உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 33 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 1,000 க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 35,000 க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 3- ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் நாட்டில் உள்ள பல தொழில்கள் முடக்கப்பட்டுள்ளன. பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. அங்கு வேலை செய்து வரும் தொழிலாளர்கள் உணவுக்காகக் கூட தவிக்கும் சூழ்நிலைகள் நிலவி வருகின்றது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து புலம்பெயர்ந்த மாநிலங்களில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்தந்த மாநில அரசுகளை உணவுக்காகச் சார்ந்து வாழும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். இந்தக் கரோனா தொற்றில் பல தொழில்கள் முடங்கி இருந்தாலும், சில தொழில்கள் எவ்வித மாறுதலுக்கும் உள்ளாகாமல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் ஆன்லைன் மீடியாக்கள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்கள் தொடர்ந்து இயங்கி கொண்டு இருக்கின்றது. இரவு பகலாக கரோனா குறித்த தகவல்களை இந்த மீடியாக்கள் செய்திகளாக மக்களிடம் கொண்டு சேர்க்கின்றன. இதன் மூலம் குறிப்பிட்ட அளவிலான வருவாயையும் அந்த நிறுவனங்கள் பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.
அந்த வகையில் இவ்வளவு காலம் நல்ல முறையில் இயங்கிக் கொண்டிருந்த பிரிண்ட் மீடியாக்கள் இந்தக் கரோனாவால் பாதாளத்தில் விழுந்துள்ளது என்றால் அது மிகையல்ல. போதிய வாசகர்கள் இல்லாததால் பல பிரிண்ட் செய்தித் தாள்கள் பிரிண்ட் செய்வதையே நிறுத்திவிட்டன. இயங்கும் சில நிறுவனங்களும் போதிய விற்பனை இன்றி விரைவில் மூடப்படும் நிலையில் இருக்கின்றது. வாகனப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டதால் இந்தப் பிரிண்ட் மீடியாக்கள் செயல்படுவதற்கு மிக முக்கியத் தடையாக இருக்கின்றது. போக்குவரத்து வசதி இல்லாததால் எங்கெங்கு பிரிண்ட் இயந்திரங்கள் இருக்கின்றதோ அங்கேயே சில நாளிதழ்கள் பிரிண்ட் செய்துகொள்கின்றன. அவ்வாறு பிரிண்ட் செய்யப்படும் நாளிதழ்களைக் கூட மாவட்டம் முழுவதும் கொண்டு சேர்க்க முடியவில்லை. அந்த வகையில் இதுவரை இந்தியா முழுவதும் பிரிண்ட் மீடியாக்கள் 15,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் இருந்து அந்நிறுவனங்கள் மீண்டு வர அரசாங்கத்தின் உதவி என்பது இன்றியமையாத ஒன்றாக இருக்கின்றது.