சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய நடிகர் ராதாரவி தற்போதைய அரசியல் சூழ்நிலைகளை அவருக்கே உரிய பாணியில் கிண்டலடித்து பேசினார். அவரின் பேச்சு வருமாறு, "தமிழகத்திற்கு பல்வேறு நல்ல திட்டங்களை வகுத்து கொடுத்தவர் ஐயா மோடிஜி அவர்கள். அவருடைய பிறந்தநாள் இந்த 17ம் தேதி கொண்டாடப்பட்டது. அதே தினத்தில் பெரியார் பிறந்ததினம். என்ன செய்வது, ஒரு நல்லது பிறந்தால் ஒரு கெட்டதும் பிறக்கும். இதை சொன்னவுடன் பெரியாரை கெட்டது என்று சொல்கிறார் ராதாரவி என்பார்கள். அப்படி சொன்னால் தவறில்லை. மோடிஜி ஐயா தமிழகத்திற்கு செய்யும் நன்மைகளை பார்த்துத்து தான் நான் பாஜகவில் வந்து சேர்ந்தேன். எனக்கு தெரியும் அவர் மட்டும் தான் இந்தியாவை காப்பாற்ற முடியும் என்று. புதிய கல்விக்கொள்கையிலும் மூன்று மொழிகளை கொண்டுவந்தார். அதெல்லாம் மிக நல்லதொரு திட்டங்கள். தொடர்ந்து தமிழகத்துக்கு நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறார். இந்த திட்டங்களை எல்லாம் சிலர் தவறாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் படிக்காதவர்கள். அதனால்தான் அவர்கள் தொடர்ந்து எதிராக பேசி வருகிறார்கள். அதன் நன்மைகளை சொல்ல இங்கே யாரும் தயாராக இல்லை.
எனவே வரும் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சாப்பாடு போட்டுவிட்டு வாக்கு கேட்கிறேன் என்று யாரும் தவறாக நினைக்க தேவையில்லை. நான் தமிழகத்தின் கள எதார்த்தத்தை கூறினேன். எனவே பாஜகவை தவிர மற்றொரு கட்சிக்கு வாய்ப்பில்லை. மக்களின் ஏகோபித்த ஆதரவு வரும் தேர்தலில் பாஜகவுக்கு கிடைக்கும். மாணவர்கள், விவசாயிகள், தொழிலதிபர்கள் என அனைவரும் நம்பிக்கொண்டிருக்கும் ஒரே நபர் மோடிஜி ஆவர்கள்தான். இந்தியாவின் ஒரே நம்பிக்கையாக அவர் இருந்து கொண்டிருக்கிறார். நடிகர் ரஜினிகாந்த் கூட நல்லவர்கள் வர வேண்டும் என்று கூறி இருக்கிறார். அவர் மோடிஜியை நினைத்து கூறியிருப்பதாக கூட நான் நினைத்துக் கொள்கிறேன். ஒரு காலத்தில் திமுக ஆட்சி வருவதற்கு நடிகர் ரஜினிகாந்த் மிக முக்கிய காரணமாக இருந்துள்ளார்.
பல நல்லவர்கள் பாஜகவில் வந்து சேர்ந்து கொண்டு இருக்கிறார்கள். சகோதரர் அண்ணாமலை அவர்கள் எல்லாம் பாஜகவில் வந்து சேர்ந்துள்ளார். அவரெல்லாம் ஐபிஎஸ் படித்தவர். சினிமாவில் இருந்து கூட நிறைய பேர் பாஜகவில் வந்து சேர்கிறார்கள். என்னை ஒருவர் மோடிஜியை பார்த்துள்ளீர்களா என்று கேட்டார், நான் அவரிடம் கடவுளை பார்த்துள்ளீர்களா என்று கேட்டேன். அதை போலத்தான் மோடிஜி என்றேன். நான் பார்க்க வேண்டிய அவசியமில்லை. நாம் இயக்கத்தை மட்டும்தான் படித்துக்கொள்ள வேண்டும். இந்துக்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும். நான் கிறிஸ்துவர்களையோ, முஸ்ஸிம்களையோ பிரித்து சொல்லவில்லை. இந்தியர்களாக இருக்க கூடிய அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்றுதான் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன். சிலர் பிரிவினையை பற்றி எல்லாம் பேசுகிறார்கள். தமிழகத்தை பிரிக்க வேண்டும் என்று, மூன்று மாநிலங்களிலிருந்து நமக்கு தண்ணீர் வருகின்றது, எனவே விவரம் தெரியாமல் பேசக்கூடாது, பிறகு கழுவ கூட நமக்கு தண்ணீர் இருக்காது. எனவே பாஜக செல்லும் பாதையில் நாம் பயணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.