Skip to main content

'பாசிட்டிவ் வைப்ரேஷன்; தொடர் முயற்சி இருந்தால் சாதிக்கலாம்...' அரசுப் பள்ளியில் படித்து குரூப் 1 தேர்ச்சியான கிராமத்து பெண் பவானியா

Published on 02/08/2022 | Edited on 02/08/2022

 

'Positive Vibration; If you keep trying, you can achieve it...' Bhavaniya, a village girl who studied in government school and passed Group 1

 

 

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ளது வேப்பங்குடி ஊராட்சி கிழக்கு செட்டியாப்பட்டி கிராமம். பேருந்து பயணம் செய்ய 5 கி.மீ தூரம் செல்ல வேண்டும். பல வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட கிராமத்து ரோடு ஜல்லி கற்கள் உடைந்து  நடக்க கூட முடியாத நிலை. அந்த கிராமத்தை சேர்ந்த டீ கடை நடத்தும் வீரமுத்து - வீரம்மாளின் 3 வது மகள் பவனியா தான் தற்போது குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்று டிஎஸ்பி யாக உள்ளார்.

 

கரடுமுரடான பயணங்களுக்கு பிறகு பவானியாவை அவரது வீட்டில் சந்திக்கச் சென்றோம். முதலில் குடிக்கத் தண்ணீரும் இனிப்பும் கொடுத்து கிராமத்திற்கே உரித்தான வரவேற்பு கொடுத்த பிறகு நம்முடன் பேசினார். அடிப்படை வசதியில்லாத கிழக்கு செட்டியாப்பட்டி என்கிற சாதாரண கிராமத்தில் 3 வதாக பிறந்த எனக்கு கிராம மக்களின் வாழ்க்கையை பார்க்கும்போது நாமும் மாவட்ட ஆட்சியராக வரவேண்டும் என்ற எண்ணம் எனக்குள் சின்ன வயதில் இருந்தே இருந்தது. உள்ளூர் அரசுப் பள்ளியில் தொடக்க கல்வியும் 5 கி மீ தூரத்தில் உள்ள ஏ.மாத்தூர் அரசு பள்ளியில் மேல்நிலை கல்வியும் படித்தேன். ஒரு பள்ளி நிகழ்ச்சியில் நந்தகுமார் ஐஆர்எஸ் பேசும் போது முயன்றால் எதையும் சாதிக்கலாம் என்ற அவரது பேச்சு எனக்கு மேலும் ஆசையை தூண்டியது.

 

அதன் பிறகு 4 கி.மீ சைக்கிளில் போய் பஸ் ஸ்டாண்ட்ல சைக்கிளை போட்டுட்டு பஸ் ஏறி புதுக்கோட்டை மகளிர் கலைக் கல்லூரிக்கு போய் பிஎஸ்சி மேக்ஸ் படிச்சேன். அப்ப ஒரு நிகழ்ச்சியில் சப் கலெக்டர் சரவு ஐஏஎஸ் வந்து பேசுனாங்க. பெண்கள் தான் தற்கொலை முடிவுக்கு போறாங்க. அதை நீங்கள் மாற்றனும் என்று பேசினார். எனக்கு அவங்க  பேச்சு ரொம்ப ஆழமா பதிஞ்சது. அப்ப யுபிஎஸ்சி தேர்வுக்கான பயிற்சிக்கான மாணவர் தேர்வு நடந்தது. அதில் என்னை சேர்க்கல. 2019 ல் பிஎஸ்சி முடிக்கும் போது குரூப் 1 தேர்வு அறிவிப்பு வந்தது. உடனே விண்ணப்பிச்சுட்டு சுற்றியுள்ள மாணவர்களிடம் பழைய புத்தகங்களை வாங்கி படிச்சேன். +1, +2 புத்தகம் கிடைக்கல ஆனால் நான் +2 படிக்கும் போது கொடுத்த அரசு லேப்டாப்பில் ஏற்றிக் கொடுத்திருந்த புத்தகங்களை படிச்சு தேர்வு எழுதினேன். முதல் தேர்விலேயே தேர்ச்சி பெற்றேன். ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.

