சத்தியமூர்த்தி, அபினங், திரிபாதி
மூச்சுத்திணறலாலும், நெஞ்சுவலியாலும் நீதிமன்றக் காவலில் அப்பாவும், மகனும் இறந்தனர் என சாத்தான்குளம் காவல் நிலைய படுகொலை குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை கடும் விமர்சனத்தை எதிர் கொண்டது. தன்னை சந்தித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம், "உள்துறை கொடுத்ததைத்தானே நான் சொன்னேன்' என வருத்தப்பட்டிருக்கிறார் முதல்வர்.
சாத்தான்குளம் சம்பவம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அரசுக்கு எதிரான விமர்சனங்களை கொண்டு வருவதால், காவல்துறையில் பெரிய மாற்றம் கொண்டுவர வேண்டும் என முதல்வருக்கு ஆலோசகராக இருக்கக்கூடிய உளவுத்துறையின் முன்னாள் ஐ.ஜி. சத்தியமூர்த்தி தெரிவித்திருக்கிறார். அதற்கு முதல்வர், முதலில் அங்கு என்ன நடந்தது என அறிக்கை தருமாறு சத்தியமூர்த்தி மூலம் காவல்துறை டிஜிபிக்கு உத்தரவிட்டார். காவல்துறை ஒரு அறிக்கையை முதல்வருக்கு கொடுத்தது.
அதில், சம்பவம் நடப்பதற்கு முதல் நாள், பென்னிக்ஸ் செல்போன் கடையை மூடாமல் வைத்திருந்தார். அங்கு சென்ற காவல்துறையினர் கடையை மூடும்படி சத்தம் போட்டார்கள். அவர்கள் சென்ற பிறகு காவல்துறையினரை பற்றி பென்னிக்ஸ் கேவலமாக திட்டியுள்ளார். அந்த முன் விரோதத்தினால் ஜெயராஜை அழைத்துச் சென்ற போலீசார், அவரை ஜட்டியுடன் லாக்கப்பில் வைத்து அடித்துள்ளனர். இதைப் பார்த்த பென்னிக்ஸ் காவல்துறையினருடன் தகராறு செய்துள்ளார், அதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அதனால் பென்னிக்ஸ்ஸையும் அடிக்கச் சொல்லி ஆய்வாளர் உத்தரவிட இரவு முழுவதும் அடித்துள்ளனர். அதன்பிறகு நீதிபதியிடம் ஆஜர்படுத்திவிட்டு பாளையங்கோட்டை சிறைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறை நிரம்பி வழிகிறது என இவர்களை சேர்க்க மறுக்கவே கோவில்பட்டிக்கு அழைத்துச் சென்றனர்.
போலீசார் மிருகத்தனமாக தாக்கியதில் பென்னிக்ஸ்தான் அதிகம் பாதிக்கப்பட்டார். அவருக்கு மலம் கழிப்பதில் கோளாறு ஏற்பட்டு, சிரமப்பட்டார். அதன்பிறகு கோவில்பட்டி மருத்துவமனைக்கு சிறையில் இருந்து கொண்டு சென்றபோது, பென்னிக்ஸ் முதலில் இறந்துவிட, அந்த அதிர்ச்சியில் அவரது தந்தை ஜெயராஜ் இறந்துவிட்டார் என ரிப்போர்ட் கொடுத்தனர். இதனால் எடப்பாடி பழனிசாமி பதற்றமானார்.
காவல்துறையில் மாற்றங்கள் உடனே செய்ய வேண்டும் என டி.ஜி.பி.யும், ஐ.ஜி. சத்தியமூர்த்தியும் முதல்வரும் ஆலோசனை செய்தனர். அதன்படி முதலில் தூத்துக்குடி எஸ்.பி.யான அருண்பாலகோபாலனை மாற்றி, விழுப்புரம் எஸ்.பி. ஜெயக்குமாரை கொண்டு வந்தனர். அதன்பிறகு சண்முக ராஜேஸ்வரன் ஓய்வு பெற்றதால் அந்த பதவிக்கு தென்மண்டல ஐ.ஜி.யாக முருகன் நியமிக்கப்பட்டார்.
இந்த மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கும்போதே கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசனை அவமரியாதை செய்ததாக அவர் கொடுத்த புகாரின்படி, தூத்துக்குடி ஏ.எஸ்.பி. மற்றும் டி.எஸ்.பி. மற்றும் ஒரு காவலர் மாற்றப்பட்டனர், இந்த சம்பவம் பேரலையாக எழுந்தது. நடிகர் ரஜினிகாந்த் உள்பட பலர் வெளிப்படையாக, ஒரு மாஜிஸ்திரேட்டை காவல்துறையினர் அவமானப்படுத்தியதை கண்டித்தனர். அப்போதுதான், ஒட்டுமொத்தமாக காவல்துறையில் ஒரு பெரிய மாற்றம் கொண்டுவர வேண்டும் என ஏற்கனவே திட்டமிட்டிருந்ததை உடனடியாக செய்ய வேண்டும் என பழனிசாமி முடிவு செய்தார்.
