புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகின்றனர் முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான ரெங்கசாமி உள்ளிட்ட எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்கள். இதற்கான கடிதத்தை சட்டப்பேரவை செயலாளரிடம் கொடுத்தார் ரெங்கசாமி. இதனால், கர்நாடகா பாணியில் ஆட்சி மாற்றம் நடக்குமோ என்கிற பரபரப்பு புதுவை அரசியலில் எதிரொலிக்கிறது.
புதுவையில் காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சி கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வருகிறது. நாராயணசாமி முதல்வராக இருந்து வருகிறார். சபாநாயகராக இருந்த வைத்திலிங்கம் சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனையடுத்து தனது சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார்.
புதிய சபாநாயகராக போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார் சிவக்கொழுந்து.
இந்த நிலையில், சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது தொடங்க உள்ள நிலையில் சபாநாயகர் சிவக்கொழுந்துவிற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கான கடிதத்தை எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி, சட்டப்பேரவை அதிமுக தலைவர் அன்பழகன் உள்பட என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் கையொப்பமிட்டு சட்டப்பேரவைச் செயலர் வின்சென்ட் ராயரிடம் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து பத்திரிகையாளர்களிடம் பேசிய என்.ஆர். ரங்கசாமி, "காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சிகளில் சபாநாயகர் சிவக்கொழுந்து தொடர்ந்து பங்கேற்று வருகிறார். நடுநிலையாக செயல்பட வேண்டிய சபாநாயகர், காங்கிரசின் உறுப்பினராக நடந்துகொள்வதால் சட்டசபையை நடுநிலையாக நடத்தமாட்டார். அதனால்தான் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருகிறோம்" எனத் தெரிவித்தார்.
சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்திருப்பது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சமீபத்தில் கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சியை கவிழ்த்து எடியூரப்பா அரசை கொண்டு வந்தது மத்திய பாஜக அரசு. அதே பாணியில், நாராயணசாமி ஆட்சியை கவிழ்த்து தங்களது ஆதரவாளரான ரெங்கசாமியை முதல்வராக்க பாஜக தலைமை திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.