 

ஆனால் அடுத்து உள்ள மெயின் எக்ஸாம்க்கு படிக்க புத்தகமும் இல்லை, வசதியும் இல்லை என்ற போதுதான் புதுக்கோட்டை பொதுப்பணித்துறை ஏ.டி சுந்தராசு சார் தகவல் தெரிஞ்சு என்னை பார்த்து விபரம் கேட்டவர் உடனே புத்தகங்களை வாங்கி கொடுத்து சென்னை மனிதநேய பயிற்சி மையத்திற்கு அனுப்பினார். நேரடி பயிற்சியின் போது கரோனா வந்துவிட்டது. பிறகு வீட்டிலிருந்து ஆன்லைன் வகுப்பில் படிச்சதோட நிறைய தேடி குறிப்புகள் எழுதி படிச்சேன். இப்ப மெயின்லயும் தேர்ச்சி பெற்று கொஞ்சம் மார்க் குறைஞ்சதால டிஎஸ்பி கிடைத்திருக்கிறது. இதைப் பார்த்து குடும்பத்தினர் மட்டுமல்லாமல் ஊரே என்னை கொண்டாடுறாங்க.

 

ஆனால் எனது இலக்கை இன்னும் நான் எட்டவில்லை. ஐஏஎஸ் தான் என் இலக்கு. அதனை எட்ட வேண்டும். அதற்காக மறுபடி படிக்க தொடங்கி இருக்கிறேன் என்றவர். இப்ப இளைஞர்கள், மாணவர்கள் தொட்டதற்கெல்லாம் தற்கொலை எண்ணங்களில் உள்ளனர். அதை மாற்ற வேண்டும். எதையும் பாசிட்டிவாக அணுக வேண்டும். அப்ப தான் நினைத்ததை சாதிக்க முடியும். நம்மால் முடியாதது எதுவுமில்லை. அப்புறம் மாணவர்கள் இளைஞர்களுக்கு செல்போன் மோகத்தால் விளையாட்டு, நண்பர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது. தனிமையில் இருந்து செல்போன்களையே பார்ப்பதால் தான் இது போன்ற தவறான முடிவுகளுக்கும் போறாங்க. அந்த எண்ணங்களை மாற்ற நிறைய படிக்கலாம், நண்பர்களுடன் விளையாடலாம்'' என்றார்.

 

ஒரு கிராமத்து பெண்ணின் சாதனையை நாமும் பாராட்டியதோடு அடுத்த இலக்கை அடைய வாழ்த்து கூறினோம்.

 

Next Story

வாழைமரம் தோரணங்களோடு தயாரான மாதிரி வாக்குப் பதிவு மையம்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Voting registration center ready with banana trees

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி(நாளை) தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்புரை பரபரப்புகள் அடங்கியுள்ள நிலையில் ஆங்காங்கே வாக்குச் சாவடிகள் தயாராகிவிட்டது. மாதிரி வாக்குச் சாவடி என்று ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் சில வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

Voting registration center ready with banana trees

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் ஒரு வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து மாதிரி வாக்குச் சாவடியாக அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப் சாவடிக்கு முன்பு வாழை மரம், தோரணங்கள் கட்டி வாசலில் வண்ணக் கோலமிட்டு பூ, பழம் தாம்பூலம் தட்டுடன் இனிப்பு வழங்கி வாக்குப் பதிவுக்கு வரும் வாக்காளர்களை வரவேற்று வாக்குப் பதிவுக்கு அனுப்பும் வண்ணம், வாக்குப் பதிவு மையத்திற்குள் விழா கூடம் போல அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்பாடுகளை கீரமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் செய்துள்ளனர்.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.