யாரையெல்லாம் மாற்ற வேண்டும் என டி.ஜி.பி. திரிபாதியிடமும், சத்தியமூர்த்தியிடமும் லிஸ்ட் கேட்டார். அதன்படி சென்னை மாநகர கமிஷனராக இருந்த ஏ.கே.விஸ்வநாதன், மதுரை போலீஸ் கமிஷனராக இருந்த டேவிட்சன் ஆசிர்வாதம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு ஏ.டி.ஜி.பி. ரவி, திருச்சி போலீஸ் கமிஷனராக இருந்த அமல்ராஜ், உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு ஐ.ஜி.யாக இருந்த டாக்டர் கண்ணன் ஆகியோர் உள்பட 37 அதிகாரிகளுக்கு மாறுதல் தருவதற்கு ஒரு லிஸ்டை கொடுத்தனர்.
சென்னை நகர கமிஷனராக மகேஷ்குமார் அகர்வாலை நியமிக்கலாம் என டிஜிபி திரிபாதி பரிந்துரை செய்தார். அதேபோல் மதுரை நகர கமிஷனராக பிரேமானந்த் சின்ஹாவை நியமிக்கலாம் என டி.ஜி.பி. பரிந்துரை செய்தார். சென்னை நகர கமிஷனராக இருந்த ஏ.கே. விஸ்வநாதனுக்கும், டிஜிபிக்கும் ஏழாம் பொருத்தம். அதனால் டி.ஜி.பி. கலந்துகொள்ளும் பல கூட்டங்களை ஏ.கே. விஸ்வநாதன் புறக்கணித்தார். விஸ்வநாதனுக்கு பதிலாக அந்த கூட்டத்தில் பங்கெடுக்கும் கூடுதல் கமிஷனர்களிடம் டி.ஜி.பி. திரிபாதி தொடர்ந்து தனது விஸ்வநாதனுக்கு எதிரான எரிச்சலை வெளிப்படுத்தி வந்தார். அதனால் டிஜிபியிடம் நல்ல பெயர் பெற்ற நேர்மையான அதிகாரியான வட இந்தியர் மகேஷ்குமார் அகர்வாலை சென்னை கமிஷனர் பதவிக்கு டிஜிபி பரிந்துரைத்தார்.
அதேபோல் தென்சென்னை கூடுதல் ஆணையராக சிறப்பாக செயல்பட்ட பிரேமானந்த சின்ஹாவை மதுரையில் டேவிட்சன் ஆசிர்வாதத்திற்கு பதிலாக நியமித்தார். பிரேமானந்த் சின்ஹாவின் இடத்திற்கு சென்னை நகர போக்குவரத்து துறையில் நன்றாக செயல்பட்ட அருணை, தென்சென்னை போலீஸ் கமிஷனராக டிஜிபி பரிந்துரைத்தார்.
சாத்தான்குளம் சம்பவத்தில் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி., ஏ.எஸ்.பி. ஆகியோர் மாற்றப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் நேரடி தொடர் புடைய பிரவின் குமார் அபினவ் என்கிற நெல்லை சரக டிஐஜி மாற்றப்படவில்லை. பிரவின் குமார் அபினவ், ஒருவிதமான முரட்டு சுபாவம் கொண்டவர். அவர் நெல்லை மற்றும் தூத்துக்குடி பகுதியில் எடுத்தேன், கவிழ்த்தேன் என சட்டம் ஒழுங்கு பிரச்சனையை கையாளுவார். தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையை சார்ந்தவர்கள் எதற்கெடுத்தாலும் அடி, உதை என இறங்குவதை ஆதரிப்பார். தூத்துக்குடியில் ஜெப கூட்டம் நடத்தியவர்கள், இதே சாத்தான்குளம் காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டார்கள்.
இதுபற்றி புகார்கள் எழுந்தபோதும் அதை அபினவ் பொருட்படுத்தவில்லை. மாறாக இதுபோன்று புகார்கள் வரும்போது அடாவடி காவல்துறையினரை வெளிப்படையாகவே ஆதரித்தார். அவர் ஒருவித இந்து ஆதரவு செயல்பாடுகளை கொண்டிருந்தார் என்கிற விமர்சனமும் எழுந்திருக்கிறது. இதைப்பற்றி உயர்அதிகாரிகள் கேட்டால் அதையும் தட்டிக்கழித்துவிடுவார். அபிநவின் இந்த போக்குத்தான் சாத்தான்குளம் சம்பவத்திற்கு காரணமாக அமைந்தது. அங்கு எஸ்பியாக இருந்தவர், டிஐஜி.யின் சொல்கேட்கும் பிள்ளையாகத்தான் இருந்தார். இவ்வளவு பிரச்சனைகளுக்குப் பிறகும் நெல்லை சரக டிஜஜியாக இருக்கும் அபிநவ்வை மாற்றாததற்கு காரணம் டி.ஜி.பி. திரிபாதிக்கும் நெருக்கமானவர் என்கிறார்கள் காவல்துறை அதிகாரிகள்.
தமிழகம் முழுவதும் 37 காவல்துறை அதிகாரிகளை மாற்றிய முதல்வர், சாத்தான் குளத்தில் நடந்த படுகொலைகள் பற்றி தவறான ரிப்போர்ட் கொடுத்த நெல்லை சரக டி.ஐ.ஜி. அபினவையும், அபினவ் கொடுத்த ரிப்போர்ட்டை முதல்வரிடம் கொடுத்த டி.ஜி.பி. திரிபாதியையும் மாற்றியிருந்தால் காவல்துறை நன்றாக செயல்பட உதவியாக இருந்திருக்கும் என்கிறார்கள் நேர்மையான காவல் அதிகாரிகள்.