Skip to main content

"எங்கள் நாட்டை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்" - பாகிஸ்தான் உதவியை மறுத்த முஸ்லீம் லீக் தலைவர் 

Published on 05/06/2018 | Edited on 06/06/2018

05 ஜூன் - காயிதே மில்லத் பிறந்தநாள்

 

quaid milleth

 

"நான் ஒரு இசுலாமியன், ஆனால் என் தாய் மொழி தமிழ்" என்று உரக்கச் சொன்னவர் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் முதல் தலைவர் முஹம்மது இசுமாயில். இசுமாயில் என்பது அவர் பெயர். ஆனால் தமிழக மற்றும் கேரள மக்களால் அவர் அழைக்கப்பட்ட  பெயர் காயிதே மில்லத், கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத். இசுமாயில், தான் சார்ந்த மதத்திற்கு மட்டும் கண்ணியமாக  இருக்கவில்லை. தனது தேசமாக அவர் எண்ணிய இந்தியாவுக்கும் கண்ணியமாக இருந்தார். அவரது தாய் மொழியான தமிழுக்கும்தான். 1949ஆம் ஆண்டு இந்திய தேசிய அரசியலமைப்பு நிர்ணய கூட்டத்தில் தமிழகம் சார்பாக கலந்துகொண்டிருந்தார் இசுமாயில் (அ) காயிதே மில்லத். அப்போது ஹிந்தியை தேசிய மொழியாக்க வேண்டும் என்று வட இந்தியர்கள் கோரிக்கை வைத்தனர். நிர்ணய கூட்டத்திலிருந்த இவர், "ஒரு மொழி இந்திய மொழியாக இருந்தால் மட்டும் போதாது அம்மொழி நாட்டின் பழைமையான மொழியாகவும் இருக்க வேண்டும் அத்தகைய மொழியையே தேசிய மொழியாக்க வேண்டும்" என்ற கருத்தை முன் வைத்தார். அதனைத்தொடர்ந்து, "இந்த நாட்டில் பழமையும் உறுதியும் கொண்ட ஒரே மொழி தமிழ்தான். அது எனது தாய்மொழியும் கூட , நீங்கள் எந்த ஒரு வரலாற்று ஆய்வாளரிடமும் இந்தக் கூற்றை விவாதித்துப் பாருங்கள், நான் சொன்னதுதான் நிஜம் என்று ஹிந்தி திணிப்பை எதிர்த்து தமிழ் மொழி தேசியமொழியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து முதன் முதலில் பிள்ளையார் சுழி போட்டவர் இவர்தான். 

 

liaqueth

லியாகத் அலிகான்



காயிதே மில்லத் திருநெல்வேலி மாவட்டம் பேட்டையில் 1896ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5ஆம் தேதி பிறந்தார். 7 வயதிலேயே தனது தந்தையை இழந்தவர். முழுக்க முழுக்க தன் தாயின் அரவணைப்பில் வளர்க்கப்பட்டார். சிறு வயதிலிருந்தே தொழிலிலும், அரசியலிலும் ஆர்வம் மிக்கவராக இருந்தவர். மெட்ராஸ் கிறித்துவ கல்லூரியில் காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தின் கோரிக்கையை ஏற்று  இளநிலை பட்டத்திற்கான தேர்வை எழுதாமல் வெளியேறியவர்.

 

 


இதற்கு பின்னர் முஹமத் ஜின்னாவுடன் இணைந்து அகில இந்திய முஸ்லீம் லீக்கில் சேர்ந்து, அதன் மெட்ராஸ் தலைவராகினார். இந்திய பாகிஸ்தான் பிரிவினை, அகில இந்திய முஸ்லீம் லீக் கட்சிக்குள்ளும் பிரிவினையை ஏற்படுத்தியது. பாகிஸ்தான் வேண்டும் என்று ஒரு பிரிவினர் சொல்ல, மற்றொரு பிரிவினர் எங்களுக்கு இந்தியாதான் வேண்டும், இதுதான் எங்கள் நாடு என்றனர். அதில் இசுமாயிலும் ஒருவர். என்னதான் முஸ்லீம் லீக் கட்சியில் இருந்தாலும் தொடக்கத்திலிருந்து காந்தியால் அதிகம் ஈர்க்கப்பட்டவர். தேசம் என்று வந்துவிட்டால் மதசார்பற்ற கொள்கையை உயர்த்திப்பிடிப்பவராக இருந்தார். 

 

 

with jinna

ஜின்னா


 
1947ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி அகில இந்திய முஸ்லீம் லீக்கின் கடைசி மாநாடு நடைபெற்றது. அப்போது பாகிஸ்தான், இந்தியா என்று இரு நாடுகளாக பிரிந்துவிட்டது. ஆதலால், முஸ்லீம் லீக்கை சேர்ந்தவர்களுக்குள்ளும் பிரிவினை என்பது வந்தது, அகில இந்திய முஸ்லீம் லீக் கட்சியை உடைத்து இந்திய யூனியன் மற்றும் பாகிஸ்தான் யூனியன் முஸ்லீம் லீக் என்று பிரித்தனர். அந்த மாநாட்டில் பாகிஸ்தானை சேர்ந்த முதல் பிரதமர் லியாகத் அலிகான் பாகிஸ்தான் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

 


இந்திய நாட்டின் முஸ்லீக் லீக் கட்சியின் தலைவராக காயிதே மில்லத் தேர்வு செய்யப்பட்டார். அப்போது பாகிஸ்தானைச் சேர்ந்த லியாகத் அலிகான் மேடையில் இசுமாயிலைப் பார்த்து "உங்களுக்கு ஏதேனும் உதவி என்றால் எப்போது வேண்டுமானாலும் கேளுங்கள், பாகிஸ்தான் உங்களுக்கு எப்போதும் ஆதரவு தரும்" என்றார். அதற்கு பதிலாக இசுமாயில், "எங்கள் நாட்டு பிரச்சனையை நாங்களே தீர்த்துக்கொள்வோம், உங்களுடைய உதவி தேவை இல்லை. நீங்கள் எங்களுக்கு ஏதேனும் நல்லது செய்வதாக இருந்தால் பாகிஸ்தானில் இருக்கும் ஹிந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்துவர்களின் நலனை பாதுகாக்க முயலுங்கள்" என்று சிறிதும் அஞ்சாமல் கராச்சியில் நடந்த அந்த மாநாட்டில் தெரிவித்துள்ளார். இதுபோன்று அவர் நாட்டுக்காகவும், தமிழக மக்களுக்காகவும் தன் வாழ்நாள் இறுதிவரை கண்ணியமான அரசியல்வாதியாக, தேச தலைவராக விளங்கினார் காயிதே மில்லத்.