அண்ணாமலையின் பாதயாத்திரை குறித்த தன்னுடைய கருத்துக்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் புதுமடம் ஹலீம்.
“பாஜக நடத்திய வேல் யாத்திரை என்பது எவ்வளவு காமெடியாக இருந்தது என்பதை அனைவரும் பார்த்தோம். வேல் யாத்திரையால் தான் 4 தொகுதிகளில் வென்றது போல் எல்.முருகன் பேசியுள்ளார். ஆனால் அந்த தேர்தலில் அவரும் தோற்றார், அண்ணாமலையும் தோற்றார். பாரதத் தாய்க்கு இவர்கள் கொடுத்த மரியாதையை நாம் மணிப்பூரில் பார்த்தோம். இப்போது அவர்கள் மதவாத அரசியலைத் தாண்டி, மொழி அரசியலைக் கையில் எடுத்துள்ளனர். தமிழ் மொழிக்கு இவர்கள் தான் நிறைய செய்தது போல் பேசுகின்றனர்.
திருக்குறளை இவர்கள் தான் உலகெங்கும் கொண்டுபோய் சேர்த்தது போல் பொய் சொல்கின்றனர். திருக்குறள் உலகளவில் பேசப்படும் நூலாக எப்போதுமே இருந்திருக்கிறது. முதலில் மோடியும் அமித்ஷாவும் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழுக்கு இவர்கள் ஒதுக்கிய நிதி என்பது சில கோடிகள் தான். இந்தியில் இன்றுவரை திருக்குறள் மொழிபெயர்க்கப்படவில்லை. தமிழ்நாட்டில் இவர்களால் திராவிட அரசியல் பேச முடியாது, மத அரசியல் செல்லுபடியாகவில்லை. அதனால் தான் மொழி அரசியல் பேசுகின்றனர்.
தமிழ் மொழிக்கு உண்மையிலேயே யார் அதிகம் செய்தது என்பது தமிழ் மக்களுக்குத் தெரியும். அண்ணாமலை யாத்திரை செல்லும் கேரவன் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் போல் இருக்கிறது. ராகுல் காந்தி பயன்படுத்திய கேரவன் சாதாரணமான ஒன்றாக இருந்தது. வாரிசு அரசியல் குறித்து அமித்ஷா இங்கு பேசுகிறார். பாஜகவில் பல வாரிசுகள் பல்வேறு பதவிகளில் இருக்கின்றனர். அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருக்கிறார். அவர் எப்போதாவது கிரிக்கெட் விளையாடியிருக்கிறாரா? அவருக்கும் கிரிக்கெட்டுக்கும் என்ன சம்பந்தம்?
அண்ணாமலையின் யாத்திரை தொடக்க விழாவில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளவில்லை. அன்புமணி கலந்துகொள்ளவில்லை. எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் திட்டங்களை அண்ணாமலை கொண்டுபோய் சேர்ப்பார் என்று அமித்ஷா பேசுகிறார். இதைக் கேட்டுக்கொண்டு ஆர்.பி.உதயகுமார் வெட்கமில்லாமல் அங்கு உட்கார்ந்திருந்தார். இது அதிமுக தொண்டர்களை அவமானப்படுத்தும் செயல். மணிப்பூர் விவகாரம் இன்று சர்வதேச அளவில் சந்தி சிரித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் இவர்கள் இங்கு சட்ட ஒழுங்கு பற்றி பேசுகின்றனர். இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?
செந்தில் பாலாஜி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் நடந்த விஷயத்துக்காகத் தான். குற்றமே நிரூபிக்கப்படாத நிலையில், செந்தில் பாலாஜி குற்றவாளி என்று அமித்ஷா பேசுவது எந்த விதத்தில் சரி? ஒரு நாளைக்கு வெறும் ஐந்து கிலோமீட்டர்கள் நடப்பதும், ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுவதற்கும் பெயர் யாத்திரையா? சாதாரண மனிதர்கள் கூட தினமும் இதைவிட அதிகம் நடக்கின்றனர். ராகுல் காந்தி நடத்தியது தான் உண்மையான யாத்திரை. அண்ணாமலை செய்வது ஒரு அரசியல் ஸ்டண்ட். தமிழ் மக்களிடம் இது எடுபடாது” என்றார்.