேயே கட்டண நிர்ணயம் செய்வதே நியாயமானதாக இருக்கும். இதை கொரோனா காலத்திற்கு மட்டுமாவது மின்வாரியம் கடைபிடிக்கவேண்டும் அல்லது எத்தனை யுனிட் மின்சாரத்தைப் பயன்படுத்தினாலும் சரி, யுனிட்டுக்கு ஒரு ரூபாய் அல்லது ஒன்றரை ரூபாய் என்று நிர்ணயம் செய்துவிட்டால், கட்டணக் குழப்பம் நீங்கும். மக்களும் கட்டணத்தின் நியாயத்தை உணர்ந்து நிம்மதிப் பெருமூச்சு விடுவார்கள். இல்லையெனில் பொதுமக்களின் மின்கட்டணச் சுமை மேலும் மேலும் அதிகரித்து அவர்கள் வாழ்வை அது நசுக்கிவிடும். எனவே, அரசும் நீதித்துறையும் நிலைமையை உணர்ந்து பொதுமக்களை மின்கட்டண அதிர்ச்சியில் இருந்து உடனடியாக மீட்க வேண்டும்.